தலிபான் ஆட்சி எவ்வாறு அமையும்?

  • 14

எம்.எஸ்.எம். ஐயூப்

தலிபான் கிளர்ச்சிக் குழுவினர், திங்கட்கிழமை (17) முழு ஆப்கானிஸ்தானையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தூர பிரதேசங்களில், வேறு சில குழுக்கள் செயற்பட்டு வந்த போதிலும், அது, தலிபான்களின் நிர்வாகத்தை எவ்வகையிலும் இப்போதைக்குப் பாதிக்கப் போவதில்லை.

தலிபான்கள், இவ்வளவு விரைவாக முழு நாட்டையும் கைப்பற்றிக் கொள்வார்கள் என, அமெரிக்கத் தலைவர்கள் நினைக்கவில்லை போலும்! கடந்த புதன்கிழமை (11) ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்திருந்த கருத்துகளால் அது விளங்குகிறது.

அவர், ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது, “செப்டெம்பர் 11ஆம் திகதிக்கு முன்னர், அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறினாலும், வான் வழி உதவி வழங்கி, ஆப்கான் விமானப் படையினரை இயங்கக் கூடிய நிலையில் வைத்து, ஆப்கான் படையினருக்கு உணவு, உபகரணங்கள், அவர்களது சம்பளம் ஆகியவற்றை வழங்கி, எமது வாக்குறுதியை நிறைவேற்றுவதை நான் உறுதிப்படுத்துகிறேன்” எனக் கூறினார்.

​அதேவேளை, அமெரிக்கப் படை வாபஸ் பெறுவதைப் பற்றி, வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் ஜென் பாஸ்கி  குறிப்பிடும் போது, “அடுத்த வருடத்துக்கான வரவு – செலவு திட்டத்தின் மூலம், ஆப்கான் பாதுகாப்புப் படையினருக்கு, 3.3 பில்லியன் டொலர் நிதி உதவி வழங்க, பைடன் ஆலோசனை வழங்கியுள்ளார்” எனத் தெரிவித்திருந்தார். ஆனால், இவை எதையும் செயற்படுத்த, அமெரிக்கத் தலைவர்களுக்கு அவகாசம் வழங்காமலேயே, தலிபான்கள் அசுர வேகத்தில் நாட்டைக் கைப்பற்றிவிட்டனர்.

இது, அமெரிக்க உளவுத்துறையின் பலவீனத்தை குறிக்கிறதா அல்லது, அமெரிக்கத் தலைவர்கள், தம்மோடு இணைந்து, கடந்த 20 ஆண்டுகளாகச் செயற்பட்டு வந்த ஆப்கான் தலைவர்களை, கடைசி நிமிடத்தில் ஏமாற்றினார்களா என்பது தெளிவாகவில்லை. எதுவானாலும், அமெரிக்கா வெட்கித் தலைகுனிய வேண்டிய விடயம் இதுவாகும்.

அமெரிக்கப் படைகளுடன் இணைந்து செயற்பட்ட ஏனைய பலம் வாய்ந்த நாடுகளினது படைகளும் இவ்வனைத்துப் படைகளுக்கும் உதவியாகச் செயற்பட்ட ஆப்கானியர்களும், திங்கட்கிழமை (16)  நாட்டைவிட்டு வெளியேற முண்டியடித்ததைப் பார்க்கும் போது, 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் திகதி, தென் வியட்நாம் தலைநகர் சைகொன்னிலிருந்து, அமெரிக்கப் படைகள் அவசர அவசரமாக வெளியேறிய காட்சிகள் நினைவுக்கு வருகின்றன.

ஆனால், இரண்டும் முற்றிலும் சமமான நிலைமைகள் அல்ல. வியட்நாமிலிருந்து அமெரிக்க  படையினர், வியட்நாம் புரட்சிவாதிகளால் விரட்டியடிக்கப்பட்டனர். அது, அமெரிக்கப் படைகளின் வரலாற்றில், அப்படைகள் அடைந்த மிகவும் மோசமான தோல்வியாகும்.

ஆனால், ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் விலகுவதென்பது, 2020ஆம் ஆண்டு, டிரம்ப் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட முடிவாகும். அமெரிக்காவுக்குத் தேவையாக இருந்தால், 1991ஆம் ஆண்டைப்  போலவே, விமான குண்டுத் தாக்குதல்களால், தலிபான்களின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தியிருக்கலாம்.

இப்போது, அமெரிக்காவுக்குத் தொடர்ந்தும் ஆப்கானிஸ்தான் தேவையில்லை. எனவே, இதுவரை தமக்கு உதவிய ஆப்கானியர்களை ஆபத்தில் தள்ளிவிட்டு, அமெரிக்கா வெளியேறுகிறது. அமெரிக்க உதவியால் பதவியில் இருந்த ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கனி, தமது குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை  (15) விமானம் மூலம், நாட்டைவிட்டு வெளியேறிவிட்டார்.

அமெரிக்காவுக்கும் ஏனைய வெளிநாட்டுப் படைகளுக்கும், மொழி பெயர்ப்புப் பணி மூலம் உதவிய பலரும், ஏற்கெனவே வெளியேற்றப்பட்டனர். மேலும், அவ்வாறு உதவியோரும் தலிபான்களை விரும்பாதவர்களும் தலிபான்களால் தமக்கு ஆபத்து ஏற்படும் என்று பயந்தவர்களுமே, தலிபான்கள் தலைநகர் காபூலைக் கைப்பற்றியவுடன், நாட்டைவிட்டுத் தப்பி ஓடுவதற்காக, விமான நிலையத்துக்கு ஆயிரக் கணக்கில் முண்டியடித்துக் கொண்டு ஓடினர்.

2001ஆம் ஆண்டு, அமெரிக்காவில் உலக வர்த்தக நிலையமும் பாதுகாப்புத் தலைமையகமான பெண்டகனும் விமானங்களால் மோதித் தாக்கப்பட்டன; ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அல் கொய்தா என்ற பயங்கரவாத அமைப்பே, அந்தத் தாக்குதல்களை நடத்தியதாகப் பொதுவாகக் கருதப்படுகிறது.

அவ்வமைப்பின் தலைவராக இருந்த ஒஸாமா பின் – லேடன், ஆப்கானிஸ்தானில் இருப்பதாகக் குற்றம் சாட்டிய அமெரிக்கா, அவரைக் கையளிக்குமாறு, அப்போது ஆப்கானிஸ்தானை ஆட்சி புரிந்த தலிபான்களை வற்புறுத்தியது. அவர், தமது நாட்டில் இல்லை எனத் தலிபான்கள் கூறினர். ஆனால், அதை ஏற்காத அமெரிக்காவும் பிரிட்டனும், 2001ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், ஆப்கானிஸ்தான் மீது விமானத் தாக்குதல்களை மேற்கொண்டன. அத்தோடு, முன்னர் முஜாஹிதீன்கள் என்றும் வடக்குக் கூட்டணி என்றும் அழைக்கப்பட்ட பல்வேறு ஆப்கான் குழுக்களும், தலிபான் நிலைகள்  மீது தாக்குதல்களை நடத்தின.

இதன் காரணமாக, ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர், ஐ.நாவின் அனுசரணையுடன் ஹமீத் கர்ஸாயின் ஆட்சி ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், அமெரிக்காவினதும் ஏனைய வல்லரசுகளின் படைகளும் தொடர்ந்தும் அந்நாட்டில் நிலைகொண்டிருந்தன. இந்த நிலையில், கடந்த 20 ஆண்டுகளாகத் தலிபான்களுடன் ஆப்கான் அரச படைகளும் வெளிநாட்டுப் படைகளும் மோதல்களில் ஈடுபட்டு வந்தன.

இந்தக் காலகட்டத்தில், ஆப்கானிஸ்தான் போருக்காக, அமெரிக்கா ஒரு ட்ரிலியன் (ஒரு இலட்சம் கோடி) டொலருக்கு மேல் பணத்தை செலவழித்துள்ளது. 300,000க்கும் மேற்பட்ட ஆப்கான் படை வீரர்களைப் பயிற்றுவித்துள்ளது.

தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், அமெரிக்காவோ மேற்குலகமோ அந்த 20 ஆண்டு காலப் போரால், அடைந்த பயன் என்ன என்பதே இப்போது எழும் கேள்வியாகும். இந்த 20 ஆண்டு காலப் போர், ஆப்கானிஸ்தானில் சுமார் ஒரு இலட்சம் உயிர்களைக் குடித்துள்ளதுடன், வறுமையும் மட்டுமே, மேற்குலக நாடுகளின் ஆப்கான் மீதான ஆக்கிரமிப்பின் விளைவாகும்.

1979ஆம் ஆண்டு முதல், அதாவது 42 ஆண்டுகளாக, ஆப்கான் மக்கள் போர் சூழலிலேயே வாழ்கின்றனர். அந்த ஆண்டு, சோவியத் ஒன்றித்தின் படைகள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தன. ஆப்கான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே, தாம் அந்நாட்டுக்குப் படைகளை அனுப்பியதாக, சோவியத் ஒன்றியம் கூறியது. சோவியத் ஒன்றியத்தின் படைக்கு எதிராக, பல்வேறு ஆப்கான் குழுக்கள் போராடின. இக் குழுக்களுடன் ஆப்கான் போர் களத்தில் இறங்கியவரே, ஒஸாமா பின் லேடனும் ஆவார்.

முஜாஹிதீன்கள் என்றழைக்கப்பட்ட அந்தக் குழுக்களுக்கு, அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் ஆயுதம், பணம், பயிற்சி வழங்கி வந்தன. பெரும்பாலும் இனம், கோத்திரம் போன்றவற்றின் அடைப்படையில் அமைந்த அக்குழுக்களுக்கு இடையேயும் போர்கள் இடம்பெற்றன. பல்லாயிரக் கணக்கான ஆப்கான்கள் இதனால் உயிரிழந்தனர்.

தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கும் நிலையில், இனி அவர்களது ஆட்சி எவ்வாறானதாக அமையும் என்பதே, அடுத்து எழும் கேள்வியாகும். அது, வெளிநாட்டு தலையீடு இல்லாமல், சுதந்திரமாக நடைபெறுமா என்பதும், முன்னர் போல் பெண்களுக்கு கல்வி உரிமை மறுக்கப்பட்டு, சிறுபான்மை இனத்தவர்கள் மீது அடக்குமுறையைப் பிரயோகிக்கும் ஆட்சியாகவே அமையுமா எனப் பலர் கேள்வி எழுப்புகின்றனர்.

ஏனைய முஜாஹிதீன் குழுக்களுடன் இயங்கி வந்த தலிபான்கள், 1994 ஆம் ஆண்டே, தனியாக இயங்க ஆரம்பித்தனர். இரண்டு ஆண்டுகளில் அவர்கள் நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றினர். பாகிஸ்தானின் நிதி, இராணுவ உதவியாலேயே அவர்கள் இதைச் சாதித்தனர் எனக் கூறப்படுகிறது.

அதன் பின்னர் அவர்கள், கடந்த 20 ஆண்டுகளாக மேற்குலக நாடுகளின் அதி நவீன போர் ஆயுதங்களைக் கொண்ட படைகளுடன் மோதினர். ஒரு படையென்றால் அதற்கு ஆயுதங்கள், தாங்கிகள், வாகனங்கள், உணவு, உடை, மருந்து, பயிற்சி, வாழ்வாதாரச் செலவு போன்றவற்றுக்கு கோடிக் கணக்கான பணம் தேவைப்படுகிறது.

தலிபான்களுக்கு இந்தப் பணம் எங்கிருந்து கிடைக்கிறது? அவர்கள் அபின் வியாபாரத்தின் மூலமே இப்பணத்தைச் சம்பாதித்துக் கொள்கின்றனர் என மேற்கத்திய ஊடகங்கள் கூறுகின்றன. அது உண்மையாக இருந்தாலும், 20 ஆண்டு காலம் தாக்குப் பிடிக்க, அதனால் மட்டும் முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

அவர்கள், இஸ்லாமிய கடும்போக்காளர்கள் என்பதால், அபின் போன்ற போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட மாட்டார்கள் என்று சிலர் வாதிடுகின்றனர். அவ்வாறாயின், அவர்களுக்கு நிச்சயமாக வெளிநாடொன்று உதவியாக இருக்க வேண்டும். அவ்வாறாயின், வெளிநாட்டுத் தலையீடின்றி அவர்களுக்கு இனி ஆட்சியை நடத்த முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.

அடுத்ததாக, அவர்களது ஆட்சி எவ்வாறானதாக அமையும் என்பதும் கேள்விக்கு உரியதாக உள்ளது. ஏனெனில், உலகில் எந்தவொரு முஸ்லிம் நாட்டிலும் இல்லாத ஒர் ஆட்சியையே, அவர்கள் 1996 முதல் 2001ஆம் ஆண்டு வரை நடத்தினர்.

பெண்களின் கல்வியைப் பற்றியே பலர் கவலை தெரிவிக்கின்றனர். அவர்களது சித்தாந்தங்களில் மாற்றம் ஏற்பட்டு உள்ளதாகவும் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு சில நாள்களுக்கு முன்னர், கத்தார் தலைநகர் தோஹாவில் அதற்குப் பதிலளித்த தலிபான் பேச்சாளர் சுஹைல் ஷஹீன், பெண்களின் கல்விக்குத் தடை விதிக்கப்பட மாட்டாது என்று தெரிவித்து இருந்தார்.

மத ரீதியான சிறுபான்மையினரது உரிமை, மற்றொரு கேள்வியாக உள்ளது. சிறுபான்மையினரான இலங்கை முஸ்லிம்களும் இதனை அறிய விரும்புவார்கள்.

எம்.எஸ்.எம். ஐயூப் தலிபான் கிளர்ச்சிக் குழுவினர், திங்கட்கிழமை (17) முழு ஆப்கானிஸ்தானையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தூர பிரதேசங்களில், வேறு சில குழுக்கள் செயற்பட்டு வந்த போதிலும், அது, தலிபான்களின் நிர்வாகத்தை எவ்வகையிலும்…

எம்.எஸ்.எம். ஐயூப் தலிபான் கிளர்ச்சிக் குழுவினர், திங்கட்கிழமை (17) முழு ஆப்கானிஸ்தானையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தூர பிரதேசங்களில், வேறு சில குழுக்கள் செயற்பட்டு வந்த போதிலும், அது, தலிபான்களின் நிர்வாகத்தை எவ்வகையிலும்…