கொரோனா காலத்தில் வீட்டில் முடங்கிக் கிடக்கும் சிறார்கள்!

வீ.ஆர் வயலட்
னஉதித குணவர்தன

பிள்ளைகள் நாட்டின் எதிர்காலம் ஆவர். எதிர்காலத்துக்குச் செய்யும் சிறந்த முதலீடு சிறார்களுக்கு சிறந்த கல்வியை பெற்றுக் கொடுப்பதும் அவர்களின் மனநிலையை உயர்ந்த தரத்தில் பேணுவதுமாகும். அதனை யாரேனும் செய்யத் தவறினால் அது நாட்டை இருளில் தள்ளுவதற்கு ஒப்பானதாகும்.

அதனால் சிறுவர் நலனைப் பேண என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். தற்போது கடந்த ஒன்றரை வருட காலமாக எமது பிள்ளைகள் சரியான முறையில் கல்வியைப் பெறவில்லை. அவர்கள் ஒன்லைன் மூலமாகவே கல்வியை கற்கிறார்கள். இந்த முறையானது காலத்துக்கு ஏற்றதாக இருந்தாலும், பிள்ளைகளின் மனநிலை சரியான முறையில் பேணப்படுவதில்லை.

பிள்ளைகளின் உளநிலை பற்றி ஆய்வு நடத்துபவர்கள் “ஒன்லைன் மூலம் கல்வி கற்க முடியும் என்றாலும், பிள்ளைகளின் மனதில் திருப்தியின்மையே நிலவுகிறது” என தெரிவிக்கிறார்கள். அது சிறுவர்களின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல.

அவர்களின் மனநிலையை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். ‘ஒவ்வொரு கருமேகத்துக்கும் பின்னால் வெள்ளிக்கீற்றொன்று உண்டு’ என்று ஒரு கூற்றொன்றுண்டு. அதனால் தற்போது ஏற்பட்டுள்ள இருண்ட சூழலில் ஒளியைக் காணும் முறைகளை நாம் உருவாக்க வேண்டும். தற்போதுள்ள தரவுகளின்படி வீடுகளில் முடங்கிப் போயுள்ள பிள்ளைகளில் நூற்றுக்கு நாற்பது சதவீதமானோர் மனஅழுத்த நிலைமைக்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந் நிலைமையை மாற்ற என்ன செய்யலாம் என்பதை ஆராய வேண்டும். சாதாரண குழந்தையொன்று சாதாரண வாழ்க்கை வாழுமென்றால் பாடசாலையில் தொடர்ந்து கல்வி நடவடிக்கையில் ஈடுபடாது. கல்வி கற்பதோடு வேறு வெளி நடவடிக்கைகளிலும் ஈடுபடும். விளையாட்டு அதில் முக்கிய ஒன்றாகும். ஆனால் தற்போது அவை அனைத்தும் அவர்களுக்கு இல்லாமல் போயுள்ளன.

அது அவ்வாறு நடந்துள்ளது என்பதால் நாம் எதிர்பார்ப்புகளை கைவிட முடியாது. தற்போதைய நிலைமையில் கூட சிறந்தவைகளுக்கான பாதையை திறக்க முடியும். இன்று பிள்ளைகள் பெரும்பான்மையான நேரத்தை பெற்றோருடனேயே கழிக்கிறார்கள். பெற்றோரும் முன்னரைப் போல் பரபரப்பாக இல்லை. அதனால் பிள்ளைகளுடன் வாழ்க்கையின் அம்சங்களை பகிர்ந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

அதனால் அதனை புரிந்து கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பிள்ளைகளுக்கு நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். தற்போது பிள்ளைகள் ஒன்லைன் மூலம் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்வதால் அவர்களின் ஸ்மார்ட் போன் பாவனை அதிகரித்துள்ளது. பொருத்தமில்லாத யூடியூப் அலைவரிசைகளை பார்ப்பதோடு அவற்றை செயற்படுத்தவும் முனைகிறார்கள்.

கடந்த ஒன்றரை வருட காலத்தில் இந்நிலைமை மோசமடைந்துள்ளதாக விடயம் தொடர்பான ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். அதனால் இது போன்ற தவறான செயல்களில் ஈடுபடாமல் பிள்ளைகள் நல்வழியில் நடக்க வழிகாட்ட வேண்டும்.

முன்னைய நிலைமையில் பிள்ளைகள் காலையில் பாடசாலைக்கும் மாலையில் மேலதிக வகுப்புகளுக்குமே சென்றார்கள். அதனால் பிள்ளைகள் பெரும் அழுத்தத்தில் இருந்தார்கள். ஆனால் தற்போதைய நிலைமை முற்றிலும் மாறி விட்டது. பிள்ளைகளுக்கு போதுமான அளவு ஓய்வு கிடைக்கிறது. இதனைப் பயன்படுத்தி இணையத்தில் அநாவசியமாக உலாவுவதை தடுக்கவும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தலாம்.

அவர்களுக்குக் கிடைக்கும் சுதந்திரத்தை ஒழுக்கமுடன் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கலாம். ஏனென்றால் இணையம் என்பது அறிவுக் களஞ்சியம். பிள்ளைகளுக்கு அறிவை வளர்க்கும் ஆயுதம். மறுபுறம் தவறிழைக்கவும் தூண்டக் கூடியது. அதனால் பெற்றோரின் கண்காணிப்பும் அவசியமாகிறது. நாம் மேலே குறிப்பிட்டது ஒரு விடயம் மாத்திரமே. இன்னும் பல உள்ளன. அதில் பிள்ளைகள் தனிமையாக இருப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் பல உள்ளன. அதன் பலனாக சிறுவர்களே இறுதியில் பாதிக்கப்படுவதோடு அவர்கள் பல தவறுகளையும் செய்கிறார்கள்.

சிறுவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் அதன் அர்த்தம் நாட்டின் எதிர்காலமே பாதிக்கப்படுகிறது எனபதாகும். உண்மையில் அது கவலைக்குரிய விடயமாகும். அது மாத்திரமல்ல நாட்டின் எதிர்காலத்தை போறுப்பேற்க வேண்டிய பல சிறுவர்கள் அரசின் நன்னடத்தை இல்லங்களிலும் சிறுவர் இல்லங்களிலும் வசிக்கிறார்கள். பல அழுத்தங்கள் மற்றும் தவறுகள் காரணமாக அவர்கள் பாதிக்கப்படும் போது, அவர்கள் எதிர்காலத்தில் சமூகத்தில் குற்றமிழைப்பவர்களாக மாறுகிறார்கள். அவர்கள் அந்நிலைமைக்கு ஆளானது அவர்களின் தனிப்பட்ட தவறுகளால் அல்லது வேண்டுமென்றே செய்த குற்றங்களால் என கூறுவது நூற்றுக்கு நூறு வீதம் சரியல்ல. அதற்கு முக்கிய காரணம் சமூகத்திலிருந்து கிடைத்த தவறான முன்னுதாரணங்களாகும்.

அதனால் நாம் அவர்கள் குறித்து வெகு அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அவ்வாறில்லாவிட்டால் அதன் பலனை நாம் அண்மையில் கண்டோம். வயதில் மிகவும் குறைந்த பெண்ணொருவர் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைக்கமர்த்தப்பட்டு மரணமடைந்துள்ளார். இன்னொரு சந்தர்ப்பத்தில் வயது குறைந்த பெண்ணொருவர் தவறான வழியில் நடக்க தூண்டப்பட்டுள்ளார். இதற்கெல்லாம் காரணம் எமது சூழலில் காணப்படும் முரண்பாடுகளாகும்.

இளையோரை மனஅழுத்தத்தில் இருந்து விடுவித்து நல்வழிப்படுத்தும் பொறுப்பு பெரியோர்களுக்குரியது