இலங்கையில் பொருளாதார சவாலை போன்று கொவிட் சவாலையும் வெற்றிகொள்ள சீன அரசாங்கம் முழுப் பலமாக இருக்கும்

  • 9

சீன சபாநாயகர் இலங்கை சபாநாயகரிடம் உறுதியளிப்பு

இலங்கையில் பொருளாதார சவாலை போன்று கொவிட் சவாலையும் வெற்றிகொள்ள சீன அரசாங்கம் முழுப் பலமாக இருக்கும் என சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் தலைவர் (சீன பாராளுமன்ற சபாநாயகர்) லீ சன்ஷூ அவர்கள், எமது நாட்டின் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் தெரிவித்தார். சீன பாராளுமன்றத்துக்கும் இலங்கை பாராளுமன்றத்துக்கும் இடையில் (31) நடைபெற்ற முதலாவது இராஜதந்திர மட்டத்திலான கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

சீனாவின் மூன்றாவது பிரஜையும், சீன ஜனாதிபதியின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் எனக் கருதப்படும் சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் தலைவர் (சீன பாராளுமன்ற சபாநாயகர்) லீ சன்ஷூ அவர்கள், தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் உபதலைவர் (பிரதி சபாநாயகர்) வூ வெஹ்வா அவர்கள், சீன நிதி அமைச்சர் லியூ குன் அவர்கள் உட்பட அந்நாட்டின் பிரபல அமைச்சர்கள் குழு வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்துகொண்ட இந்தக் கூட்டம் கொவிட் தொற்றுநோய் சூழல் ஏற்பட்ட பின்னர் சீன பாராளுமன்றம் நடத்திய முதலாவது இராஜதந்திர மட்டத்திலான கூட்டம் என்பது விசேடமாகும்.

எமது நாட்டு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கௌரவ சபாநாயகருக்கு மேலதிகமாக பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அவர்கள், பாராளுமன்றத்தின் சபை முதல்வரும், கல்வி அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன அவர்கள், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்கள், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அவர்கள்,இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள், பிராந்திய ஒத்துழைப்பு விவகாரத்துக்கான இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய அவர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க அவர்கள் மற்றும் பேராசிரியர் ரொஹான் குணரத்ன ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

தற்பொழுது நிலவும் கொவிட் சூழலுக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதற்கு சீன அரசாங்கத்தின் ஒத்துழைப்பை சபாநாயகர் இதன்போது கோரியிருந்ததுடன், இது தொடர்பில் சீன ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய முழு ஒத்துழைப்பை வழங்குவதாக சீன சபாநாயகர் உறுதியளித்தார்.

1957ஆம் ஆம் ஆண்டு இலங்கை-சீன இராஜதந்திர உறவுகள் முறையாக ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நட்புறவு வளர்ச்சியடைந்தது என சபாநாயகர் இங்கு சுட்டிக்காட்டினார். இலங்கையின் இறையாண்மை, மற்றும் பொருளாதார வளர்ச்சி போன்று ஏனைய சவால்கள் ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் இலங்கையின் உண்மையான நண்பனாக சீன அரசாங்கம் வழங்கிவரும் ஒத்துழைப்புத் தொடர்பில் இலங்கை பாராளுமன்றம் மற்றும் இலங்கை மக்களின் சார்பில் சபாநாயகர் சீன அரசாங்கத்துக்கு நன்றியைத் தெரிவித்தார். விசேடமாக தற்பொழுது நிலவும் கொவிட் சூழலை வெற்றிகொள்ள சீன அரசாங்கம் வழங்கிவரும் சகல ஒத்துழைப்புக்களுக்கும் விசேடமாகத் தனது நன்றியைத் தெரிவித்த சபாநாயகர், சீனா 3 மில்லியன் தடுப்பூசிகளை எமது நாட்டுக்கு நன்கொடையாக வழங்கியிருப்பதாகவும், இதற்கமைய இதுவரை 18 மில்லியன் தடுப்பூசிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன், இற்றைக்கு 07 வருடங்களுக்கு முன்னர் சீன ஜனாதிபதி அவர்களின் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரத் திட்டம் இந்நாட்டின் பொருளாதார அபிவிருத்தியின் புதிய அத்தியாயத்தின் ஆரம்பமாக அமைந்துள்ளது என்றும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார். கொழும்பு துறைமுக நகரத் திட்டம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அண்மித்த சர்வதேச முதலீடுகளின் மூலம் இலங்கை எதிர்காலத்தில் உலகப் பொருளாதாரத்தின் கேந்திர நிலையமாக மாறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட சபாநாயகர், இது தொடர்பில் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்தார். இந்தத் திட்டங்களுக்காக சீன முதலீட்டாளர்களை ஊக்குவிக்குமாறு சீன அரசாங்கத்திடம் தான் கோரிக்கை விடுப்பதாகவும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார். இந்த முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பில் ஏனைய உலக நாடுகளுக்கும் அழைப்பு விடுப்பதாகவும் சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

இரு நாட்டு பாராளுமன்றங்களுக்கும் இடையிலான உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், சீன சபாநாயகர் உள்ளிட்ட குழுவினரை இந்நாட்டுக்கு வருமாறும் சபாநாயகர் அழைப்பு விடுத்தார். எமது நாட்டு சபாநாயகரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சீன சபாநாயகர், கொவிட் சூழல் தணிந்ததும் இலங்கைக்கு விஜயம் செய்வதாகத் தெரிவித்தார். அத்துடன், கொவிட் சூழல் தணிந்ததும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உள்ளிட்ட தூதுக்குழுவினர் சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் சீன சபாநாயகர் தெரிவித்தார்.

இந்நாட்டில் கொவிட் சவாலை வெற்றிகொள்ள சீனா வழங்கிவரும் ஒத்துழைப்பு அளப்பரியது என இங்கு கருத்துத் தெரிவித்த வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டினார். சர்வதேச அரங்கில் சீனா எப்பொழுதும் நெருக்கமான நண்பராக இலங்கைக்கு ஆதரவாக நிற்பதாகவும், எதிர்காலத்திலும் இந்த ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம், உயர் நீதிமன்ற கட்டடத்தொகுதி, அதிவேக நெடுஞ்சாலைகள், ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமான நிலையம், கொழும்பு துறைமுக நகரம் உள்ளிட்ட திட்டங்கள் சீன அரசாங்கத்தின் தலையீட்டினாலேயே இந்நாட்டுக்குக் கிடைத்திருப்பதாக இங்கு கருத்துத் தெரிவித்த நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

அத்துடன், தற்பொழுது நிலவும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இருநாட்டு மத்திய வங்கிகளுக்கும் இடையில் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதிப் பரிமாற்றத்துக்கான ஒப்பந்தம் சில தொழில்நுட்பக் காரணங்களினால் நடைமுறைப்படுத்த முடியாதுள்ள பின்னணியில், இது தொடர்பில் தயவு செய்து கவனம் செலத்துமாறும் அமைச்சர், சீன சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார். இலங்கை சீன சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் ஆடைகள், தேயிலை மற்றும் மாணிக்கக் கல் போன்ற கைத்தொழில்கள் சீன சந்தையில் நுழைவதற்கான வசதிகளை மேலும் விஸ்தரித்துக் கொடுக்குமாறும் அமைச்சர் இதன்போது வேண்டுகோள் விடுத்தார்.

சீன அபிவிருத்தி வங்கியின் பிராந்திய தலைமையகத்தை கொழும்பு துறைமுக நகரப் பகுதியில் அமைப்பதற்கான சகல வசதிகளையும் வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக நிதி அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார். அத்துடன், இந்நாட்டின் முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பில் சீனாவின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் நிதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பு துறைமுக நகரத் திட்டம் உள்ளிட்ட ஏனைய முதலீடுகளுக்கு சீனா முதலீட்டு வசதிகளை வழங்குவதாக சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் தலைவர் (சீன பாராளுமன்ற சபாநாயகர்) லீ சன்ஷூ இங்கு சுட்டிக்காட்டினார். சீனாவின் நெருங்கிய நட்புநாடாக இலங்கையின் பொருளாதாரத்துக்கு முடிந்தளவு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும், இந்தக் கலந்துரையாடலை மேலும் விரிவான முறையில் எதிர்காலத்துக்கு முன்கொண்டு செல்ல எதிர்பார்ப்பதாகவும் சீன சபாநாயகர் இங்கு உறுதியளித்தார். நிலவும் கொவிட் சூழல் தணிந்ததும் இரு நாட்டுத் தூதுக் குழுக்களின் விஜயங்களின் ஊடாக முதலீட்டு ஒத்துழைப்பை மேலும் உயர்ந்த மட்டத்துக்குக் கொண்டுசெல்ல வாய்ப்புக் கிடைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் பொதுச் செயலாளர் யங் சென்வூ, சீன தேசிய மக்கள் காங்கிரஸின் சட்டக் குழுவின் தலைவரும், இலங்கை சீன நட்புறவு சங்கத்தின் தலைவருமான லீ ஃபெ, தேசிய மக்கள் காங்கிரஸின் வெளிவிவகாரக் குழுவின் தலைவர் சாங் ஜெசி, தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் பிரதிப் பொதுச் செயலாளர் ஹூ சியோலி, உதவி வெளிவிவகார அமைச்சரும், இலங்கைக்கான முன்னாள் சீனத் தூதுவருமான வூ ஜியாம்காவோ, தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழு பொது அலுவலகத்தின் ஆய்வு அலுவலகப் பணிப்பாளர் சொங் ரூய் ஆகியோர் சீனத் தூதுக்குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தி இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

சீன சபாநாயகர் இலங்கை சபாநாயகரிடம் உறுதியளிப்பு இலங்கையில் பொருளாதார சவாலை போன்று கொவிட் சவாலையும் வெற்றிகொள்ள சீன அரசாங்கம் முழுப் பலமாக இருக்கும் என சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின்…

சீன சபாநாயகர் இலங்கை சபாநாயகரிடம் உறுதியளிப்பு இலங்கையில் பொருளாதார சவாலை போன்று கொவிட் சவாலையும் வெற்றிகொள்ள சீன அரசாங்கம் முழுப் பலமாக இருக்கும் என சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின்…