மலையக தமிழ் இலக்கிய விடிவெள்ளி அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர்

மலையகத் தமிழ் இலக்கியத்தின் விடிவெள்ளி எனப் புகழ் நாமம் சூடப் பெற்ற உத்தமப் புலவரே அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் ஆவார். மலையகத்தின் தெல்தோட்டை நகரில் உள்ள போப்பிடிய எனும் சிற்றூரே புலவர் பிறந்த இடமாகும். புலவர் தம் பிறப்பால் ‘புலவர்மலை’ எனும் சிறப்பு நாமம் பெற்று இன்று ‘புல்லுமலை’ என திரிபு கொண்டு அழைக்கப்படுகிறது அச்சிற்றூர்.

தமிழ் மீதான தணியாத ஆர்வமும், இஸ்லாமிய சமய ஞானமும் ஒருங்கே பெற்று அதனூடே ஒரு தனியான இலக்கிய மரபினைத் தமக்கென அமைத்துக் கொண்டவர் அவர். 1866 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் திகதி அவர் பிறந்தார். தந்தையார் அல்லா பிச்சை தாயார் அவ்வா உம்மா.

புலவரின் தந்தைவழிப் பாட்டனார் இந்தியாவைச் சேர்ந்த ஆதம்பிள்ளை ராவுத்தர் என்பவராவார். இவர் பத்தொன்பதாம் நூற்றாண்டுக் காலப் பகுதியில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்து தெல்தோட்டை பிரதேசத்தில் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்காக குடியேறியவர் ஆவார். தன் புதல்வனின் அயராத திறமையைக் கண்டு சிறுவனான அப்துல் காதிரை அப்போது கண்டியில் பிரசித்தி பெற்ற குயின்ஸ் அகடமியில் (தற்போதைய திரித்துவக் கல்லூரியில்) சேர்த்தார்கள். அங்கு ஆங்கிலமும் தமிழும் கற்றுத் தேர்ந்தார் புலவர்.

தனது பதினோராவது வயதில் சக நண்பர்களுடன் கண்டியிலுள்ள ‘குன்றுமலை’ என அழைக்கப்படும் பூங்காவிற்குச் சென்றிருந்தார். பூங்காவின் அழகினை ரசித்த வண்ணம் இருந்த சிறுவனான அப்துல் காதிர் திடீரென மயங்கி விழுந்தார். நண்பர்களின் உதவியுடன் மயக்கம் தெளிந்த புலவரின் நாவில் நின்றும் கவி வெள்ளம் பீறிடத் தொடங்கியது. அவர் பாடசாலை நாட்களில் பாட நேரங்களிலும் கவிதைகள் எழுதலானார். கல்லூரி இலக்கிய மன்றங்களிலும் விழாக்களிலும் வியக்க வைக்கும் கவிதைகள் பாடினார்.

தம் புதல்வனின் அபார திறமையைக் கண்டு அவரது பாட்டனாரின் ஊரான இந்தியாவின் திருப்புத்தூருக்குத் தம் மகனை உயர் கல்விக்காய் அனுப்பி வைத்தனர் அவரது பெற்றோர். இந்தியாவில் புகழ் பூத்த ஆசிரியர்களில் ஒருவரான முத்து பாவா எனும் புலவரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேறும் வாய்ப்பை அவர் பெற்ற பின்னர் இலங்கை வந்து சேர்ந்தார் புலவர். அன்று முதல் மலையகத் தமிழ்க் கவிதைத் துறைக்கு பணியாற்றினார். முப்பதுக்கும் மேற்பட்ட கவிதை நூல்களை இயற்றினார்.

1882 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஈழக்கவிஞர்கள் மற்றும் புகழ் பூத்த தமிழக அறிஞர்கள் கலந்து கொண்ட கவியரங்கு ஒன்று இடம்பெற்றது. பெரும் புலவர்கள் அமர்ந்திருந்தக் கவியரங்கு அது. அவையின் மத்தியிலே 16 வயதான இளைஞர் அப்துல் காதிர் வருகை தந்து தானும் புலவர்களைப் போன்று அமர்ந்து கொண்டார். இளைஞனின் திடீர் வருகையைக் கண்ட அங்கிருந்த புலவர்கள் ஆச்சரியம் மேலிட, இளைஞன் தவறுதலாக வந்து விட்டானோ என்றெண்ணினர்.

இளைஞனினிடம் இலக்கண, இலக்கியக் கேள்விகளை அவ்வறிஞர் அவை தொடுத்தது. யாவற்றுக்கும் உடனுக்குடன் பதில் கூறிய அப்துல் காதிர் புலவர் அவ்வேளையில் கவிமொழிய ஆரம்பித்தார். இளைஞனின் ஆற்றல் கண்டு அறிஞர் அவையே வியந்து நின்றது. அழகு தமிழில் இனிய பாடல்கள் பாடி அவ்வவையிலே ‘அருள்வாக்கி’ என்ற சிறப்புப் பெயரை பெற்றுக் கொண்டார் புலவர்.

அதன் பின்னர் ஒருநாள் பாட்டாலே விளக்கேற்றி பாட்டாலே விளக்கணைத்துக் காட்டும் நிகழ்ச்சியை அருள்வாக்கி அப்துல் காதர் புலவர் நிறைவேற்ற முன்வந்தார். அலங்கரிக்கப்பட்ட தூய்மையான ஓர் இடத்தில் குத்து விளக்கு வைக்கப்பட்டது. விளக்கில் எண்ணெய் ஊற்றப்பட்டது. புலவர் பாட விளக்கு எரிய வேண்டும். புலவரின் இம்மகத்துவத்தைக் காண இலங்கையில் பல பாகங்களிலிருந்தும் ஏராளமான மக்கள் வந்து குழுமி விட்டனர்.

விளக்கு வைக்கப்பட்டிருந்த மேடைக்கு அப்துல் காதிர் புலவர் வந்து சேர்ந்தார். சிறிது நேரம் தியான நிலையில் வீற்றிருந்த புலவர் திடீரென உரத்த குரலில் பாட ஆரம்பித்தார். புலவரின் பாடலில் ‘எரி’ என்ற சொல்லின் உச்சரிப்புக் கேட்டு விளக்கு ஒவ்வொரு திரியாய் எரியத் தொடங்கியது. கூடியிருந்த சிலர் விளக்கை அணைப்பது குறித்து வினவ, மீண்டும் தன் பாட்டின் மூலமே விளக்கணைத்து அற்புதம் நிகழ்த்திக் காட்டினார். இவ்வற்புதச் சம்பவத்தை பொன்னம்பலக் கவிராயர் ‘எல்லா அதிசயத்தும் ஈது மிக பெரிதாம்’ என வியப்புறப் பாடி வாழ்த்தினார்.

புலவர் பல்வேறு சிற்றிலக்கிய வடிவங்களையும், கவிதை நூல்களையும் படைத்துள்ளார். இவர் பாடிய ஏராளமான கவிதைகள் துண்டுப் பிரசுரங்களாகவும், கையெழுத்துப் பிரதிகளாகவும் அக்காலத்தில் பிரதி செய்யப்பட்டன. எனினும் அவற்றுள் பெரும்பாலானவை காலப் போக்கில் அழிந்து விட்டமை கவலைக்குரியது.

அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் ‘மாணி’ என்ற இலக்கிய வடிவம் தாங்கிய கவிதை நூல்களையும், ‘பதிகம்’ என்ற இலக்கிய வடிவம் தாங்கிய கவிதைத் தொகுப்புகளையும் பாடியுள்ளார். இவற்றுக்கு பிரான் மலைப்பதிகம், தேவாரப் பதிகம், சலவாத்துப் பதிகம் என்பன சிறந்த உதாரணங்களாகும். அத்துடன் பிள்ளைத்தமிழ் வடிவப் பிரபந்தங்களையும் (முஹியத்தின் ஆண்டகை பிள்ளைத்தமிழ்) பாடியுள்ளார். மேலும் பலவர்ணத் திரட்டு, ஞானமணித் திரட்டு போன்ற சிற்றிலக்கியங்களையும், சித்திரக்கவிப் புஞ்சம், பிரபந்தப் புஞ்சம் என்ற இரண்டு புஞ்சங்களையும் பாடியுள்ளார். அதுபோலவே கும்மி, அந்தாதி, குறவஞ்சி, சரமகவிக் கொத்து, நவமணிகீதம் முதலான வடிவங்களையும் தாங்கி இவரது கவிதைத் துறை விரிந்து செல்வதைக் காண முடிகிறது. மேலும் விநோத ரசமஞ்சரி, கோட்டாறும் புராணம், மெஞ்ஞான கோவை, சந்தத் திருப்புகழ், திருச்சந்தப் பிள்ளைத்தமிழ் போன்ற சிற்றிலக்கிய வடிவங்களை உடைய கவிதைத் தொகுப்புக்கள் அருள்வாக்கி அப்துல் காதிர் புலவருடைய படைப்புக்களாய்ப் போற்றப்படுகின்றன.

இவரது கவிதை இலக்கியங்கள் சில இலங்கையிலும் பல இந்தியாவிலும் அச்சேறி உள்ளன. எனினும், இவரது பெரும்பாலான நூல்கள் அச்சேறாத கையெழுத்துப் பிரதிகளாக இருந்தன. புலவரின் நூல்களில் காலத்தால் முந்தி வெளியானது பிராண்மலைப் பதிகம் (இந்திய அச்சகம்) ஆகும். இலங்கையில் முதல் அச்சேறியது முஹியதீன் ஆண்டகைக் காரணப் பிள்ளைத்தமிழ் ஆகும். மேலும், இவரது பிரபந்தப் புஞ்சம் ஒரு தொகுப்பு நூலாகவும், சந்தத் திருப்புகழ் பேரறிஞர் இலக்கியவாதிகளுக்கு மத்தியில் அப்துல் காதர் புலவருக்கு தனி இடத்தை பெற்றுக் கொடுத்த இலக்கியமாகவும் திகழ்கின்றது. மேலும், பல வாழ்த்துக் கவிகளும், பாராட்டுக் கவிகளும், இரங்கற்பாக்களும், மலையகம் தொடர்பான கவிதைகளும், இன்னும் பல அருட்கவிகளும் பாடி ஈழத்து கவிதைத் துறைக்கு பெருமை சேர்த்த அவர் தனது 52ம் வயதில் 1918ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி கண்டி தெய்யன்னாவலையில் காலமானார். அவரது பூதவுடல் கண்டி மஹியாவையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இத்தகைய ஆளுமைகளின் வரலாற்றை இன்றைய தலைமுறையினரிடையே கொண்டு சேர்ப்பது காலத்தின் தேவையாகும்.

எம்.ருஸ்தா
3ம் வருடம்
சட்டத்துறை
பேராதனை பல்கலைக்கழகம்