இலங்கையில் பொருளாதார அவசர நிலை சர்வதேச ஊடக அறிக்கைகள் – பதுக்கல் நடவடிக்கை எனக்கூறும் அரச தரப்பு

  • 13

இலங்கையில் பொருளாதார அவசர நிலை ஏற்பட்டுள்ளதாக நேற்றைய தினம் பல சர்வதேச ஊடகங்கள் அறிக்கை வௌியிடப்பட்டிருந்தது. ஆனால் குறித்த அறிக்கைகளை இலங்கை அரச தரப்பு மறுத்துள்ளது.

மேலும் அரச தரப்பின் கருத்துப்படி நாட்டின் எதிர்கட்சிகளும், வியாபாரிகளும் இணைந்து பதுக்கல் நடவடிக்கை மூலம் செயற்கையான உணவுத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச ஊடக அறிக்கைகளுக்கான காரணம் என்ன?

இலங்கையில் பொருளாதார அவசரநிலை அமுல் – எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு என (01.09.2021) நேற்றைய தினம் பல ஊடகங்கள் அறிக்கைகள் இடக் காரணம் இலங்கை ஜனாதிபதி  அவர்கள் அத்தியாவசிய உணவு விநியோகத்துக்கான அவசரகால விதிமுறைகள் இன்று நள்ளிரவு முதல் பிரகடனம்  என ஊடக அறிக்கையொன்றின் மூலம் வௌியிட்டார். அத்துடன் இது தொடர்பாக 2243/ 3  ஆம் இலக்க 2021.08.30  ஆம் திகதி அதி விசேட வர்த்தமானியும் வௌியிடப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக எதிர்கட்சிகளும் எதிர்ப்பு வௌியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த செய்தி அறிக்கைகள் போலி என்று இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரல் தனது முகநூலில் மேலுள்ள புகைப்படத்தின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

இலங்கையின் பொருளாதார நிலவரம்

இலங்கையில் தொடர்ச்சியான ஊரடங்கு சட்டத்தினால்  உணவுப் பொருட்களின் விலை, கடந்த சில காலமாகவே வெகுவாக அதிகரித்து வருகின்றது.

அதிகரித்து வரும் விலை உயர்வால் நாட்டு மக்கள் நாளாந்தம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

சீனி, பால்மா, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ச்சியாகவே தட்டுப்பாடு நிலவி வருகின்ற நிலையில், விற்பனை செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பல மடங்காக அதிகரித்துள்ளன.

இவ்வாறான நிலையில், அத்தியாவசிய உணவு பொருள் விநியோகத்துக்கான அவசரகால விதிமுறைகளை இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாட்டின் சீனி ஒரு கிலோவின் விலை 130 முதல் 220 வரை அதிகரித்துள்ள நிலையில் அரசாங்கம் இதுவரை 29,900 மெற்றிக் தொன் சீனியை கைப்பற்றியுள்ளது. எனவே இலங்கையில் செயற்கையாக உணவுத் தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகமும் சமூகத்திற்கு எழுந்துள்ளது.

un0 5659

அத்தியாவசிய உணவு விநியோகத்துக்கான அவசரகால விதிமுறைகள் பிரகடனம் – ஜனாதிபதி

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2ஆவது பிரிவின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், அக்கட்டளைச் சட்டத்தின் iiஆவது பிரிவின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தி, 5ஆவது பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் தயாரிக்கப்பட்டுள்ள அத்தியாவசிய உணவு விநியோகத்துடன் சம்பந்தப்பட்ட அவசரகால விதிமுறைகள், இன்று (31.08.2021) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை மொத்தமாகப் பதுக்குதல், அதிக விலை அறவிடுவதன் மூலம் நுகர்வோரை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் சந்தை முறைகேடுகளைத் தவிர்ப்பதற்காக, அரசாங்கத்தின் உத்தரவாத விலைக்கு அல்லது சுங்கத்தில் இறக்குமதி செய்யப்பட்ட விலையை அடிப்படையாகக் கொண்டு நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை மொத்தமாகக் கொள்வனவு செய்து மக்களுக்கு நியாயமான விலைக்குப் பெற்றுக்கொடுப்பதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கும், அரச வங்கிகளின் மூலம் மொத்தமாகக் கொள்வனவு செய்வதற்கு வழங்கப்பட்டுள்ள கடன், கடன் பெற்றுக்கொண்டவர்களிடம் இருந்து அறவிடப்படக்கூடிய வகையில் இது நடைமுறைப்படுத்தப்படும்.

சாதாரண பொதுமக்களின் வாழ்க்கை நிலையை இயல்பு நிலையில் பேணுவதற்குத் தேவையான நெல், அரிசி, சீனி உள்ளிட்ட ஏனைய நுகர்வுப் பொருட்களை விநியோகிப்பதை ஒருங்கிணைப்புச் செய்வதற்காக, அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகமாக, மேஜர் ஜெனரல் எம்.டீ.எஸ்.பி.நிவுன்ஹெல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.

2243/ 3  ஆம் இலக்க 2021.08.30  ஆம் திகதி அதி விசேட வர்த்தமானி

[pdf-embedder url=”https://youthceylon.com/wp-content/uploads/2021/09/2243-03_T.pdf”]

அவரகால விதிமுறைக்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு

2243/ 3  ஆம் இலக்க 2021.08.30  ஆம் திகதி வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் மற்றும் ஜனாதிபதி ஊடக அறிக்கைகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பன  எதிர்ப்பு வௌியிட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் அறிக்கையின் படி அவசரகால விதிமுறை நிலைமையை நீக்கி, அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் பிரகாரம் செயற்பட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அவசரகால நிலைமை அறிவிக்கப்பட்டமையானது, குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மேலும் தவறாக சித்தரித்து, சர்வாதிகாரத்தை நோக்கி நாடு நகரும் என்ற உள்நோக்கம் காணப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அவர் கூறுகின்றார்.

அரசாங்கத்தின் தவறான பொருளாதார கொள்கையினால், அரசாங்கம் வருமானத்தை இழந்துள்ளதுடன், வெளிநாட்டு கையிருப்புக்களும் குறைவடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனாலேயே, அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாகவும், அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிக்கையின்படி நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ள சந்தர்ப்பத்தில் மாத்திரமே அவசரநிலையை பிரகடனப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளது.

சர்வதேச அறிக்கைகளை மறுக்கு அரச தரப்பு

இப்பிண்ணளியில் நேற்றிரவு அரசாங்க தகவல் திணைக்களம் 889/2021 ஆம் இலக்க ஊடக அறிக்கையொன்று வௌியிட்டுள்ளது.

நாட்டில் உணவுப் தட்டுப்பாடு இல்லை – தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் நடவடிக்கையை தோல்வியடையச் செய்தோம் என்ற தலைப்பில் வௌியிட்டுள்ளது.

அரிசி மற்றும் சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களில் தட்டுப்பாடு நிலவுகிறது என்ற வதந்திகளில் உண்மையில்லை. மக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய போதுமான உணவுப் பொருட்கள் அரசாங்கத்திடம் உள்ளன.

சில உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் இலங்கையில் கடுமையான உணவு நெருக்கடி இருப்பதாக பிரச்சாரம் செய்கின்றன. இந்த அறிக்கைகளுக்கு எந்த அடிப்படையும் இல்லை. சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் இந்த பொய்யை மீண்டும் சொல்கிறார்கள்.

சில மோசடி செய்பவர்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும், அதிக லாபம் ஈட்டும் நோக்கில் நெல், அரிசி மற்றும் சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை மொத்தமாக பதுக்கி வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பொதுப் பாதுகாப்புச் சட்டத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவது தொடர்பான விதிகள் கடந்த திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தன. நியாயமான விலையில் மறைக்கப்பட்ட உணவுப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

அதன் நோக்கம் CWE உட்பட அரசு நிறுவனங்களுக்கு விநியோகிக்க ஒப்படைக்கப்பட்டது. செயற்கையாக உணவுத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியை முறியடிப்பதற்காகும்.

எனவே, உணவு நெருக்கடிக்கு பயப்பட வேண்டாம் என்று அரசாங்கம் மக்களை வலியுறுத்துகிறது.

சீனி வேட்டையில் அரசு

களஞ்சியசாலைக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட 29,900 மெட்ரிக் தொன் சீனி, (01) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவை அரசுடமையாக்கப்பட்டதாக, அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் என்.டீ.எஸ்.பி.நிவுன்ஹெல்ல அவர்கள் தெரிவித்தார்.

இந்தச் சீனித் தொகை, கட்டுப்பாட்டு விலையில், அரச மற்றும் தனியார் வர்த்தக நிலையங்களின் ஊடாக  நுகர்வோர் பெருமக்களுக்கு விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் சீனிக்காக அறவிடப்பட்ட 50 ரூபாய் என்ற இறக்குமதித் தீர்வை வரியானது, நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், 2020 ஒக்டோபர் 14ஆம் திகதி முதல், 25 சதமாகக் குறைக்கப்பட்டது. அன்றைய நாளில், நாட்டுக்குள் 88,878 மெட்ரிக் தொன் சீனி காணப்பட்டது.

2020 ஒக்டோபர் 14ஆம் திகதி முதல் 2021 ஜூன் 30ஆம் திகதி வரை, 584,000 மெட்ரிக் தொன் சீனி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என, நுகர்வோர் விவகார அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது. உள்நாட்டின் மாதாந்தச் சீனித் தேவையின் அளவு 35,000 மெட்ரிக் தொன் ஆகும்.

இருப்பினும், வருடாந்தச் சீனித் தேவைக்கு மேலதிகமாகச் சீனி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என்று, நுகர்வோர் விவகார அதிகார சபையின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. நாட்டுக்குள் சீனிக்குத் தட்டுப்பாடு நிலவுவதான மாயையை உருவாக்கி, நுகர்வோரைச் சிரமத்துக்கு உட்படுத்தி, அதிக விலைக்கு சீனியை விநியோகிக்கும் முயற்சியொன்று, கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டமையைக் காணக்கிடைத்தது.

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2ஆவது பிரிவின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், அக்கட்டளைச் சட்டத்தின் iiஆவது பிரிவின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தி, 5ஆவது பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் தயாரிக்கப்பட்டுள்ள அத்தியாவசிய உணவு விநியோகத்துடன் சம்பந்தப்பட்ட அவசரகால விதிமுறைகள், 2021-08-30ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் பிரகடனப்படுத்தப்பட்டது.

இதன் பிரகாரம், அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகம் ஒருவரை நியமித்து, சாதாரண பொதுமக்களின் வாழ்க்கை நிலையை இயல்பு நிலையில் பேணுவதற்குத் தேவையான நெல், அரிசி, சீனி உள்ளிட்ட ஏனைய நுகர்வுப் பொருட்களை விநியோகிப்பதை ஒருங்கிணைப்புச் செய்வதற்கான அதிகாரங்களை அவருக்கு வழங்கவும், ஜனாதிபதி அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்நிலையில், பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் சீனியைக் கண்டுபிடிப்பதற்காக முன்னெடுக்கப்படும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது கண்டறியப்படும் சீனித் தொகையை, கட்டுப்பாட்டு விலையில் பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக, அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகம் அவர்கள் தெரிவித்தார்.

(2021-09-01இல் அரசுடமையாக்கப்பட்ட சீனித் தொகை தொடர்பான விவரங்கள் பின்வருமாறு…)

வர்த்தக நிலையம் முகவரி அளவு

மெட்ரிக் தொன்

Pyramid Wilmar Company முத்துராஜவெல 6,200
Global Trading Company 809/5, நீர்கொழும்பு வீதி, மாபோல, வத்தளை 4,800
Global Trading Company 242, உஸ்வெட்டகெய்யாவ, வத்தளை 4100
Wilson Trading Company  (களஞ்சியசாலைத் தொகுதி 04) 14,000
R.G. Stores ஹுணுபிட்டிய வீதி, கிரிபத்கொட 800
 மொத்தம் 29,900

un0 5755

 

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்துக்குவழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள்

மக்கள் தமது இயல்பு வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லும் வகையில் தேவையான நெல், அரிசி மற்றும் சீனி உள்ளிட்ட உணவுப் பொருட்களை விநியோகித்தலுக்கான இணைப்பு நடவடிக்கைகளுக்காக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சின் ஆலோசகர் யூ. ஆர். டி. சில்வா தெரிவித்துள்ளார்.

இவ் ஆணையாளரின் அதிகாரம் தொடர்பில் தெரிவித்துள்ள நீதி அமைச்சின் ஆலோசகர், நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அல்லது அதற்கு சமமான உயர்நீதிமன்றங்கள் அல்லது அதற்கு மேலான நீதிமன்றங்கள் அதன் மூலம் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை சவாலுக்குட்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமாக அரசாங்கத்தினால் மேஜர் ஜெனரல் எம். டி. எஸ். பி. நிவுன்ஹெல்ல நியமிக்கப்பட்டுள்ளதையடுத்து அது தொடர்பில் தெரிவிக்கையிலேயே நிதி அமைச்சின் ஆலோசகர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தின் கண்காணிப்பின் கீழ் ஏனைய அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடைப்பதுடன் பல்வேறு இடங்களிலும் மறைத்து வைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களை அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டு அரசாங்கத்தின் மட்டுப்படுத்தப்பட்ட விலைகளுக்கு அவற்றை விற்பனை செய்தல் விநியோகத்திற்கான நடவடிக்கைகளை விரிவாக்குதல் இச் செயற்பாடுகள் அவரால் மேற்கொள்ளப்படவுள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன் சீல் வைக்கப்பட்டுள்ள களஞ்சியசாலைகளுக்கும் சென்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்திற்கு இச்சட்டம் மூலமாக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். LNN Staff

இலங்கையில் பொருளாதார அவசர நிலை ஏற்பட்டுள்ளதாக நேற்றைய தினம் பல சர்வதேச ஊடகங்கள் அறிக்கை வௌியிடப்பட்டிருந்தது. ஆனால் குறித்த அறிக்கைகளை இலங்கை அரச தரப்பு மறுத்துள்ளது. மேலும் அரச தரப்பின் கருத்துப்படி நாட்டின் எதிர்கட்சிகளும்,…

இலங்கையில் பொருளாதார அவசர நிலை ஏற்பட்டுள்ளதாக நேற்றைய தினம் பல சர்வதேச ஊடகங்கள் அறிக்கை வௌியிடப்பட்டிருந்தது. ஆனால் குறித்த அறிக்கைகளை இலங்கை அரச தரப்பு மறுத்துள்ளது. மேலும் அரச தரப்பின் கருத்துப்படி நாட்டின் எதிர்கட்சிகளும்,…