வெற்றி கிண்ணங்களை அடுக்கடுக்காக வாங்கிக் குவிக்கும் மஹேல ஜயவர்தன

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் ,நட்சத்திர வீரருமான மஹேல ஜயவர்தன ஒரு பயிற்சியாளராக வெற்றிகரமாக செயல்பட்டு வருவதாக இரசிகர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஐபிஎல் போட்டிகளில் 2017 ஆம் ஆண்டில் பொறுப்பேற்றுக் கொண்ட மஹேல ஜயவர்தன, 2017 ஆம் ஆண்டில் முதல் தொடரிலேயே மும்பைக்கு ஐபிஎல் கிண்ணம் வென்று கொடுத்திருந்தார.

அதன் பின்னர் 2019, 2020 ஆகிய ஆண்டுகளிலும் மஹேல ஜயவர்தன மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கிண்ணம் வென்று கொடுத்திருந்தார். மொத்தம் 4 தொடர்களில் மஹேலவின் பயிற்றுவிப்பில் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று கிண்ணங்கள் வெற்றி கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்போது இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் புதிய வகை கிரிக்கெட் தொடரான 100 பந்துகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ‘The Hundred’ தொடரிலும் மஹேல ஜயவர்தன தலைமை பயிற்சியாளராக செயற்பட்ட Southern Brave அணி கிண்ணத்தை வென்று அசத்தியது. ஆக மொத்தத்தில் மஹேல ஜயவர்தன பயிற்றுவிப்பு பணியைத் தொடங்கிய கடந்த 4 ஆண்டுகளில் இப்போது நான்காவது கிண்ணம் மஹேலவின் பயிற்றுவிப்புக்கு கிடைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மஹேல ஒரு அணித்தலைவராக இலங்கைக்கு வெற்றி கிண்ணங்கள் வென்று கொடுக்காவிட்டாலும் பயிற்சியாளராக மிகச் சிறப்பாகவே செயல்படுகின்றார். இதன் காரணத்தால் கால்பந்து உலகில் கிண்ணங்கள் பலவற்றை வெற்றிகொண்ட பெப் கார்டியாலோ போன்று கிரிக்கெட் உலகின் மிகச் சிறந்த பயிற்சியாளராக மஹேல இருக்கிறார் என முன்னாள் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் டரன் கஃப் கருத்து தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.