ஆப்கான் குறித்து அலெக்ஸாண்டரின் அனுபவம்

சுமார் 20 வருடங்களாக நீடித்து வந்த யுத்தத்தின் பின் அமெரிக்கா செப்டம்பர் 11ம் திகதிக்கு முன் ஆப்கானிஸ்தானில் இருந்த தனது படைகளை முற்றாக விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையில் துரிதமாக ஈடுபட்டு வருகின்றது.

இதன் தொடராக தாலிபான் இயக்கத்தினர் ஆப்கானிஸ்தானின் முக்கிய மாகாணத் தலைநகரங்களை கைப்பற்றி தமது கட்டப்பாட்டின் கீழ் கொண்டு வருவதில் தீவிரம் காட்டி வந்த நிலையில் அவர்கள் தற்போது தலைநகர் காபூலையும் கைப்பற்றி ஜனாதிபதி மாளிகையையும் தமது கட்டுபாட்டின் கீழ் கொண்டு வந்து விட்டனர். ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அண்டை நாடான தஜிகிஸ்தானில் தஞ்சம் புகுந்துள்ளார். புதிய அரசு பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் யுத்தம் முடிந்து விட்டது என்ற தலிபான்களின் அறிவிப்பு 2021 ஆகஸ்ட் 16ல் வெளியாகி உள்ளது.

வீரத்துக்கு புகழ்போன ஆப்கானிஸ்தானியர்கள் 40 வருடங்களாக இரண்டு உலக மகா வல்லரசுகளை எதிர்த்துப் போராடி உள்ளனர். முதல் 20 ஆண்டுகள் சோவியத் யூனியனை எதிர்த்துப் போராடினர். அதன் பிறகு 20 வருடங்கள் அமெரிக்காவை எதிர்த்துப் போராடி உள்ளனர். இந்த இரண்டு போராட்டங்களிலும் இரு வல்லரசுகளையும் அவர்கள் மண் கவ்வச் செய்து வெற்றி வாகை சூடி மீண்டும் அரசாங்கத்தை அமைத்துள்ளனர்.

பதவியேற்கக் காத்திருக்கும் ஒரு அரசாங்கமாக தாலிபான்கள் தற்போது தம்மைக் கருதி வருகின்றனர். அவர்கள் தற்போது தங்களை ‘இஸ்லாமிய ஆப்கானிஸ்தான் அமீரகம்’ என்றும் அழைக்கத் தொடங்கி உள்ளனர். 1996 வரை தலிபான்கள் பதவியில் இருந்த போது இந்தப் பெயரைப் பாவித்து வந்தமை இங்கு நினைவூட்டத்தக்கது. செப்டம்பர் 11தாக்குதலின் பின் அவர்கள் பதவியில் இருந்து கவிழ்த்தப்படும் வரை இந்தப் பெயரைப் பாவித்து வந்துள்ளனர். இப்போது அவர்களிடம் ஒரு நவீன நிழல் கட்டமைப்பு காணப்படுகின்றது. தாம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள பகுதிகளில் அன்றாடக் கடமைகளை மேற்பார்வை செய்ய அவர்கள் தமது அதிகாரிகளையும் நியமித்துள்ளனர்.

மாவீரன் அலெக்ஸாண்டர் சுமார் 320 ஆண்டுகளுக்கு முன் கூறுகையில் ‘ஆப்கானிஸ்தானுக்குள் இலகுவாக அணிவகுத்துச் செல்லலாம் ஆனால் அங்கிருந்து வெளியேறுவதென்பது மிகவும் கடினமான ஒன்று’ என்றார். ஆப்கானிஸ்தான் தொடர்பான தனது அனுபவத்தின் அடிப்படையில் அந்த வரலாற்று வீரன் குறிப்பிட்ட விடயத்தில் இருந்து அன்றைய சோவியத் யூனியனோ அல்லது இன்றைய ஏக வல்லரசான அமெரிக்காவோ எந்தப் பாடத்தையும் கற்றுக் கொள்ளத் தவறி விட்டன என்பதே உண்மை நிலையாகும்.

1979ல் ஆப்கானிஸ்தானை சோவியத் யூனியன் ஆக்கிரமித்தது. இதன் மூலம் அந்த நாட்டுக்கென்றே தனித்துவமான முறையில் இருந்த ஒரு உன்னதமான அரசியல் கட்டமைப்பு நாசமாக்கப்பட்டது. அதன் உள்கட்டமைப்பு, பொருளாதார வளங்கள் என்பன சிதைக்கப்பட்டு ஏற்கனவே கஷ்டங்களோடு வாழ்ந்து வந்த மக்கள் மீது மேலும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவுககு துயரங்கள் திணிக்கப்பட்டன. இதன் விளைவாக இலட்சக்கணக்கான மக்கள் வெற்றுக் கரங்களோடு அண்டை நாடான பாகிஸ்தானில் அகதி முகாம்களுக்குள் முடக்கப்பட்டனர். ரஷ்யாவின் கொடூரமான இராணுவத் தாக்குதல்கள் மூலம் ஆப்கானிஸ்தானின் ஆயிரக்கணக்கான அப்பாவி ஆண்களும், பெண்களும், சிறுவர்களும், முதியவர்களும் ஈவு இரக்கமின்றி கொன்று குவிக்கப்பட்டனர். ஆழமான சமய உணர்வுகளைக் கொண்டிருந்த ஒட்டு மொத்த சமூகக் கட்டமைப்பும் அங்கு நாசமாக்கப்பட்டது. 1980களின் நடுப்பகுதியில் ஆப்கானிஸ்தான் முஜாஹிதீன்களின் பிரதான தலைவர்களில் ஒருவரான குலுப்புத்தீன் ஹிக்மதியாரை நான் துபாயில் சந்தித்த போது, தமக்கே உரிய பாரம்பரிய துணிச்சல் மற்றும் தைரியம் என்பன பற்றி அவர் கூறுகையில் ‘சோவியத் யூனியனின் புதைகுழியாக ஆப்கானிஸ்தான் மாறும் என்பதை நாம் உறுதி செய்வோம்’ என்று கூறினார். அன்று அவர் கூறியது பிற்காலத்தில் உண்மையானது. போதிய ஆயுதங்களும் பயிற்சியும் அற்ற ஆப்கானிஸ்தான் மக்கள் முன்னிலையில் அன்றைய மாபெரும் வல்லரசுகளில் ஒன்றாக இருந்த சோவியத் யூனியன் இரத்தம் வழிய வழிய மண்டியிட்டு நின்றது. கடைசியாக 1989ல் சோவியத் யூனியன் சிதைவுற்றது. அதன் பிறகு 2001ல் போலிக் காரணங்களைக் கூறிக் கொண்டு அப்கானிஸ்தானுக்குள் பிரவேசித்த அமெரிக்கா இன்று தலைதெறிக்க பின்வாங்கி ஓட வேண்டிய நிலைக்கு வந்துள்ளது.

சோவியத் யூனயனுக்கு ஏற்பட்ட நாசகார அழிவுகளில் இருந்தும் அனுபவத்தில் இருந்தும் கூட சரியான பாடங்களைக் கற்றுக் கொள்ளத் தவறிய அமெரிக்கா அதன் நேட்டோ அணியைத் திரட்டிக் கொண்டு 2001 அக்டோபரில் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது. அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட அல்குவைதா தான் செப்டம்பர் 11 அழிவை ஏற்படுத்தியது அதற்கு துணையாக ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு இருந்தது என்றும,; போலிக் குற்றச்சாட்டை முன்வைத்து அமெரிக்கா அங்கு பிரவேசித்தது. ஆனால் அல்குவைதாவுக்கு ஆதரவளித்ததாக சொல்லப்படும் தலிபான்கள் கூட அமெரிக்காவால் உருவாக்கப்பட்டவர்கள் தான் என்பதை அமெரிக்கா அப்போது மறந்து விட்டது. ஆனால் இந்தக் குற்றச்சாடடுக்களை எல்லாம் மீறி செப்டம்பர் 11இல் அமெரிக்காவில் ஏற்படுத்தப்பட்ட அழிவுகளுக்கும் உயிர் இழப்புக்களுக்கும் எந்த ஒரு முஸ்லிமும் எந்த வகையிலும் காரணம் அல்ல என்பது பின்னர் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நிர்வாகத்தின் உண்மையான குறிக்கோள் 2007இல் அமெரிக்க ராஜாங்க உதவிச் செயலாளர் றிச்சர் பௌச்சரினால் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘ஆப்கானிஸ்தானை ஸ்திரப்படுத்துங்கள். அப்போது அது தெற்காசியாவுக்கும் மத்திய ஆசியாவுக்கும் இடையிலான ஒரு தொடர்பு மையமாக உருவாக முடியும். அப்போது தெற்கில் சக்தி வளம் பெருக்கெடுக்க முடியும்’ என்றார்.

ஆனால் அமெரிக்காவின் படையெடுப்பு ஏற்கனவே ஒரு படையெடுப்பால் நாசமாகிப் போயிருந்த ஆப்கானிஸ்தானை மேலும் சிதைத்து முழுமையாக சின்னாபின்னமாக்கியது. மனித உயிரிழப்புக்களுக்கு மேலதிகமாக வீதிகள், வீடுகள், தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்கள், பாடசாலைகள், ஆஸ்பத்திரிகள் என்பன உற்பட சகல உள்கட்டமைபபுக்களும் நாசமாக்கப்பட்டன. கார்பெட் குண்டு வீச்சு, ஏவுகணைத் தாக்குதல்கள், கொத்தணிக் குண்டு வீச்சுகள், பங்கர் பஸ்டர் குண்டுகள் என எல்லாமே அங்கு மனித உயிர்களையும் சொத்துக்களையும் அழிக்கப் பயன்படுத்தப்பட்டன. இந்தத் தாக்குதல்கள் காரணமாக ஏற்பட்ட மனித உயிர்களுக்கு மேலதிகமாக மேலும் ஆயிரக்கணக்கான உயிர்கள் பட்டினிக்கும் பல்வேறு நோய்களுக்கும்; பலியாகின. இதில் கணிசமான அளவு சிறுவர்களும் அடங்குவர். அமெரிக்க நேச அணியைச் சேர்ந்தவரும் ஆப்கானிஸ்தானின் யுத்தப் பி;ரபுக்களில் ஒருவராகவும் இருந்த அப்துல் றாஷிட் தொஸ்தம் வரலாற்றின் மத்திய பகுதி காலங்களில் இடம்பெற்றது போன்ற கொடூரமான மூர்க்கதனம் மிக்க காட்டுமிராண்டித் தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டார். அமெரிக்க-நேட்டோ படைகளின் பிரவேசத்தோடு இந்தக் கொடூரங்களும் அரங்கேறத் தொடங்கின.

1979ல் சோவியத் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த போது சவூதியில் ஒரு பிரபலமான செல்வந்தக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஒஸாமா பின் லேடனின் துணையோடு அல்குவைதா அமைப்பு தொடங்கப்பட்டது. அவர் தனது சொத்து சுகங்கள் எல்லாவற்றையும் துறந்து விட்டு ஆப்கானிஸ்தானை மீட்டெடுக்க களம் இறங்கினார். வெளி உலகில் இருந்து பணம், ஆயுதம் மற்றும் போராடத் தேவையான ஆட்களையும்; தனது பணத்தை செலவழித்து ஒஸாமா ஆப்கானிஸ்தானுக்குள் கொண்டு வந்தார்.

உலக வல்லரசுப் போட்டியில் தனக்கு நிகரான ஒரே எதிரியாக அமெரிக்கா கருதிய சோவியத் யூனியனை மண் கவ்வச் செய்வதற்கு அமெரிக்கா ஆப்கானிஸ்தான் முஜாஹிதீன் போராளிகளுக்கு பக்க பலமாக நின்று ஆயுதம், பணம், பயிற்சி என தேவையான எல்லா உதவிகளையும் வழங்கியது. அவ்வாறுதான் சோவியத்துக்கு எதிரான ஆப்கானிஸ்தான் யுத்தத்தில் அமெரிக்காவின் நம்பத் தகுந்த பங்காளியாக பின் லேடன் மாறினார். பின் லேடனின் தியாகம், வியக்கத்தக்க செயற்பாடுகள் என்பன காரணமாக இஸ்லாமிய உலக இளைஞர்களால் அவர் ஒரு ஹீரோவாகப் பார்க்கப்பட்டார். ஒரு பெரும் செல்வந்தர் தனது செல்வங்களை எல்லாம் தியாகம் செய்து விட்டு ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடுவதற்காக குகை வாழ்க்கையைத் தெரிவு செய்துள்ளார் என்ற ரீதியில் அமெரிக்க ஊடகங்களும் அவருக்கு முக்கியத்துவம் வழங்கி பிரசாரம் மேற்கொண்டன.

இறுதியில் சுமார் பத்து வருடங்கள் கழித்து 1989ல் வெற்கக் கேடான முறையில் தனது தோல்வியை ஏற்று இரத்தக் கரைகளோடும் வழிந்தோடும் இரத்தத்தோடும் அதன் வலிகளோடும் ஆப்கானிஸ்தான் மண்ணிலிருந்து மண்டியிட்டு வெளியேறும் நிலை ரஷ்யாவுக்கு ஏற்பட்டது.

அதன் பிறகு தலிபான்கள் பல நகரங்களை மிகத் துரிதமாக தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். அந்தத் தாக்குதல்களின் தொடராக 1996 செப்டம்பரில் தலைநகர் காபுலும் தலிபான்களிடம் வீழ்ந்தது. யுத்தம் செய்யும் குழுக்களால் ஏற்பட்ட ஏமாற்றங்கள், பல வருட காலமாக நீடித்த மோதல்கள் என்பனவற்றால் பாதிக்கப்பட்டிருந்த மக்கள் வேறு வழியின்றி தலிபான்களை வரவேற்றனர். கொந்தளித்துக் கொண்டிருந்த தமது நாட்டில் தலிபான்கள் ஓரளவுக்கு அமைதியையும் ஸ்திர நிலையையும் மீண்டும் ஏற்படுத்தினர்.

அந்த கால கட்டத்தில் அமெரிக்காவும் ஐரோப்பாவும் அங்கு ஒரு வெறியாட்டத்தை ஆடி முடித்திருந்த வேளையில் தலிபான்கள் ஓரளவுக்கு சாதகமான பங்களிப்பை வழங்கினர். சட்டம் ஒழுங்கின்றி சீரழிந்து போயிருந்த அந்த நாட்டில் அவர்கள் மீண்டும் சட்டத்தையும் ஒழுங்கையும் ஸ்திர நிலையையும் ஸ்தாபித்தனர். வெறித்தனம் மிக்க யுத்தப் பிரபுக்கள் சிலரையும் பாதாள உலகக் கோஷ்டிகளையும் அவர்கள் ஒழித்துக் கட்டினர். சிவில் யுத்தமும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. ஊழலுக்கு முடிவு கட்டினர். வியாபாரம் மற்றும் வர்த்தகம் என்பனவற்றுக்கான வழிகளைத் திறந்து விட்டு நாட்டின் ஒரு முனையில் இருந்து இன்னொரு முனைக்கு பயணங்களை மேற்கொள்ளும் வகையில் மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்தனர். தாக்குதல் அச்சங்கள் எதுவும் இன்றி மக்கள் நடமாடத் தொடங்கினர். போதைப் பொருள் செய்கை உற்பட அந்த வர்த்தகத்துக்கும் அதில் ஈடுபட்ட பிரதான நபர்கள் சிலருக்கும் முடிவு கட்டப்பட்டது.

நேர்மை, கௌரவம், தார்மிக விழுமியங்கள் என்பனவற்றுக்கும் தலிபான்கள் உதாரணமாகத் திகழ்ந்தனர். ஆப்கானிஸ்தானில் இருந்த போது தலிபான்கள் கைது செய்யப்பட்ட பிரிட்டிஷ் பெண் ஊடகவியலாளர் யுவோன் றிட்லி விடுதலை செய்யப்பட்ட பின் இஸ்லாத்தை ஏற்றார். தான் கைது செய்யப்படடு வைக்கப்பட்டிருந்த போது தான் மிக கௌரவமாக நடத்தப்பட்டதாகவும் தலிபான்களின் கௌரவமான செயற்பாடுகளே தான் இஸ்லாத்தைத் தழுவக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். ஈராக், லிபியா ஆகிய நாடுகளில் அமெரிக்கப் படை வீரர்கள் வெறிதத்தனமாகப் பெண்களை வேட்டையாடியதை விட இது முற்றிலும் மாறுபட்ட கதையாகும்.

அந்தக் காலப் பகுதியில் செப்டம்பர் 11ல் அமெரிக்காவில் வாஷிங்டன் மற்றும் நியுயோர்க் நகரங்களில் நடத்தப்பட்ட பயங்கரத் தாக்குதல்களை அடுத்து அதை சாட்டாக வைத்து தலிபான்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஜோர்ஜ் புஷ்ஷும் அவரது நவ காலணித்துவ பங்காளிகளும் ஆப்கானிஸ்தான் மீது மீண்டும் சீறிப் பாய்ந்தனர். அவர்கள் தங்களது மேலாதிக்கத்தை அங்கே நிறுவினர். மத்திய ஆசியப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க எண்ணெய் உற்பத்திக் கம்பனிகளை வளப்படுத்துவதும் ஆயுத உற்பத்தித் துறைக்கும் அதனோடு தொடர்புடைய கூட்டாண்மை நிறுவனங்களுக்கும் ஆதரவளிப்பது தான் அவர்களின் நோக்கமாக இருந்தது.

ஏற்கனவே துவம்சம் செய்யப்பட்டிருந்த நாட்டில் எஞ்சியிருந்த எல்லாவற்றையும் அமெரிக்காவும் அதன் நேச அணிகளும் சின்னா பின்னமாக்கின. முழுமையாக நாசமாக்கப்பட்ட ஒரு பிராந்தியமாக ஆப்கானிஸ்தான் உருமாறியது. மனித உயிரிழப்புகளுக்கு மேலதிகமாக வீடுகள், பாடசாலைகள், வீதிகள் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையங்கள் என எல்லாமே நாசமாக்கப்பட்டன. கார்பெட் குண்டு வீச்சு, கொத்தணி குண்டு வீச்சு, ஏவுகணைத் தாக்குதல் என அன்றாடம் இடம்பெற்ற விதவிதமான தாக்குதல்களால் ஆயிரக்கணக்கான உயிர்கள் அழிக்கப்பட்டதோடு மட்டுமன்றி உடைமைகளுக்கும் பெரும் அழிவு ஏற்படுத்தப்பட்டது. இவற்றுக்கு அப்பால் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை பட்டினியால் வாடும் நிலையும் மரணிக்கும் நிலையும் அங்கு ஏற்படுத்தப்பட்டது.

மத்திய ஆசியாவின் எண்எணய் வளங்களை தனது நிறுவனங்கள் சூறையாடுவதற்கு அமெரிக்கா வகுத்த திட்டத்தோடு தலிபான்கள் இசைந்து போயிருந்தால் அவர்கள் அமெரிக்காவுக்கு மட்டும் அன்றி முழு மேற்குலகினதும் நல்ல நண்பர்களாக இருந்திருக்கலாம். ஆனால் அந்த சதிக்கு இணங்க மறுத்ததாலும் அப்போது ஆப்கானிஸ்தானில் இருந்த ஒஸாமா பின்லேடனை அவர்களிடம் ஒப்படைக்க மறுத்ததாலும் தலிபான்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கானிஸ்தான், அழிவுகளை சந்திக்க நேர்ந்தது.

மத்திய ஆசியாவின் எண்ணெய் வளத்தை சூறையாடுவதற்காக பிராந்திய நாடுகளுடன் அமெரிக்கா அவசர அவசரமான ஒப்பந்தங்களைச் செய்து கொண்டது. இந்தப் பிராந்தியத்தில் இருந்து சீனாவையும் ஜப்பானையும் தூரமாக ஒதுக்கி வைப்பதே இந்தத் சதித் திட்டத்தின் நோக்கமாகும். ஆனால் இன்று இந்த அநியாயங்கள் அரங்கேற்றப்பட்டு 20 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் யூனியன் வெளியேறியதைப் போலவே வெற்கத்துடனும், அவமானத்துடனும், இரத்தக்கறைகளுடனும், இரத்தம் வழிய வழிய அமெரிக்காவும் அவசர அவசரமாக மூட்டை முடிச்சுக்களுடன் வெளியேறிக் கொண்டிருக்கின்றது.