தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்படுமா?

  • 9

தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் நிறைவு பெறும் நிலையில் அதனை நீடிப்பதா இல்லையா என்ற தீர்மானம் இன்று மாலை வெளியிடப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்து ள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை விசேட ஜனாதிபதி செயலணி அமர்வின்போது நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரணமடைந்தோரின் தொகை ஆகியவற்றை கவனத்திற் கொண்டே தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டத்தை தொடர்வதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் சுகாதார வழிமுறைகளை முறையாகப் பின்பற்றுவது நூற்றுக்கு நூறு வீதம் முறையாக இடம்பெறவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர் ஊரடங்குச் சட்டமானது புதிதாக நோயாளர்கள் உருவாவதைத் தடுக்கவும் வைரஸ் பரவலை தடுக்கவுமே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் ஒன்று கூடுவதை தவிர்ப்பதன் மூலமே வைரஸ் பரவலை தடுக்க முடியும்.

அதனைக் கவனத்திற் கொண்டு மக்கள் வீட்டிலிருந்து வெளியில் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ள அவர் அவ்வாறு செயற்படாவிட்டால் நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை தற்போதைய சூழ்நிலையில் மக்கள் சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்றி பொறுப்புடன் செயற்பட தவறுவார்களானால் தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்கு சட்டத்தை மேலும் நீடிக்க நேரிடும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அது தொடர்பில் மேற்படி சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டாக்டர் சமந்த ஆனந்த நேற்று தெரிவிக்கையில்;

நாட்டில் தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளநிலையில் சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டிய மக்களும் ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்களும் முறையாக செயற்படுவது அவசியமாகும்.

தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டத்தை முறையாக செயல்படுத்துவதற்கு நாட்டு மக்களின் முழுமையான ஒத்துழைப்பு அவசியமாகும். அவ்வாறின்றேல் ஊரடங்கு சட்டத்தை மேலும் தொடர வேண்டிய நிலை ஏற்படும்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாட்டை மூடுவது திறப்பது என்ற நிலையில் தொடர்ந்தும் பயணிக்க முடியாது. அது நாட்டு மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் பெரும் அசௌகரியமாக அமையும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கை நீடிக்குமாறு ஆலோசனைகள்

தற்போது நாடு முடக்கப்பட்டுள்ளதையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க நாட்டை தொடர்ந்து முடக்குமாறு அரசாங்கத்திடம் விசேட கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

வைத்திய நிபுணர்களின் ஆலோசனைகளை கருத்திற்கொண்டு எதிர்வரும் வாரத்தில் நாட்டை தொடர்ந்து முடக்கி வைப்பது குறித்து தீர்மானமொன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவையிடம் ரணில் விக்கிரமசிங்க பரிந்துரை செய்துள்ளார்.

மேலும் நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 30 ஆம் திகதியுடன் முடிவுறுத்தாமல் மேலும் ஒருவார காலத்திற்கு நீடிக்குமாறு சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளனர் .

ஊரடங்கை தளர்த்த அரசு ஆலோசனை

நாட்டின் பொருளாதார நிலையை கருத்திற்கொண்டு ஊரடங்கு சட்டத்தை தளர்த்த அரசு ஆலோசித்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் அத்தியாவசிய சேவைகளை தொடந்து சில கட்டுப்பாடுகளுடன் முன்னெடுக்கவும் அரசு ஆலோசித்து வருகிறது.

தற்போது அமுலில் உள்ள பொதுமுடக்கத்துடன் கூடிய ஊரடங்கு வெறுமனே 10 நாட்களுக்கு மட்டுமே அமுலில் இருப்பதாலும், கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரண வீதம் தொடர்ந்தும் அதிகரிப்பதாலும் குறைந்தபட்சம் மேலும் ஒருவாரகாலத்திற்காவது முடக்கத்தை தொடரவேண்டுமென மருத்துவ நிபுணர்கள் அரசிடம் வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால் முடக்க காலப்பகுதியில் மரணங்கள் மற்றும் நோயாளர் எண்ணிக்கையில் குறைவு ஏற்படவில்லையென அரச உயர்மட்டத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டை தொடர்ந்து முடக்காமல் , ஏற்கனவே அறிவித்தபடி எதிர்வரும் 30 ஆம் திகதி திறக்குமாறு அரசின் மூத்த அமைச்சர்கள் பலர் அரச உயர்மட்டத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.

என்றாலும் ஊரடங்கு காலத்தில் அத்தியவசிய சேவை என்ற பெயரில் கொழும்பு நகர் பிரதேசங்களில் அதிகளமான வாகனங்கள் பயணித்துக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் இன்று வெள்ளிக்கிழமை கொரோனா தடுப்பு செயலணியின் கூட்டமொன்று இடம்பெறவுள்ளதால் அதில் இந்த விடயங்களை ஆராய்ந்து இறுதி முடிவை எடுக்க அரச உயர்மட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் நிறைவு பெறும் நிலையில் அதனை நீடிப்பதா இல்லையா என்ற தீர்மானம் இன்று மாலை வெளியிடப்படும் என…

தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் நிறைவு பெறும் நிலையில் அதனை நீடிப்பதா இல்லையா என்ற தீர்மானம் இன்று மாலை வெளியிடப்படும் என…