கொரோனாவும் உளவியல் ஆக்கிரமிப்பும்

  • 13

இன்று முழு உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு பெயர் தான் கொரோனா. கொவிட் 19 என்ற பெயரால் அறிமுகமான வைரஸ் இதுவாகும். இது சுமார் இரு வருட காலமாக இலங்கையை மட்டும் அல்லாது சர்வதேச நாடுகளையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது.

இதனூடாக இன்று உலகலாவிய ரீதியில் இன்னுமொரு மறைமுக ஆக்கிரமிப்பு நடைப்பெற்றுக் கொண்டிருப்பதை நம்மில் எத்தனை பேர் அறிவார்கள்?

கொரோனாவின் ஆக்கிரமிப்பையும் தாண்டி இன்று தனிப்பட்ட ரீதியில் உளவியல் ரீதியான போர் ஒன்று சமூக வலைத்தளங்கள் மூலம் ஒவ்வொருவருக்குள்ளும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதாவது இன்று தொலைக்காட்சி, வானொலி, தொலைப்பேசி போன்ற எதை எடுத்துக் கொண்டாலும் அங்கு முக்கால்வாசி செய்திகள் கொரோனாவை பற்றியதாக தான் காணப்படுகின்றன.

உதாரணமாக கொரோனா தாக்குதலின் மரண வீதம், தொற்றாளர் வீதம், குணமடைந்தோர் வீதம் மற்றும் வீதியில் விழுந்து கிடந்தவர், மூச்சுத் திணறலில் அவதிப்படுபவர், பிரேதங்களும் பிரேத அறைகளும், அடக்கஸ்தலங்கள் என்று வரக்கூடிய செய்திகளில் பெரும்பாலான செய்திகள் எதிர்மறை எண்ணங்களையே தோற்றுவிக்கின்றன.

இதனால் ஒவ்வொரு தனிமனிதனது ஆழ்மனதில் இவ்வாறான எதிர்மறை சிந்தனைகளே ஆழமாக பதிக்கப்படுகிறது.

மனம் பலவீனமான மக்கள் இவ்வாறான செய்திகளால் உடனடியாக உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் ஒவ்வொரு நொடியையும் அச்சத்துடன் கழிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்படுகின்றனர். இயல்மாகவே தனிமையை நாடி சமூகத்தில் இருந்து விலகி இருக்க விரும்புகின்றனர்.

மேலும் அறுபது வயதிற்கு மேற்பட்டவர்கள் தான் அதிகம் கொரோனா தாக்கத்தினால் மரணிக்கின்றனர் என்றும் அடுத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் கொரோனா தொற்றுக்குள்ளாக வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுவதால் வயோதிபர்களும் கர்ப்பிணிகளும் தினம் தினம் இதே நினைப்பிலேயே பயத்துடன் தமது வாழ்க்கையை விரக்தியுடன் கழிக்க வேண்டியுள்ளது. இதனால் அவர்கள் உளவியல் ரீதியாக பக்கவாத நிலைக்கு ஆளாகின்றனர்.

அடுத்து வாட்ஸ்அப் பேஸ்புக் மூலம் இளைஞர்களும் நடுத்தர வயதினரும் பாதிக்கப்படுகின்றனர். அவர்களும் தினமும் கொரோனா பற்றிய செய்திகளையே தேடித்தேடி படிக்கின்றனர். இதனால் எல்லோரது மனநிலையும் கொரோனாவை மையப்படுத்தி மட்டுமே சுழன்று கொண்டிருக்கிறது.

இதன் விளைவாக தான் ஒருவருக்கு ஒரு சிறு தும்மலோ, தடுமலோ வந்தால் அவர்கள் உடனே இது கொரோனா தான் என்று அவர்களே அவர்களுக்கு தீர்ப்பு சொல்லி கடினமான நாட்களை கடக்கின்றனர்.

உலகம் முழுவதும் மரணமும் இறப்பும் தினமும் நடைபெற்றுக்கொண்டுத்தான் உள்ளது. இலங்கையில் 2020 ஆம் ஆண்டுக் கணக்கின்படி சராசரியாக நாளொன்றுக்கு 375 பேர் மரணிக்கின்றனர். அவ்வாறே ஒரு நாளைக்கு சராசரியாக 835 குழந்தைகள் பிறக்கின்றனர்.

எனவே கொரோனா மரணம் தொடர்பாக தினமும் இரவு நேரத்தில் வரும் அவசர செய்திகளைக் கண்டு மனதை அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் ஒவ்வொரு நாளும் சராசரியாக மரணிப்போரில் 45% – 55% ஆனோர் கொரோனா தொற்று என்று அடையாளம் காணப்பட்டாலும்; அவர்களுக்கு பிற நோய் அறிகுறிகளும் இருக்கின்றமை மறுக்க முடியாத உண்மையாகும்.

2017 ஆண்டு அறிக்கைகளின் படி தினமும் நாளொன்றுக்கு இலங்கையில் 109 பேர் போதைப்பொருள் பாவனையால் இறக்கின்றனர். ஆனால் இன்று கொரோனாவில் மரணிப்போரை அறிக்கையிடுவது போல் தினமும் போதைப்பொருள் பாவனையால் மரணிப்போரை அறிக்கையிடுவதில்லை.

அவ்வாறு அறிக்கை வெளியிட்டு வந்தால் இலங்கையின் போதைப்பொருள் பாவனையை குறைத்திருக்கலாம் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.

உளவியல் கூறுகிறது தொடர்ச்சியாக ஒரு விடயம் பற்றி பேசப்படுமேயானால், அதாவது அது நல்லதோ கெட்டதோ தொடர்ந்து எதிர்மறையாக பேசப்பட்டால் எமது சிந்தனையும் அதற்கேற்றாற் போல இசைவாக்கம் அடைந்து விடும். இதனால் சாதாரண அறிகுறிகள் கூட எமக்கு கொரோனாவாகத் தான் தென்படும். பலருக்கு இது தான் இன்றைய மனநிலை.

எங்கேயோ முடிய வேண்டிய ஒரு பிரச்சினையை நாம் தான் இன்று மரணம் வரை இழுத்து பிடித்து கொண்டு அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறோம். மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போலத்தான் நம் நிலையும் உள்ளது.

எதிர்மறையான செய்திகளால் நாமே நமக்குள் மரண பயத்தை திணித்துக் கொள்கிறோம். இதனால் சிறிய சிறிய இன்பங்களை கூட சுவைக்காமல் மனம் தளர்ந்து வாழ்க்கையை கொண்டு செல்கிறோம்.

இதுவல்ல நம் பிரச்சினைக்கான தீர்வு! இது அடுத்த பிரச்சினைக்கான வரவேற்பு!

அதிகமாக இவற்றையே யோசித்து யோசித்து நாம் உளவியல் நோய்களுக்கு ஆளாகுவது தான் இறுதியில் மிஞ்சும்.

எதிர்மறையான செய்திகளால் உடைந்து போகாமல் கொரோனாவில் இருந்து மீண்டு வருவதற்கான வழிகளையும், தீர்வுகளையும் தான் நாம் தேட வேண்டும்.

உள்ளம் சீரானால் ஏனைய எல்லா விடயங்களும் சீராகும் என்பது எவ்வளவு ஆணித்தரமான உண்மை. உள்ளம் குழப்பத்தில் இருப்பதால் தான் ஏனைய விடயங்களை கூட எம்மால் ரசிக்க முடியாதுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க சுகாதார வழிமுறைகளை முறையாக பேணி வந்தாலே போதும் பாதி பிரச்சினை தீர்ந்து விடும். அவ்வாறு வீட்டில் இருக்கக் கூடிய நாட்களில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக ஒற்றுமையாக புரிந்துணர்வுடன் வாழம் போது தான் உறவுகளும் அழகாகிறது.

எனவே உங்கள் உறவுகளை நீங்களே அழகாக்கி கொள்ளுங்கள். நாம் தொடர்ந்தும் இது பற்றி சிந்திக்காமல் தத்தமது சுய முன்னேற்றம், கல்வி, தொழில், குடும்ப வாழ்வு பற்றி சிந்தித்து செயல்பட்டால் வாழ்க்கை இன்னும் அழகாகும். எனவே எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். நீங்கள் இருக்கும் இடங்களையும் புன்னகையால் நிரப்புங்கள்.

நோய்கள் வருவதும் குணமடைவதும் இயல்புதான். நோயைப் படைத்தவனே அதற்கு ஒரு தீர்வையும் வைத்திருப்பான் என்று நம்புங்கள். ஒருநாள் இதுவும் கடந்து போகும். ஆனால் நீங்கள் இழந்த நாட்களை திரும்ப பெற முடியாது. எனவே இருக்கும் வரை மனநிறைவோடு வாழுங்கள்.

ஒவ்வொரு நொடியையும் சந்தோசமாக குடும்பத்தினருடன் கழியுங்கள். வீட்டில் இருக்கக் கூடிய இக்காலத்தில் நண்பர்களுடன் உறவினர்களுடன் தாராளமாக மனம் விட்டு கதையுங்கள். தொலைபேசியில் தொடர்புகளை வைத்திருங்கள். பிடித்த விளையாட்டுக்களை விளையாடுங்கள். பிடித்த சமையலை சமைத்தெடுங்கள். புதிதாக ஏதாவது முயற்சி செய்யுங்கள். இயற்கையை கொஞ்சம் திரும்பிப் பாருங்கள். செல்லப்பிராணிகளோடு கொஞ்சம் நேரம் செலவிடுங்கள். குழந்தைகளின் குறும்புகளை அணைத்திடுங்கள். தாய் தந்தையின் முகத்தை பாருங்கள். மனைவியின் கோபத்தை வென்றிடுங்கள். பிள்ளைகளின் தனிமையை போக்குங்கள். வாழ்க்கை என்றால் என்னவென்று புரியும்.

 

மீண்டும் இந்த நாட்கள் கிடைக்குமா என்று தெரியாது.மீண்டும் நீங்கள் பரபரப்பான உலகுக்குள் செல்ல வேண்டி வரலாம்.எனவே அதற்கு முன் கிடைத்துள்ள இந்த சொற்ப இடைவெளியை சிறப்பாக கழியுங்கள்.

ஆம்! என்றோ ஒருநாள் இவை கடந்து போயிருக்கும். அப்போது உங்கள் கைகளில் இந்த அழகிய நினைவுகளே நிறைந்திருக்க வேண்டும். மாறாக கசப்பான நினைவுகள் அல்ல.

Noor Shahidha
SEUSL
Badulla

இன்று முழு உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு பெயர் தான் கொரோனா. கொவிட் 19 என்ற பெயரால் அறிமுகமான வைரஸ் இதுவாகும். இது சுமார் இரு வருட காலமாக இலங்கையை மட்டும் அல்லாது சர்வதேச…

இன்று முழு உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு பெயர் தான் கொரோனா. கொவிட் 19 என்ற பெயரால் அறிமுகமான வைரஸ் இதுவாகும். இது சுமார் இரு வருட காலமாக இலங்கையை மட்டும் அல்லாது சர்வதேச…