சரித்திர நாயகன் – பாக்கிர் மாக்கார்
10/09/1997 மர்ஹும் அல்ஹாஜ் எம்.ஏ பாக்கிர் மாக்கார் அவர்களின் 24வது வருட நினைவுதினக் கவிதை.
மண்மீது பிறக்கும் மனிதரெல்லாம்
மனதோடு நிலைத்து இருப்பதில்லை.
கண்ணோடு கடமை பேணி நின்றோர்
மண்ணோடு மறைந்து போவதில்லை.
சமுதாயப் புரட்சியொன்றின் சரித்திர நாயகன் அவர்.
அமுதான திட்டங்களின் ஆளுமை வித்தகர் அவர்.
மும்மொழிப் பாண்டித்தியம் அவர் சிறப்பு
எம் மொழி மக்களுக்கும் அவர் மனதில் இருப்பு.
ஆசிரியப் பணியினிலே சில காலம் வாழ்வு
சட்டக்கல்லூரி நோக்கி முன்னோக்கி நகர்வு.
சட்டம் கற்றார் பெருவிருப்பாய்.
பட்டமும் பெற்றார் வெகு சிறப்பாய்.
பள்ளிவாசல் நிருவாகத் தலைவராக
பணியெல்லாம் சீர் செய்தார் கச்சிதமாக.
ஆளுமைக்கு அங்கீகாரம் அழைத்தது
பேருவலை நகரசபைத் தலைவராக வாய்த்தது.
பேருவலைத் தொகுதி நின்று
பெயர் புகழைத் தான் கொண்டு
முதலாவது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினராக
இதமாக அவர் பெற்றார் அமோக வெற்றி.
மாகாண சபையொன்று அமைக்கப்படும் வரை
தோள் தேடி வரவில்லை தோல்விக்கறை.
மும்தாஸ் மஹால் கொள்ளுபிட்டியில் அன்று
முஸ்லிம்களின் குறைகேள் கூடமாயிற்று.
மஸ்ஜிதுல் அப்றாரின் விரிவுப்பணி
மாசின்றி நடந்தேறியது அவர் தலைமைப்பணி
வீட்டுத்திட்டம் வீதிப்பபுனரமைப்பு
தொழிற்பயிற்சி நிலையங்கள்
பாடசாலைக் கட்டிடங்கள்.
அவர் நாமம் இன்றும் சொல்கின்றது.
தொலைநோக்குச் சிந்தனையில் தீரமாய் நின்றார்
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்ணணியை தந்தார்.
நாட்டுப்பற்றை வாலிபர்களிடம் உரைத்தவர்
தலைமைத்துவத்தை வாலிபர்களிடம் விதைத்தவர்.
அவர் தலைமைக்கு சான்றழிக்க எத்தனையோ படிமங்கள்.
அத்தனையும் ஆளுமைக்கு நற்சான்றுப் பத்திரங்கள்.
நகரசபைத் தலைவராக அமைச்சராக
தென்மாகாண ஆளுனராக சபாநாயகராக
பதில் ஜனாதிபதியாக சரித்திரச் சாலையில்
முதல் முஸ்லிம் தலைவர் அவர்.
வாய்த்த வாய்ப்பெல்லாம் சமூகப்பணியே அவர் எண்ணம்
வாய்மையும் நேர்மையும் அவரின் அடையாளச் சின்னம்
இலங்கை தேசத்தின் இணையில்லா முஸ்லிம் தலைமை அவர்
களங்கம் தன் கரங்களில் பதிக்காத புதுமை அவர்.
அதனால் தான் இன்றும் மக்கள் மனங்களில் வாழ்கிறார்
பெரும்பான்மை மக்களிடமும் நினைவாக இருக்கிறார்.
இறைஅழைப்பில் விழிமூடிய அன்னவர்
இறைபொருத்தம் அத்தனையும் கொண்டு
ஜன்னதுல் பிர்தவ்ஸ் எனும்
உன்னத சுவனத்தில் சுகித்திடவே பிரார்த்திப்போம்.