ஷியா, சுன்னி மோதல்கள் எதுவரை எதிரொலிக்கும்? காபூல் தாக்குதல் கற்பிக்கும் பாடங்கள்!

சுஐப் எம். காசிம்

மேலைத்தேயம் விரும்பும் முஸ்லிம் நாடுகளில் அமைதி ஏற்படுமா? என்று சந்தேகம் எழுமளவுக்கு ஷியா, சுன்னி மோதல்கள் கூர்மையடைந்து வருகின்றன. மட்டுமல்ல, விரும்பாத நாடுகளிலும் நெருக்கடிகள் நின்றபாடில்லை. முஸ்லிம் உலகில் ஏற்பட்டுள்ள இந்தக் கவலை முழு உலகையும் வியாபிக்கும் நிலையில்தான், இதன் விஸ்வரூபம் தலைவிரித்தாடுகிறது.

சுமார், ஐம்பது இஸ்லாமிய நாடுகளுள்ள இந்த உலகில் முஸ்லிம்களின் சனத்தொகை இரண்டாமிடத்திலுமுள்ளது. இதற்குள்தான், இத்தனை பிளவுகளால் முஸ்லிம் உலகு திண்டாடுகிறது. இந்தத் திண்டாட்டம் சில ஏகாதிபத்தியவாதிகளுக்கு கொண்டாட்டமாகவுள்ளதையும் நாம் மறக்க முடியாது. அரபு நாடுகள், ஆபிரிக்க நாடுகள், சுன்னி நாடுகள், ஷியா நாடுகள் என விரியும் இந்தப் பிளவுகள்தான் இன்றைய விரிசலுக்கும் காரணம். முஸ்லிம்களின் இறுதிக் கடமையான “ஹஜ்” வணக்கத்திலும் இந்த விரிசலின் சாயல் இருக்கத்தான் செய்கிறது.

“மினாவில்” தங்குவதற்கான கூடாரங்களில், அரபு நாடுகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருந்ததை, ஆசிய நாடுகளுக்கான கூடாரத்திலிருந்த நானும் கண்ணுற்றதை, இந்த இடத்தில் என்னால் பதிவிடுவதைத் தவிர்க்க முடியாதிருக்கிறது.

ஆகஸ்ட் 15 இல், ஆப்கானிஸ்தானைத் தலிபான்கள் கைப்பற்றிய பத்து நாட்களின் பின்னர், காபூல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட இரட்டைத் தாக்குதலும் இந்தப் பிளவுகளின் பின்னணிகளில் ஒன்றுதான்.

சுன்னி முஸ்லிம்களான தலிபான்களின் அரசாங்கத்தை எச்சரித்த Islamic State of Khorasan Province (I.S.K.P) எனும் ஷியா முஸ்லிம் அமைப்பு அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா, நோர்வே மற்றும் நியூஸிலாந்து நாடுகளைப் பழிவாங்கி உள்ளது. இத்தாக்குதலில் உயிரிழந்த (இதுவரைக்கும்) 78 பேரில், 13 அமெரிக்கர்கள், 28 தலிபான்கள் பழிவாங்கப்பட்டுள்ளமை இந்தக் கொடூரத்தின் இலட்சியத்தை துல்லியப்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் இருபது வருடப் பிரசன்னத்தில், 2011 இல் நடத்தப்பட்ட “சினொக்” ஹெலிகொப்டர் தாக்குதலில், 11 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதற்குப் பின்னர் ஏற்பட்ட பெரிய இழப்பு இது. சிரியா, யெமன், ஈராக் மற்றும் லெபனான் உள்ளிட்ட சில நாடுகளில், “ஷியா” முஸ்லிம்கள் மீது நடாத்தப்படும் நேட்டோ நாடுகளின் தாக்குதல்களுக்கான பழிவாங்கலாக இத்தாக்குதல் பார்க்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தானின், கொரோசான் மாகாணத்திலுள்ள ஷியா அமைப்புத்தான் (I.S.K.P) இதற்குப் பின்னால் உள்ளது. சுன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவுள்ள ஆப்கானிஸ்தானில், ஷியாக்களின் எழுச்சிக்காகப் புறப்பட்டுள்ள இந்த அமைப்பு, தலிபான்களின் அரசை எச்சரித்துள்ளதுடன், நேட்டோ நாடுகளின் நேசத்தை துண்டிக்குமாறு எச்சரிக்கையும் விடுத்திருக்கிறது.

இவற்றையெல்லாம் பொருட்படுத்தாத தலிபான்கள், விமான நிலையம் பூரண கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக அறிவித்துள்ளதுடன், வெளிநாட்டினர் வெளியேறும் கால எல்லை, இம்மாதம் 31ஆம் திகதிக்குப் பின்னர் நீடிக்கப்படாதென அறிவித்துமுள்ளனர்.