ஈஸ்டர் தாக்குதலை நல்லாட்சி அரசு முன்கூட்டியே தெரிந்து வைத்திருந்தது

  • 12

எம். அமீனுல்லா

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஆராயவென நல்லாட்சி அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு வழங்கிய தீர்ப்பு நியாயமற்றது. அத்தீர்ப்பைத் திருத்த அரசாங்கம் தலையிட வேண்டும் என்று சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்களான நந்தன முனசிங்க மற்றும் தேசபந்து தென்னக்கோன் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கண்டி அஸ்கிரிய மகாவிகாரைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் வருகை தந்த அவர்கள், அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரான வண.வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரரிடம் இது தொடர்பான கடிதம் ஒன்றையும் சமர்ப்பித்தனர்.

அங்கு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்கோன் குறிப்பிட்டதாவது:

“ஜனாதிபதி ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு முடிவு யுத்த காலத்தில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றிய பொலிஸ் அதிகாரிகள் பலர் தமது தொழில் மற்றும் ஓய்வூதிம் போன்றவற்றை இழந்து வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலைமையை உருவாக்கி வருகின்றது.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் நடந்த போது மேல்மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணத்தில் அரச புலனாய்வுத்துறையில் கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் பலர் தற்போது இங்குள்ளனர். தாக்குதல் தொடர்பாக தகவல்களை தாமதமின்றி பொலிசாருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியமளித்த பலர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இருப்பினும் புலனாய்வு விடயங்கள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக சரியான வழிகாட்டல்கள் எதுவும் பாதுகாப்பு அமைச்சினால் பொலிசாருக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை. அப்போது யுத்தம் நிறைவடைந்து நாட்டில் அமைதி காணப்பட்டது. நல்லிணக்கம் என்ற பேரிலேயே அன்றைய அரசு தொழிற்பட்டது. விசேடமாக முஸ்லிம் சமூகத்துடன் மிக நெருக்கமாக செலாற்றியதால் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புகள் பற்றி அன்றைய அரசு ஆழமாக தேடிப் பார்க்கவில்லை. அன்றைய அரசு அதனை மேற்கொள்ளத் தவறி விட்டது. பூரணமான அமைதி நிலை நாட்டில் காணப்பட்டது.

அப்படியான சூழ்நிலையில் துரதிர்ஷ்டமான மேற்படி நிலைமை ஏற்பட்டு 300 இற்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகின. இது போன்ற பயங்கரவாத தாக்குதல்கள் மாபோதிய, மத்திய வங்கி போன்ற இடங்களிலும் நடந்தன. அ​மெரிக்காவில் கூட பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்தன. உலகில் எங்கும் மேற்கொள்ளப்படாத ஒரு நடவடிக்கையாக கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசு முட்பட்டுள்ளது.

30 வருட யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த ஒரு பெரிய குழுவிற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழுவினால் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அப்பிரதேசத்தில் கடமை புரிந்த ஒரே காரணத்திற்காக நேரடியாவோ, மறைமுகமாகவோ அதனுடன் தொடர்பில்லாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை முழு பொலிஸ் துறையும் வன்மையாகக் கண்டிக்க வேண்டியுள்ளது. அவர்களது ஓய்வூதியத்திற்குக் கூட பிரச்சினை ஏற்பட்டுள்ளது”. இவ்வாறு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன் அங்கு தெரிவித்தார்.

இது தொடர்பாக மொனராகலை பிரிவுக்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசில குமார ஹேரத் தெரிவித்ததாவது:

30 வருட யுத்தத்தின் போது எமது உயிரைக் கூட மதிக்காது கடமையாற்றி இன்று வரை கடமையிலுள்ளோம். இன்று இங்கு வரக் காரணம் 2019 ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தினத்தில் கடமையாற்றிய ஒரே குற்றத்திற்காக தூக்கு மேடைக்கு, சிறைச்சாலைக்கு, அல்லது தொழிலை இழந்த நிலையில் வீடுகளுக்கு போவதை தவிர்த்துக் கொள்வதற்காகவாகும்.

தலதா மாளிகைக்கும் சென்று எமது நேர்திக்கடனைச் செலுத்தி அதன் பின்னர் மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களுக்குச் சென்று தொழிலையும் உயிரையும் பாதுகாத்துக் கொள்வதற்காகவாகும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் 300 பேருக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். அதே அளவு மக்கள் காயமடைந்தனர். அப்படியானவர்களை எமது கரங்களால் அன்று வைத்தியசாலைகளுக்கு தூக்கிச் சென்றவர்கள்தான் இன்று இங்கு வந்துள்ளோம். அன்று அவ்வாறு எமது கடமைகளைச் செய்து இன்று பாதிக்கப்பட்ட ஒரு குழுவாக நாம் உள்ளோம். அன்றைய நல்லாட்சி அரசு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பற்றி தகவல்களை சேகரிக்க மட்டுமே எமக்கு உத்தரவிட்டதே தவிர, அது பற்றி நடவடிக்கை எடுக்கும்படி வழிகாட்டல்களை மேற்கொள்ளவில்லை. எமக்கு தகவல்கள் கிடைத்த நேரம்தான் துரதிர்ஷ்டவசமாக பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் நடந்தன. மேற்படி சம்பவம் நடந்த போது நாம் கடமையில் இருந்தோம். பாதிக்கப்பட்டவர்களது இரத்தம் எமது கரங்களில் தோய்ந்துள்ளது. எம்மால் நூற்றுக்கணக்கானவர்களை காப்பாற்ற முடிந்தது.

நல்லாட்சி அரசு நியமித்த ஆணைக்குழு அறிக்கை காரணமாக எதிர்காலத்தில் நாம் தூக்குமேடைக்கு அல்லது சிறைக்குச் செல்ல வேண்டி ஏற்படலாம். தொழிலை இழந்து வேறு தொழிலைத் தேட முடியாமல் வெறுங்கையுடன் வீடு செல்ல வேண்டி ஏற்படும். இந்தத் துயரத்தை முறையிட வேண்டிய அனைவரிடமும் நாம் முறையிட்டு விட்டோம். நல்லாட்சியின் தவறான மேற்படி முடிவு காரணமாக முழு பொலிஸ் துறையும் செயல் இழந்து இருந்தது. நாம் சிறை செல்ல வேண்டி வரும் என எமது குடும்ப அங்கத்தவர்களும் உறவினர்களும் அழுகையுடன் இருக்கின்றனர். எனவே மகாநாயக்கத் தேரர்களிடம் முறையிட்டு எமது வேண்டுகோளை முன்வைக்க வந்துள்ளோம்.

பேரருட்திரு கர்தினால் பற்றி நாம் எதையும் கூற விரும்பவில்லை. உயிர்களைக் காப்பாற்ற நாம் எடுத்த நடவடிக்கைகளின் விளைவாக எமது கரங்களில் இரத்தம் தோய்ந்துள்ளதை அவர் கண்டுள்ளார். கர்தினால் அவர்கள் தமது மக்கள் சார்பாக குரல் எழுப்புவது அவர் கடமை. ஆனால் எமது சார்பில் யாரும் குரல் எழுப்பவில்லை. இதில் பாதிக்கப்பட்ட 20 –25 பொலிசார் வரை உள்ளோம்.

தலதா மாளிகைக்கும், மாபோதிக்கும் அன்று பயங்கரவாதிகள் தாக்குதல் மேற்கொண்ட போது உயிர்கள் பலியாகின. உலகில் பல்வேறு இடங்களில் இவ்வாறு தாக்குதல்கள் நடந்தன. ஆனால் உலகில் எங்காவது அத்தகைய சந்தர்ப்பத்தில் கடமையில் இருந்த பொலிசார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியைக் கைது செய்யச் சென்ற ஒரு பொலிஸ் அதிகாரி கொல்லப்பட்டார்.

பிரதி பொலிஸ் மாஅதிபர் சந்தன அத்துகோரள அன்று நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்கு பொறுப்பாக இருந்தார். தற்போது நுவரெலியா பிராந்திய பிரதி பொலிஸ் மாஅதிபராக உள்ளார். இன்னும் சில தினங்களில் அவர் ஓய்வு பெற உள்ளார். எமக்குக் கிடைத்த தகவலின்படி 39 வருட சேவை​யைப் பூர்த்தி செய்துள்ள அவர், இப்பிரச்சினை காரணமாக ஓய்வூதியம் இன்றி வெறுங்கையுடன் வீடு செல்ல உள்ளதாக அறிகிறோம். இத்தகைய அநீதி வேண்டாம்.

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்தப்படுமென்தை நல்லாட்சி அரசு ஏற்கனவே தெரிந்து வைத்திருந்தது. எமது உயர் அதிகாரிகளுக்கு இது பற்றி தகவல்களை மட்டும் சேகரிக்கவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. நல்லாட்சி அரசு தமது குறையை மறைக்க அப்பாவி பொலிஸார் 25 – 30 பேரை பணயம் வைத்துள்ளது.

எமக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க உள்ளனர். வழக்கு ஒன்று நடக்குமாயின் நாம் சாட்சியம் வழங்க கடமைப்பட்டுள்ளோம். வழக்கிலிருந்து எம்மை நீக்குமாறு நாம் கோரவில்லை. ஆனால் எம் மீது விதிக்கப்பட்டுள்ள களங்கத்தையே நீக்கக் கோருகிறோம். வழக்கு தொடரப்பட்ட பின்னர் எமது தொழில் பறிபோய் விடும். ஓய்வூதியம் இல்லாமற் போகும். அதன் பிறகு எமக்கு மகாநாயக்க தேர்களைக் கூட சந்திக்க முடியாது போகும். நல்லாட்சி செய்த தவறை எமது தலையில் போட முயற்சிக்கப்படுகிறது.

நாம் தவறு செய்யவில்லை. அன்று நாம் செய்த ஒரே தவறு அன்று கடமையில் இருந்ததாகும். அன்று நாம் கடமையில் இல்லை என்றால் இப்படியான ஒரு நிலை ஏற்பட்டிருக்காது. 34 வருட சேவையின் பின்னர் இன்னும் மூன்று நான்கு வருடங்களில் ஓய்வு பெற உள்ளேன். குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டால் எனது ஓய்வூதியம் நிறுத்தப்பட்டு விடும்.

தாக்குதல் நடத்தியவர்கள் முஸ்லிம் பயங்கரவாதிகள். பாதிக்கப்பட்டவர்கள் கிறிஸ்தவ, இந்து, முஸ்லிம், பௌத்த மக்கள். ஆனால் இவர்கள் சார்பாக தண்டனை பெற இருப்பவர்கள் பௌத்த பொலிஸ் அதிகாரிகளாவர். அது அநீதியாகும்.

எனவே எமக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையோ, நீதிமன்ற நடவடிக்கையோ வேண்டாம். பொலிஸ் துறையை வீண் தண்டனைக்கு உள்ளாக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்”. இவ்வாறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசில குமார ஹேரத் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்தார்.

 

எம். அமீனுல்லா ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஆராயவென நல்லாட்சி அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு வழங்கிய தீர்ப்பு நியாயமற்றது. அத்தீர்ப்பைத் திருத்த அரசாங்கம் தலையிட வேண்டும் என்று சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்களான நந்தன…

எம். அமீனுல்லா ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஆராயவென நல்லாட்சி அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு வழங்கிய தீர்ப்பு நியாயமற்றது. அத்தீர்ப்பைத் திருத்த அரசாங்கம் தலையிட வேண்டும் என்று சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்களான நந்தன…