தாலிபான் ஆட்சியில் பெண்களின் கல்விக்கு தடை வருமா?

  • 6

தாலிபான் ஆட்சி என்றால் அனைவருக்கும் எழும் எண்ணம்தான் பெண்களுக்கான சம உரிமை காணப்படாது, பெண்களுக்கு எதிராக அடக்கு முறைகள் காணப்படும் மற்றும் யுத்த களமாக அந்த பூமி காணப்படும் என்பதாகும். ஆனால் தாலிபான் செய்தித் தொடர்பாளருடன் பி.பி.சி மேற்கொண்ட ​நேர்காணலில் அவர் வழங்கிய பதில்களோ அவர்களின் அமைப்பின் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை எடுத்துக்காட்டுகிறது.

தாலிபன் போராளிகள் கடந்த சில வாரங்களாகவே தலைநகர் காபூலை நோக்கி முன்னேறிச் சென்று கொண்டிருக்க ​​ஆப்கானிஸ்தானில் இருக்கும் பெண்களின் கவலையும் அதிகரித்திருக்கிறது. ஆப்கானிஸ்தானில் வாழும் பெண்கள் மீது தாலிபன் ஆட்சியின் தாக்கம் குறித்து சர்வதேச அளவில் கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன.

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் முதல் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வரை, பெண்களின் நிலை குறித்த தங்களின் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

“ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் மோதல் ஆயிரக்கணக்கான மக்களுக்குக் கடுமையான மனித உரிமை மீறல் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது, அம்மக்களை தப்பி ஓடத் தூண்டுகிறது. அனைத்து வகையான சித்திரவதைகளும் நிறுத்தப்பட வேண்டும் பெண்கள் மற்றும் சிறுமிகள் விஷயத்தில் கடின உழைப்பால் பெறப்பட்ட வெற்றி பாதுகாக்கப்பட வேண்டும்.” என தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் ஐநா பொதுச் செயலாளர் குட்டெரெஸ்.

இதற்கிடையில்,

தங்கள் ஆட்சியில் பெண்களின் வாழ்க்கை குறித்து உலகத் தலைவர்கள், நிபுணர்கள் மற்றும் பிரபலங்கள் எழுப்பிய கவலைகள் குறித்துத் தன்னிலை விளக்கம் அளித்தார் தாலிபன் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன்.

தாலிபன் செய்தித் தொடர்பாளர் பிபிசிக்கு அளித்த பேட்டியில், அமையவுள்ள புதிய அரசின் கீழ், பெண்களுக்கு வேலை செய்யவும் படிக்கவும் சுதந்திரம் கிடைக்கும் என கூறியுள்ளார்.

பிபிசி செய்தியாளர் யால்தா ஹக்கீமுடன் பேசிய சுஹைல் ஷாஹீன் தாலிபன் ஆட்சியின் கீழ் நீதித்துறை, நிர்வாகம், சமூக அமைப்பு எப்படி இருக்கும் என்பது பற்றி விரிவாகப் பேசினார்.

ஆனால் முந்தைய தாலிபன் ஆட்சிக்காலத்தை ஒப்பிடும்போது இந்த முறை தாலிபன் ஆட்சியில் பெண்களின் நிலை மேம்பட்டிருக்குமா என்பது கேள்விக்குறியே.

யால்தா ஹக்கீம் பல கேள்விகளின் மூலம் இந்த விஷயத்தைப் புரிந்து கொள்ள முயன்றார். இது போன்ற பல கேள்விகளை ஷாஹீன் தவிர்ப்பதை உணரமுடிந்தது.

யால்தா ஹக்கீம்: தாலிபன் ஆட்சியில் பெண்கள் நீதிபதிகளாக முடியுமா?

சுஹல் ஷாஹின்: நீதிபதியாக முடியும் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. ஆனால், பெண்களுக்கு உதவியாளர் பணி கிடைக்க வாய்ப்புள்ளது. வேறு என்னவிதமான பணிகள் கிடைக்கும் என்பது எதிர்கால அரசைப் பொருத்தது.

யால்தா ஹக்கீம்: மக்கள் எங்கு பணிபுரியலாம், எங்கு செல்லலாம் என்பதை அரசு முடிவு செய்யுமா?

சுஹைல் ஷாஹின்: இது எதிர்கால அரசைப் பொருத்தது. பள்ளிக்கூடங்களில் சீருடை முறை இருக்கும். கல்வித் துறையில் பணியாற்றும் பொறுப்பு எங்களுக்கு இருக்கும். பொருளாதாரம் மற்றும் நிர்வாகத்தில் நிறைய பொறுப்புகள் இருக்கின்றன. ஆனால், பெண்களுக்கு பணி புரியவும் கல்வி கற்கவும் உரிமை வழங்கப்படும் என்பது கொள்கையாக இருக்கும்.

யால்தா ஹக்கீம்: முந்தைய ஆட்சிக் காலத்தைப் போல, பெண்கள் தங்கள் தந்தை, சகோதரன் அல்லது கணவன் என ஆண் துணையுடன் தான் வெளியில் செல்ல வேண்டும் என்ற நிலை ஏற்படாதல்லவா?

சுஹைல் ஷாஹின்: நிச்சயமாக. இஸ்லாமிய சட்டத்துக்குட்பட்டு எல்லாமே செய்யலாம். கடந்த காலத்திலும் பெண்கள் தனியாகச் செல்வதைப் பார்க்க முடிந்ததே.

யால்தா ஹக்கீம்: இதற்கு முன்னர், தனியாக வெளியே செல்லும் பெண்களைக் கலாச்சாரக் காவலர்கள் அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். பெண்களுக்குத் தங்கள் தந்தை, சகோதரன் அல்லது கணவனுடன் மட்டுமே வெளியே செல்ல அனுமதி உண்டு என்று நாங்கள் உரையாடிய பெண்கள் தெரிவித்தார்கள்.

சுஹைல் ஷாஹின்: இல்லை, அப்படி இருந்ததில்லை. இனியும் அப்படி இருக்காது.

யால்தா ஹக்கீம்: தாலிபன் மீண்டும் அதிகாரம் பெறுவதால் கவலை கொண்டிருக்கும் இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?

சுஹைல் ஷாஹின்: அவர்கள் அச்சப்படத் தேவையில்லை. நாங்கள் அவர்களின் கண்ணியத்திற்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பளித்துக் கல்வி, வேலை என அனைத்துச் சுதந்தரமும் வழங்க எங்களை அர்ப்பணிப்போம். அவர்கள் கவலைப்படத் தேவையில்லை. கல்வி மற்றும் வேலை ஆகியவற்றில் முந்தைய அரசாங்கத்தை விடச் சிறப்பான நிலையே இருக்கும்.

யால்தா ஹக்கீம்: சில தாலிபன் போராளிகளுடன் நான் பேசிய வரை, பொது வெளியில் மரண தண்டனை, கல்லெறியும் தண்டனை, கை கால்களை வெட்டுவது போன்ற தண்டனை முறைகளை நடைமுறைப்படுத்த விரும்புகிறார்கள். நீங்களும் அதைத் தான் விரும்புகிறீர்களா?

சுஹைல் ஷாஹின்: இது ஒரு இஸ்லாமிய அரசு என்பதால், இந்த இஸ்லாமிய சட்டங்கள் மற்றும் மத அமைப்புகள் மற்றும் நீதிமன்றங்கள் இவை தான் அனைத்தையும் தீர்மானிக்கும். தண்டனைகள் பற்றியும் அவையே முடிவு செய்யும்.

சில நாட்களுக்கு முன்பு, மற்றொரு தாலிபன் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித்தும் இந்த விவகாரம் இஸ்லாமிய சட்டத்துடன் தொடர்புடையது என்று கூறினார் என்பதையும் இங்கு நினைவு கூர விரும்புகிறேன்.

“இது ஷரீயத் தொடர்பான விஷயம். ஷரியத்தின் கொள்கைகளை மாற்ற முடியாது என்று நான் சொல்ல முடியும்.” என்று அவர் கூறினார்.

மேற்குறித்த நேர்காணல் தாலிபான்களின் தற்போதைய போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை எடுத்துக்காட்டுகிறது. அவ்வாறே சீனாவும் ஆப்கானிஸ்தானின் பொருளாதார வளர்ச்சிக்கு கைகோர்க்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரவிக்கின்றன. BBC, LNN Staff

தாலிபான் ஆட்சி என்றால் அனைவருக்கும் எழும் எண்ணம்தான் பெண்களுக்கான சம உரிமை காணப்படாது, பெண்களுக்கு எதிராக அடக்கு முறைகள் காணப்படும் மற்றும் யுத்த களமாக அந்த பூமி காணப்படும் என்பதாகும். ஆனால் தாலிபான் செய்தித்…

தாலிபான் ஆட்சி என்றால் அனைவருக்கும் எழும் எண்ணம்தான் பெண்களுக்கான சம உரிமை காணப்படாது, பெண்களுக்கு எதிராக அடக்கு முறைகள் காணப்படும் மற்றும் யுத்த களமாக அந்த பூமி காணப்படும் என்பதாகும். ஆனால் தாலிபான் செய்தித்…