தமிழக முகாம்களில் வசிக்கும் இலங்கையர்களுக்கான நிவரணத் திட்டங்கள் – வரவேற்கும் இலங்கை அரச தரப்பு

  • 11

தமிழக சட்டசபையில் தற்போது மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.  அதில் தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித் தருவது உள்பட பல்வேறு திட்டங்களையும் சலுகைகளையும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவையில் வெளியிட்டார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிக்கை ஒன்றை வெளியிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் இலங்கைத் தமிழர்களுக்கென பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

முக்கியமான பத்து அறிவிப்புகள்:

  1. முகாம்களில், மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள 7 ஆயிரத்து 469 வீடுகள், 231 கோடியே 54 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாகக் கட்டித்தரப்படும். இதில் முதற்கட்டமாக 3 ஆயிரத்து 510 புதிய வீடுகள் கட்டுவதற்கு, நடப்பு நிதி ஆண்டில் 108 கோடியே 81 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  2. முகாம்களில் உள்ள மின் வசதி, கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதைத் தவிர, ஆண்டுதோறும், இது போன்ற வசதிகளை செய்து தர ஏதுவாக, இலங்கைத் தமிழர் வாழ்க்கைத் தர மேம்பாட்டு நிதியாக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  3. பொறியியல் படிப்புக்குத் தேர்ச்சிபெற்ற மாணவர்களில் மதிப்பெண் அடிப்படையில், முதல் 50 மாணவர்களுக்கு, அனைத்துக் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் ஆகியவற்றை அரசே ஏற்கும். மேலும், வேளாண்/ வேளாண் பொறியியல் பட்டப் படிப்பிலும் மதிப்பெண் அடிப்படையில் முதல் 5 மாணவர்களுக்கும், மேற்சொன்ன கல்வி மற்றும் விடுதிக் கட்டணங்களை அரசே ஏற்றுக்கொள்ளும். அதுமட்டுமின்றி, முதுநிலைப் பட்டப்படிப்பு பயிலும் அனைத்து முகாம்வாழ் மாணவர்களையும் ஊக்குவிக்கும் வகையில், அவர்களின் கல்வி மற்றும் விடுதிக் கட்டணங்களை அரசே ஏற்றுக் கொள்ளும்.
  4. முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களில் ஆண்டொன்றுக்குத் தோராயமாக, 750 மாணவர்கள் அரசு மற்றும் பிற கல்லூரிகளில் கலை, அறிவியல் மற்றும் பட்டயம் உள்ளிட்ட தொழிற்படிப்புகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு வழங்கப்படக்கூடிய கல்வி உதவித்தொகை (Scholarship) போதுமானதாக இல்லை என அறியப்பட்டுள்ளது. இனி பாலிடெக்னிக் படிப்பிற்கு 10 ஆயிரம் ரூபாய்; இளநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பிற்கு 12 ஆயிரம் ரூபாய்; இளநிலை தொழில்சார்ந்த படிப்புகளுக்கு 20 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
  5. முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு, மாதந்தோறும் அவர்களுடைய வாழ்வாதாரத்திற்காகப் பணக்கொடை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகையானது, குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாயும், இதர பெரியவர்களுக்கு 750 ரூபாயும், 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 400 ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பணக்கொடை, கடந்த பத்தாண்டு காலமாக உயர்த்தப்படாத நிலையில், இனி குடும்பத் தலைவருக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய், இதர பெரியவர்களுக்கு 1,000 ரூபாய் மற்றும் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 500 ரூபாய் என்று உயர்த்தி வழங்கப்படும்.
  6. முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின்கீழ் இவர்களுக்கு எரிவாயு இணைப்புப் பெற இயலாத நிலை உள்ளது. எனவே, ஒவ்வொரு குடும்பத்திற்கும் விலையில்லா எரிவாயு இணைப்பு மற்றும் இலவச அடுப்பு வழங்கப்படும். இதற்காக அரசிற்கு ஒருமுறை 7 கோடி ரூபாய் செலவினம் ஏற்படும். அதைத் தவிர, குடும்பத்திற்கு 5 எரிவாயு உருளைக்குத் தலா 400 ரூபாய் வீதம் மானியத் தொகை வழங்கப்படும். இதற்காக 3 கோடியே 80 இலட்சம் ரூபாய் ஆண்டுதோறும் ஒதுக்கீடு செய்யப்படும்.
  7. முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு தற்போது 20 கிலோவிற்கு மேல் வழங்கப்படும் அரிசிக்கு, கிலோ ஒன்றிற்கு 57 பைசா வீதம் மானியம் வழங்கப்படுகிறது. இதனை இனி ரத்து செய்து, அவர்கள் பெறும் முழு அரிசி அளவும் விலையில்லாமல் வழங்கப்படும்.
  8. முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு கோ-ஆப்டெக்ஸ்மூலம் ஒவ்வோர் ஆண்டும் இலவச ஆடைகளும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இலவசப் போர்வைகளும் வழங்கக்கூடிய திட்டத்தில் ஒன்றிய அரசு நிர்ணயித்த விலையில் ஆடைகள் வாங்கி வழங்க இயலாத நிலையில், நடப்பு ஆண்டிற்கு பெறப்பட்ட விலைப்புள்ளிகளின் அடிப்படையில் குடும்பம் ஒன்றிற்கு 1,790/- ரூபாயிலிருந்து, குடும்பம் ஒன்றுக்கு, 3,473/- ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
  9. முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு 1,296/- ரூபாய் மதிப்பில் சேலம் இந்திய உருக்காலை நிறுவனம் மூலம் உயர்த்தப்பட்ட வீதத்தில் பாத்திரங்கள் வழங்கப்படும்.
  10. முகாம்களில் வசிக்கக்கூடிய இலங்கை அகதிகளுக்கும், வெளிப்பதிவில் உள்ள அகதிகளுக்கும் உரிய உதவிகளை வழங்கிடவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்திடவும், குடியுரிமை வழங்குதல் மற்றும் அவர்களில் இலங்கை திரும்பும் அகதிகளுக்கு தகுந்த ஏற்பாடுகள் செய்தல் போன்ற நீண்டகாலத் தீர்வினைக் கண்டறிய ஏதுவாகவும், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத் துறை அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், பொதுத் துறை செயலாளர், மறுவாழ்வுத் துறை இயக்குநர் மற்றும் பிற அரசு உயர் அலுவலர்கள், அரசு சாரா உறுப்பினர்கள், முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுடைய பிரதிநிதி மற்றும் வெளிப்பதிவில் வசிக்கக்கூடிய அகதிகளுக்கான பிரதிநிதி ஆகியோரை உள்ளடக்கிய ஒரு ஆலோசனைக் குழு விரைவில் அமைக்கப்படும்.

1983 ஆம் ஆண்டு முதல் இதுவரை 3 இலட்சத்து 4 ஆயிரத்து 269 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாகத் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். இவர்களில், 18 ஆயிரத்து 944 குடும்பங்களைச் சார்ந்த 58 ஆயிரத்து 822 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தமிழ்நாட்டில் 29 மாவட்டங்களில் அமைந்துள்ள 108 முகாம்களில் (இரண்டு சிறப்பு முகாம்கள் உள்பட) தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், 13 ஆயிரத்து 540 குடும்பங்களைச் சார்ந்த 34 ஆயிரத்து 87 நபர்கள் காவல் நிலையங்களில் பதிவுசெய்து, வெளியில் வசித்து வருகிறார்கள்.

தமிழக முதல்வருக்கு டக்ளஸ் நன்றி தெரிவிப்பு

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக தமிழக முதல்வரினால் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளமைக்கு இலங்கைத் தமிழ் மக்கள் சார்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்றொழில் அமைச்சரினால் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு நன்றி தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

இலங்கைத் தமிழ் மக்கள் தஞ்சம் தேடி வந்த சந்தர்ப்பங்களில், அவர்களை அரவணைத்து பாதுகாப்பு அளித்தவர்கள் தமிழக மக்கள். அதாவது, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்களான கலைஞர், எம்.ஜீ.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரும் தங்களால் முடிந்தளவு ஒத்துழைப்புகளை வழங்கியிருக்கின்றார்கள்.

அதேபோன்று ஏனைய அரசியல் தலைவர்களும் தங்களுடைய தார்மீக ஆதரவினை வெளிப்படுத்தி வந்தனர். இதனால்தான் தமிழக மக்கள் குரல் கொடுப்பார்கள், கரம் நீட்டுவார்கள் என்ற நம்பிக்கை இலங்கை தமிழ் மக்கள் மத்தியில் இன்றும் ஆழமாக இருக்கின்றது.

அதனையும் நிரூபிக்கும் வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக நிதி ஒதுக்கீடுகள் மேற்கொண்டுள்ளமை மகிழ்ச்சி அளிக்கின்றது.

இந்நிலையில், மீண்டும் இலங்கைக்கு திரும்பி வருவதற்கு விரும்புகின்ற எமது மக்களுக்கு, கௌரவமான வாழ்வியலை ஏற்படுத்துவதற்கு தேவையான செயற்பாடுகளை தமிழக அரசுடன் இணைந்து மேற்கொள்வதற்கு தயாராகவே இருகின்றேன். இதேவேளை, இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோத செயற்பாடுகள் தொடர்பாகவும் தமிழக முதல்வர் தீர்க்கமான கரிசனை செலுத்த வேண்டும் என்பதே என்னுடைய எதிர்பார்ப்பாகும்.

அதாவது, இலங்கை கடற்பரப்பை நம்பி வாழுகின்ற தமிழக கடற்றொழிலாளர்களுக்கு, மாற்று தொழில் முறைகளை வழங்வது குறித்து தமிழக முதல்வர், இந்திய மத்திய அரசாங்கத்துடன் தீர்க்கமான பேச்சுக்களை முன்னெடுத்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

நாடு திரும்ப விரும்புவோருக்கு பாதுகாப்பை உறுதி செய்வோம்  நாமல் தெரிவிப்பு

தமிழக முதலமைச்சர் எம்.கே. ஸ்டாலினின் இலங்கை அகதிகள் தொடர்பான அறிவிப்பை வரவேற்பதாக அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது Twitter கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு போர் நிறைவடைந்த பின்னர் அப்போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம் தமிழ் நாட்டுக்கு தப்பியோடிய அகதிகளை மீள வரவேற்றது. தரவுகளின் அடிப்படையில், UNHRC யின் உதவியுடன் 3,567 குடும்பங்கள் இலங்கைக்குத் திரும்பியுள்ளதாக, நாமல் ராஜபக்ஷ அதில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாடு திரும்பும் இந்தியாவிலுள்ள அகதிகளுக்கு அவசியமான வீடு மற்றும் வாழ்வாதார உதவிகளை வழங்கத் தயாராகவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நாடு திரும்பும் அனைத்து அகதிகளும் தங்கள் தாயகத்தில் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்து, தங்கள் வாழ்க்கையை மீள ஆரம்பிப்பதனை பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஆகியோர் உறுதி செய்வார்கள் என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

வரவேற்க முன்னர் உள்ளவர்களை மீள்குடியேற்றுமாறு மனோ கோரிக்கை

இதேவேளை குறித்த நாமலின் பதிவை மேற்கோள் காட்டி தனது Twitter கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள மனோ கணேசன் எம்.பி.

தமிழகத்து இலங்கை அகதிகளை வரவேற்க முன், யாழ்ப்பாணத்தில் பத்தாண்டுகளாக இடம்பெயர் முகாம்களில் வாழும் தமிழ் மக்களை மீளக்குடியேற்றுமாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், தமிழகத்திலுள்ள அகதிகள் குறித்து அமைச்சர் நாமல் ராஜபக்ஸ நேற்று பதிவிட்ட டுவிட்டர் பதிவுக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் வலி-வடக்கில் பலாலி உட்பட்ட வளமான காணிகளில் இருந்து இராணுவத்தை அகற்றி இம்மக்களை தம் சொந்த நிலங்களுக்கு செல்ல அனுமதிக்குமாறு மனோ கணேசன், நாமல் ராஜபக்ஸவிடம் டுவிட்டர் பதிவின் ஊடாக பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

“தமிழகத்து இலங்கை அகதிகளை வரவேற்க முன், இன்றும் யாழில், பத்தாண்டுகளாக  இடம்பெயர் முகாம்களில் வாழும் தமிழ் மக்களை  மீளக்குடியேற்றுங்கள். வலி-வடக்கில் பலாலி உட்பட்ட வளமான காணிகளில் இருந்து இராணுவத்தை அகற்றி இம்மக்களை தம் சொந்த  நிலங்களுக்கு போக விடுங்கள்.” என்று குறித்த ட்வீட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. LNN Staff

 

தமிழக சட்டசபையில் தற்போது மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.  அதில் தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித் தருவது உள்பட பல்வேறு திட்டங்களையும் சலுகைகளையும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.…

தமிழக சட்டசபையில் தற்போது மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.  அதில் தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித் தருவது உள்பட பல்வேறு திட்டங்களையும் சலுகைகளையும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.…