நாட்டுக்கும், முஸ்லிம் சமூகத்துக்கும் பெரும் பணியாற்றிய சேர் ராசிக் பரீட்

  • 8

மர்லின் மரிக்கார்

இலங்கையின் சுதந்திரத்திற்கும் முஸ்லிம்களின் சமூக, கலாசார, கல்வி மேம்பாட்டுக்கும் அளப்பரிய பங்களிப்புகளை நல்கிய முன்னாள் அமைச்சர் சேர் ராசிக் பரீட் அவர்களின் 37 வது நினைவு தினம் (23.08.2021) இன்றாகும்.

அனைத்து மக்களதும் ஐக்கியத்திற்காகவும் நாட்டின் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே உழைத்து வந்தவர் சேர் ராசிக் பரீட். அதேநேரம் இலங்கை முஸ்லிம்களின் தனித்துவ அடையாளங்களைப் பாதுகாப்பதில் அவர் அதிக அக்கறை எடுத்துக் கொண்டார்.

சேர் ராசிக் பரீட், சுதந்திரத்திற்கு முன்னரான சட்ட நிரூபண சபையின் முஸ்லிம்களுக்கான அங்கத்தவர் அப்துல் ரஹ்மான் மற்றும் ஹாஜரா உம்மா தம்பதியினருக்கு மகனாக 1893 டிசம்பர் 29 ஆம் திகதி பிறந்தார். இவரது தந்தையான அப்துல் ரஹ்மான் சுதந்திரத்திற்கு முன்னர் 1900 – 1915 வரை சட்ட நிரூபண சபையில் அங்கத்தவராக இருந்தார்.

அதேநேரம் அப்துல் ரஹ்மானின் தந்தையும் ராசிக் பரீட்டின் பாட்டனாருமான வாப்புச்சி மரைக்கார் இந்நாட்டின் முன்னணி கட்டட கலைஞரும் கட்டட ஒப்பந்தக்காரரும் பெரும் நிலச்சுவாந்தருமாவார்.

ராசிக் பரீட் தமது மூன்றாவது வயதில் தாயை இழந்தார். ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை பம்பலப்பிட்டி பேர்னடாட் பாடசாலையிலும், அதன் பின்னர் மருதானை ஸாஹிரா கல்லூரியிலும், ரோயல் கல்லூரியிலும் பெற்றுக் கொண்டார்.

1915 இல் இலங்கை பாதுகாப்புப் படையில் கோப்ரலாக இணைந்ததோடு, 1916 இல் லெப்டினன்டாக பதவி உயர்வு பெற்றார். முதலாம் உலகப் போர் காலத்தில் இலங்கை பாதுகாப்பு குழுவின் அங்கத்தவராக கடமையாற்றினார்.

சேர் ராசீக் பரீட்டின் தந்தைக்கும் எஸ்.டப்ளியூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் தந்தைக்கும் இடையில் மிக நெருக்கமான உறவு நிலவி வந்தது. இந்தச் சூழலில் கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலுக்கு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அமரர் பண்டாரநாயக்கா மருதானை வட்டாரத்திலும், சேர் ராசிக் பரீட் புதிய பஸார் வட்டாரத்திலும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இருவரும் ஏக காலத்தில் மாநகர சபை உறுப்பினர்களாக இருந்து தாம் பிரதிநிதித்துவப்படுத்திய மக்களுக்கு சேவையாற்றினர்.

1936 இல் சட்ட நிரூபண சபைக்கு நடைபெற்ற தேர்தலில் பண்டாரநாயக்கா வெயாங்கொடை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதே ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதியாக ராசிக் பரீட் சட்ட நிரூபண சபைக்கு நியமனம் பெற்றார். இச்சபையில் எஸ்.டப்ளியூ.ஆர்.டி. பண்டாரநாயக்க தலைமையிலான உள்ளூர் நிர்வாகக் குழுவில் ராசிக் பரீட் 1936 முதல் 1942 வரை அங்கம் வகித்தார்.

1936 ஆம் ஆண்டில் ராசிக் பரீட் ‘பாடசாலைகளில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்களுக்கு இஸ்லாம், அரபு பாடங்கள் போதிக்கப்பட வேண்டும். அதற்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். அந்த ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதற்கு பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்வதோடு பயிற்சி கலாசாலைகளும் உருவாக்கப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தும் பிரேரணையை சட்ட நிரூபண சபைக்கு கொண்டு சென்றார்.

அப்பிரேரணைக்கு அமைய பேராதனை பல்லைக்கழகத்தில் அரபு மொழி மற்றும் இஸ்லாம் கற்கைத்துறை ஆரம்பிக்கப்பட்டதோடு அட்டாளைசேனையிலும், அளுத்கமவிலும் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகள் அமைக்கப்பட்டன. இதற்கு சி.டப்ளியூ.டப்ளியூ. கன்னங்கரா தலைமையிலான கல்விக் குழுவில் 1942 முதல் அவர் அங்கம் வகித்தமையும் பெரிதும் உதவியது. அத்தோடு முஸ்லிம் பிரதேசங்களில் முஸ்லிம் அரச பாடசாலைகள் அமைக்கப்படவும் அவர் வழிவகுத்தார்.

சட்ட நிரூபண சபையிலும் அதற்கு வெளியிலும் எஸ்.டப்ளியூ.ஆர்.டி பண்டாரநாயக்க, டி.எஸ். சேனநாயக்க, டி.எம். ராஜபக்ஷ, டி.ஏ. ராஜபக்ஷ, சி.டப்ளியூ.டப்ளியூ கன்னங்கர உள்ளிட்ட பல தலைவர்களுடனும் நெருங்கி செயற்பட்ட ராசிக் பரீட், இந்நாட்டின் சுதந்திரத்திற்காகவும் பெரிதும் பங்களிப்பு நல்கியுள்ளார். 1945 இல் அரச பேரவையில் முன்வைக்கப்பட்ட சுதந்திர இலங்கைச் சட்டத்தை ஆதரித்த ராசிக் பரீட், அது தொடர்பில் விஷேட உரையையும் நிகழ்த்தினார்.

இதேவேளை இலங்கையின் முதலாவது தேசியக் கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சியை 1946 இல் ஸ்தாபிப்பதற்கு முன்னின்று உழைத்தவர்களில் ராசிக் பரீட் ஒருவராவார்.

1947 முதல் செனட் சபை உறுப்பினராக இருந்த அவர், 1952 இல் அப்பதவியை இராஜிநாமா செய்து விட்டு கொழும்பு மத்திய தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து 1956 தேர்தலிலும் வெற்றி பெற்ற இவர், 1959 இல் டப்ளியூ. தஹநாயக்கவைப் பிரதமராகக் கொண்டு அமைவுற்ற அரசாங்கத்தில் வர்த்தக அமைச்சரானார்.

ஆனால்1960 மார்ச்சில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற இவர், 1960 ஜுலையில் நடைபெற்ற தேர்தலில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டினார்.

1964 இல் பிரதமர் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கவுக்கு எதிராக சி.பி.டி.சில்வா தலைமையில் எதிரணிக்கு சென்ற 13 பாராளுமன்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவராவார்.

1965 இல் ஆளுநரால் நியமிக்கப்பட்ட குழுவில் ராசிக் பரீட் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். அத்தோடு 1967 மே முதல் செப்டம்பர் வரை குழுக்களின் பிரதித் தலைவராகவும், 1967 செப்டம்பர் முதல் 1968 பெப்ரவரி வரை பிரதி சபாநாயகராகவும் பாராளுமன்ற குழுக்களின் தலைவராகவும் நியமனம் பெற்றார்.

1968 இல் பாராளுமன்றத்திலிருந்து ஓய்வு பெற்ற இவர், பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமனம் பெற்றார். 1970 வரையும் அவர் அப்பதவியை வகித்தார்.

இவ்வாறு பொதுவாழ்வில் பல்வேறு பதவிகளை வகித்துள்ள இவர், முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டதோடு ஏழை மக்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் அயராது உழைத்தார்.

கொழும்பில் வறிய மக்கள் வாழும் பிரதேசங்களில் மகப்பேற்று மருந்தகங்களையும் வைத்தியசாலைகளையும் அமைத்தார். கொழும்பில் முஸ்லிம் பெண் பிள்ளைகளுக்கென தமது சொந்தக் காணியில் இரண்டு ஏக்கரை ஒதுக்கி 20 மாணவிகளுடன் பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரி 1946 செப்டம்பர் 20 இல் உருவாகவும் இவர் வழிவகுத்தார்.

அத்தோடு அகில இலங்கை சோனக சங்கம் மற்றும் சோனக இஸ்லாமிய கலாசார நிலையம் என்பவற்றை அமைத்து அவற்றுக்கு தலைமை தாங்கி முஸ்லிம்களின் சமூக, கல்வி, கலாசார அடையாளங்களைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் கூட உழைத்தார்.

பாடசாலைகளில் இஸ்லாம் பாடம் கற்பிக்கவென அவர் ஒரு மாதிரி பாடநூலையே வெளியிட்டார். அதேநேரம் அரபு தமிழுக்கு முன்னுரிமை அளிக்கவும், யூனானி மருத்துவத் துறையின் மேம்பாட்டுக்கு பங்களிக்கவும் அவர் தவறவில்லை.

மக்கள் மத்தியில் தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதிலும் கவனம் செலுத்தினார்.

தேசாபிமான உணர்வும் சமூகப்பற்றும் பொதுநல மனப்பாங்கும் சேவை உணர்வும் அவரிடம் காணப்பட்டன. ஒரு தடவை டப்ளியூ. தஹநாயக்க, ‘சோனகரின் முடிசூடாத மன்னர் ராசிக் பரீட் என்பதில் ஐயமில்லை’ என்றார்.

கொழும்பு மாநாகர சபை ஊடாக அரசியலில் பிரவேசித்து சட்ட நிரூபண சபை, செனட் சபை, பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர், குழுக்களின் பிரதித்தலைவர், பிரதி சபாநாயகர் பாராளுமன்ற குழுக்களின் தலைவர் என பல்வேறு உயர் பதவிகள் ஊடாகவும் இராஜதந்திர சேவை மூலமும் நாட்டுக்கும் சமூகத்திற்கும் அளப்பரிய சேவையாற்றிய இவர், 1984 ஓகஸ்ட் 23 ஆம் திகதி தனது 91 வது வயதில் காலமானார்.

இவர் நாட்டுக்கு ஆற்றிய சேவையைக் கௌரவிக்கும் வகையில் 1988 மே 22 ஆம் திகதி தபால் முத்திரை வெளியிட்டு அரசினால் கௌரவிக்கப்பட்டார்.

மர்லின் மரிக்கார் இலங்கையின் சுதந்திரத்திற்கும் முஸ்லிம்களின் சமூக, கலாசார, கல்வி மேம்பாட்டுக்கும் அளப்பரிய பங்களிப்புகளை நல்கிய முன்னாள் அமைச்சர் சேர் ராசிக் பரீட் அவர்களின் 37 வது நினைவு தினம் (23.08.2021) இன்றாகும். அனைத்து…

மர்லின் மரிக்கார் இலங்கையின் சுதந்திரத்திற்கும் முஸ்லிம்களின் சமூக, கலாசார, கல்வி மேம்பாட்டுக்கும் அளப்பரிய பங்களிப்புகளை நல்கிய முன்னாள் அமைச்சர் சேர் ராசிக் பரீட் அவர்களின் 37 வது நினைவு தினம் (23.08.2021) இன்றாகும். அனைத்து…