குண்டு வெடிப்பு தொடர்பில் குற்றவாளிக் கூண்டில் நிற்கும் முஸ்லிம் சமூகத்தை விடுவிக்க தலைமைகள் தவறுவது ஏன்

பேருவளை ஹில்மி

இலங்கையில் நடைபெற்ற மிக மோசமான குண்டு தாக்குதலினால் கத்தோலிக்க சமூகம் உயிர், உறவுகள் ரீதியாகவும், உள ரீதியாகவும், மிகவும் பாதிக்கப்பட்டிருந்தாலும், இது போன்ற ஒரு கஷ்டத்தையும் துன்பத்தையும் முஸ்லிம் சமூகமும் எதிர்நோக்கியது.

அக்காலப்பகுதியில் முஸ்லிம் சமூகம் அனுபவித்த துன்பங்களும், துயரங்களும், வீதிகளில் மக்கள் பட்ட அவதி, அவமானம், போன்றவற்றினால் மக்கள் அனுபவித்த மன உளைச்சல்கள் ஏராளம்.

இத்தாக்குதலில் முஸ்லிம் சமூகம் சம்பந்தப்படாவிட்டாலும், ஏதோ ஒரு சதி வலையில் சிக்கி, சுய புத்தியை இழந்த முஸ்லிம் பேர் தாங்கிகள், செய்த கொடூர அநியாயத்தின் காரணமாக, முஸ்லிம் சமூகமும் படுமோசமான இன்னல்களை அனுபவிக்க வேண்டி வந்தது.

இத்தாக்குதல் காணமாக கத்தோலிக்க சமூகம் பெருவாரியான உயிர்சேதத்தையும், அவர்களின் வரலாற்று ரீதியான, மத ஸ்தளங்கள் போன்றவை சேதமாக்கப்பட்டது. அதே வேலை வரலாற்று ரீதியாக முஸ்லிம் சமூகத்தின் வரலாற்றில், பாரிய ஒரு இரத்தக்கரை கொண்ட பக்கமும் செதுக்கப்பட்டது.

இது சம்பந்தமாக பதிக்கப்பட்ட கத்தோலிக்க சமூகத்தின் துன்பங்களும் துயரங்களும் நாளடைவில், ஓர் இரு வருட காலங்களில் பல கஷ்டங்களுக்கு மத்தியில் அவர்களது வாழ்கை வழமைக்கு திரும்பினாலும், அவர்கள் இதனால் அனுபவித்த துன்பங்கள் துயரங்கள் மறக்க முடியாதவை.

ஆனால் இந்த நாட்டில் முஸ்லிம் சமூகம், வாழும் வரை, இரத்தம் தோய்ந்த இந்த வரலாறு, முஸ்லிம் சமூகத்தை தொடர்ந்து கொண்டே இருக்கும். இந்த அநியாய பழியில் இருந்து முஸ்லிம் சமூகத்தை நிரபராதியன சமூகமாக விடுவிப்பது முஸ்லிம் தலைமைகளின் கையில் உள்ளது.

இது சம்பந்தமான விசாரணைகளில் கத்தோலிக்க மதத் தலைவர்கள் கண்னும் கருத்துமாகவும், கவனமாகவும் இருப்பதை அவர்களின் அவதானிப்புக்களில், அறிக்கைகளில் இருந்தும், விமர்ஷனங்களில் இருந்தும் விளங்க முடிகின்றது.

தமது சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநியாயத்திற்கு நியாயம் வேண்டு்ம் என்பதில் அவர்களின் போராட்டத்தில் சிறிதும் உறக்கத்தை காணவில்லை. ஆனால் இழைக்காத குற்றத்திற்காக சிறைக்கூண்டில் நிற்கும் முஸ்லிம் சமூகத்தை விடுவிக்கவும், சமூகத்திற்கு நியாயத்தை பெற்றுக் கொடுக்கவும், முஸ்லிம் சமூகம் முன் நிற்பதாகவோ, இவை பற்றி கரிசனை கொண்டுள்ளதாகவோ தெரியவில்லை.

சமூகத்தை விற்றுப் பிழைக்கும் நமது அரசியல் தலைமைகளில் நம்பிக்கை இல்லாத போதும், முஸ்லிம் தலைமைத்துவத்தின் முக்கிய பொறுப்பை வகிக்கும் ஜம்மீயதுல் உலமாவின் தலையாய கடமையாகும்.

நடைமுறை ரீதியில் கத்தோலிக்க சமூகத்திற்கு ஏற்பட்ட அசாதாரணமான பாதிப்பை போல், வரலாற்று ரீதியிலான முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட பாதிப்பும் மிகவும் மோஷமானது.

எனவே கத்தோலிக்க ஆன்மீக தலைவர்களும் முக்கியஸ்தர்களும், கரிசனை காட்டுவது போல, முஸ்லிம் சமூகத்தின் தலைமைகளும், ஆன்மீக தலைமைகளும், இதில் கரிசனை கொண்டு, ஒளிவு மறைவற்ற, நீதியான விசாரணை ஒன்றை நடத்தி, இது தொடர்பாக குற்றவாளி கூண்டில் நிற்கும் முஸ்லிம் சமூகத்தை விடுவிக்க வேண்டு்ம் என, எமது தலைமைகளுக்கோ ஆன்மிக தலைமைகளுக் எந்தத் தேவையும் இருப்பதாகத் தெரியவில்லை.

இது தொடர்பில் நியாயத்தை பெற்றுக்கொள்ள தம்முடம் கை கோர்க்கும்படி கத்தோலிக்க தலைமைகளும் கத்தோலிக்க சமூகமும் அழைப்பு விடுத்தும் நமது தலைமைகள் மாற்றான் பிரச்சினைபோல் பாராமுகமாக இருக்கின்றனர்.

இத் தாக்குதல் தொடர்பான நடவடிக்கைகள், விசாரணைகள் சம்பந்தமாக தற்போது பல்வேறுபட்ட துறைகளில் இருந்தும் அரசுக்கு கடுமையான அழுத்தங்களும், விமர்சனங்களும் குவியும் நிலையில், நமது முஸ்லிம் சமூகத்தின் மெளனமான நிலைப்பாடு கவலையானதாகவே காணப்படுகிறது.

இத்தாக்குதல் தொடர்பான 25 குற்றவாளிகளை நாம் கைது செய்துள்ளேம். அவர்களுக்கான த‌ண்டனையை பெற்றுக் கொடுப்போம். என அரசு கூறி வரும் நிலையில், கத்தோலிக்க மத தலைவர்கள் உற்பட, கத்தோலிக்க சமூகம் உண்மையான குற்றவாளியை கண்டு பிடிக்க அரசு தவறிவிட்டது எனக் கூறி வருகின்றனர். அதேவேளை முஸ்லிம் சமூகம் மீதான குற்றச்சாட்டை அவர்கள் மறுத்தும் வருகின்றனர்.

இச்சந்தர்பத்தில் இதன் மீது கவனம் செலுத்தாமல், குறைந்த பட்சம் ஒரு ஊடக மாநாட்டை நடாத்தியாவது இது தொடர்பான உண்மை வெளிப்படுத்த வேண்டும் எனவும், முஸ்லிம் சமூகத்தின் ஆதங்கத்தையும், நிலைப்பாட்டையும், சமூகத்திற்கு நீதி வேண்டும் என்பதையும் கூற, சமூகத்திற்கு தலைமை தாங்கும் ஜமீயதுல் உலமா இன்னும் முன்வரவில்லை.

குண்டு வெடிப்பு நடந்த போது சகல ஊடக நிகழ்சிகளிலும் கலந்து கொண்ட ஜமீயதுல் உலமா, தமது பொறுப்பை அத்தோடு நிறுத்திக் கொண்டு மெளனமாகி விட்டது.

இவ்வாறான நிலையில் இது சம்பந்தமான அனைத்து அழுக்குகளும் அசிங்கங்களும் முஸ்லிம் சமூகத்தின் தலைமீது கொட்டப்படுமா ?

சமூகத்தை நிரபராதியாக நிரூபிக்க முன்னின்று குரல் கொடுக்க வேண்டிய ஜம்மீயதுல் உலமா உற்பட முஸ்லிம் தலைமைகள், இது சம்பந்தமாக மெளனம் காப்பது ஏன்?

இவர்களின் இருப்புக்களை பாதுகாத்துக் கொள்ள, ஜனாஸா எரிப்பு விடயத்தில் எமது உரிமைகளை முட்டிக்குல் முடக்க முயற்சித்து, முட்டிக்கு ஆதாரம் காட்டி, அரசு‌க்கு வக்காலத்து வாங்கிய ஜம்மீயதுல் உலமா தலைமைகள், இந்த விடயத்திலும் தத்தமது கஜானாக்களை பாதுகாத்துக் கொள்ள, இறுதி வரை மெளனமாக இருந்து, முஸ்லிம் சமூகத்தின் மீது கொட்டப்படப்போகும் அத்தனை குற்றங்களையும் நாற்றங்களையும் பெருமனதுடன் பெருமையாக வாங்கிக் கொடுப்பார்களா ?

இவ்வாறு இவர்கள் மெளனம் காக்கும் பட்சத்தில், எதிர்கலாத்தில் இந்த நாட்டில் வழப்போகும் முஸ்லிம் சந்ததிகள், கொடுர கொலைகாரர்கள் என முத்திரை குத்தப்படப் போவது நிச்சயம். அவ்வாறான ஒரு நிலை ஏற்படுமாயின், இன்று பதவிகளை வகித்து வரப்பிரசாதங்களையும் அனுபவிக்கும் இவர்கள் நிச்சயம் தத்தமது பொறுப்புகளுக்கு அல்லாஹ்விடம் குற்றவாளிகள்.