அரிசி தட்டுப்பாடு தொடர்பில் அரசாங்கத்தின் விளக்கம்

  • 15


அரிசி ஆலை உரிமையாளர்கள், அரிசி வர்த்தகர்கள் மற்றும் அரிசி தட்டுப்பாடு தொடர்பில் நிலவும் வதந்திகள் தொடர்பில், ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்கவினால் தெளிவுபடுத்தல் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கை வருமாறு,

நாட்டின் தற்போதைய நிலைமைக்கு மத்தியில், ஜனாதிபதி அவர்களினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கமைய. அரிசி ஆலை உரிமையாளர்கள், அரிசி வர்த்தகர்கள் மற்றும் அரிசித் தட்டுப்பாடு தொடர்பில் நிலவும் வதந்திகளைப் போக்கி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினதும் அரசாங்கத்தினதும் நிலைப்பாடு தொடர்பில் நாட்டுக்குத் தெளிவுபடுத்துவதற்கு, நான் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.

அரிசி, மா, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், அவருக்கிருக்கும் அதிகாரங்களுக்கமைய, பொதுப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் அவசரகால விதிமுறைகளுக்கு உட்பட்ட வர்த்தமானி அறிவித்தலொன்றை, கடந்த ஓகஸ்ட் 30ஆம் திகதியன்று வெளியிட்டார் என்பது நீங்கள் அனைவரும் அறிந்த விடயமாகும்.

மக்கள் மயப்பட்ட அரசாங்கம் என்ற பொறுப்புணர்வுடன், நுகர்வோர் பெருமக்களைப் பாதுகாக்கும் பொருட்டே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

அன்றாட வாழ்க்கை முறையை வழமைக்குக் கொண்டுவரத் தேவையான நெல், அரிசி, சீனி உள்ளிட்ட நுகர்வுப் பொருட்களை விநியோகித்தல், அது தொடர்பான ஒருங்கிணைப்புகளை மேற்கொள்வதோடு, அவற்றை விரிவான கண்காணிப்புக்கு உட்படுத்தும் நோக்கிலேயே, அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அவர்களினால் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால விதிமுறைகள், கடந்த சில தினங்களுக்கு முன்னர், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. இதன்போது அவை, 81 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை தொடர்பில், முழு நாடும் அறியும்.

நாட்டில் நிலவும் கொவிட் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவருவதில், அரசாங்கம் பாரிய சவாலை எதிர்நோக்கி வருகின்றது. அதற்காக, 500 பில்லியன் ரூபாய்க்கும் அதிக செலவுச் சுமையைச் சுமந்து வருகிறது.

பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்காத வகையிலேயே இவ்வனைத்து விடயங்களையும் முன்னெடுத்துக்கொண்டு, ஜனாதிபதி அவர்கள் தலைமையிலான அரசாங்கம், தற்போதைய நிலைமைக்கு அர்ப்பணிப்புகளுடன் முகங்கொடுத்துக்கொண்டு இருக்கின்றது. அதற்குத் தேவையான தீர்மானங்களை எடுக்கும் போது, எந்தத் தரப்பினருக்கும் பக்கச்சார்பாக நடந்துகொள்ள, ஜனாதிபதி அவர்கள் தயாராக இல்லை.

அரிசி தொடர்பில் நிலவும் பிரச்சினையை, அனைத்துத் தரப்பினருடன் இணக்கமாகத் தீர்த்துக்கொள்ளவே, ஆரம்பம் முதல் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. விவசாயி, வர்த்தகரைப் போன்றே, நுகர்வோரையும் பாதுகாக்கும் நியாயமான முறைமையொன்றையே அரசாங்கம் எதிர்பார்த்திருந்தது. இது தொடர்பில், அரிசி ஆலை உரிமையாளர்களுடனும், ஜனாதிபதி அவர்கள் விரிவாகக் கலந்துரையாடியிருந்தார். இதன்போது, இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டன. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களும், விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர்களும்கூட, வர்த்தகர்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடியிருந்தனர்.

விவசாயிகளைப் பலப்படுத்துவதற்காக, 30, 32 ரூபாய்க்குக் காணப்பட்ட தலா ஒரு கிலோகிராம் நெல்லுக்குக் கட்டுப்பாட்டு விலையொன்றை அரசாங்கம் நியமித்தது. அதன்படி, நாட்டரிசி மற்றும் பச்சையரிசி நெல் ஒரு கிலோகிராமுக்கு 50 ரூபாயும் சம்பா நெல் ஒரு கிலோகிராமுக்கு 52 ரூபாயும், கீரி சம்பா நெல் ஒரு கிலோகிராமுக்கு 55 ரூபாயும் என்ற அடிப்படையில், அந்தக் கட்டுப்பாட்டு விலை நியமிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அந்தக் கட்டுப்பாட்டு விலைக்கு ஒருபோதும் ஈடாகாத வகையில், நாட்டரிசி ஒரு கிலோகிராம் 125 ரூபாய், சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 150 ரூபாய் மற்றும் கீரி சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 225 ரூபாய் என்ற அடிப்படையில், சந்தையில் அரிசியின் விரை அதிகரிக்கப்பட்டிருந்ததுடன், இதனால் நுகர்வோர் பெருமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதன் பின்னரே, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அதிகபட்ச நியாயத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காக, பொதுப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் காணப்படும் முழு அதிகாரங்களுடன், அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகம் ஒருவரின் நியமனம் இடம்பெற்றது. இதன்படி, சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 103 ரூபாய், நாட்டரிசி ஒரு கிலோகிரைாம் 98 ரூபாய், கீரி சம்பா ஒரு கிலோகிராம் 125 ரூபாய், பச்சையரிசி ஒரு கிலோகிராட் 95 ரூபாய் என்ற அடிப்படையில் கட்டுப்பாட்டு விலைகள் நியமிக்கப்பட்டு, அவை வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டன.நாடு எதிர்நோக்கியிருந்த சிக்கலை ஏற்றுக்கொண்ட வர்த்தகப் பெருமக்கள், அதன் பின்னர், அரசாங்கத்தை சிரமத்துக்கு உள்ளாக்கப் போவதில்லை என்றும் இணைந்து பணியாற்றுவதாகவும், வெளிப்படையாக அறிவித்திருந்தமை உங்களுக்கு நினைவிருக்கும். இருப்பினும், அரசாங்கத்துடன் அவர்கள் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டை, துரதிர்ஷ்டவசமாக அவர்கள் மீறியுள்ளனர். அதேவேளை,  பாரியளவில் அரிசி ஆலைகளை நடத்திவரும் அரிசி ஆலை உரிமையாளர்களின் நாளாந்த உற்பத்திகள் மற்றும் விநியோகங்களும், 50 சதவீதத்துக்கும் குறைந்தளவில் வீழ்ச்சி ஏற்படுத்தப்பட்டன. கொவிட் தொற்றுப் பரவலுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் நுகர்வோர் பெருமக்களால், இந்த நிலைமையையும் தாங்கிக்கொள்ள முடியாதுள்ளமையையும் அவர்களுக்கு அநியாயம் இழைக்கப்பட்டுள்ளமையையும், அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயக்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது, 2021 செப்டெம்பர் 8ஆம் திகதி மாத்திரம், பாரியளவில் நடத்தப்படும் அரிசி ஆலைக் களஞ்சியசாலைகளிலிருந்து, அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையின் கீழ், 807,375 கிலோகிராம் அரிசி கைப்பற்றப்பட்டு, சதொச கூட்டுறவு விற்பனை நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டது. பாரியளவில் நெல் களஞ்சியசாலைகளை நடத்தும் உரிமையாளர்கள் ஒன்றிணைந்து, அரசி மாஃபியாவில் ஈடுபடுகின்றனர் என்று குற்றஞ்சாட்டிய நபர்கள், தற்போது அவர்களைப் பாதுகாப்பதற்காக முன்வந்திருப்பதன் மூலம், இந்த அனைத்துச் செயற்பாடுகளின் பின்னால் காணப்படும் அரசியலை, உங்களால் இலகுவில் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும். எவ்வாறெனினும், பாதுகாப்பான நாட்டை உருவாக்குவதற்காக மக்கள் வழங்கிய ஆணை மற்றும் நம்பிக்கை போன்றவற்றைப் பாதுகாத்து, மக்களின் நலனுக்காக, ஜனாதிபதி அவர்களுக்கு இருக்கும் அதிகாரங்களின் பிரகாரம் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. மக்கள்மயப்பட்ட பொருளாதாரம், சுபீட்சமான நாட்டைக் கட்டியெழுப்புவதே, ஜனாதிபதியின் நிலைப்பாடாகும்.  TK

அரிசி ஆலை உரிமையாளர்கள், அரிசி வர்த்தகர்கள் மற்றும் அரிசி தட்டுப்பாடு தொடர்பில் நிலவும் வதந்திகள் தொடர்பில், ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்கவினால் தெளிவுபடுத்தல் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை வருமாறு, நாட்டின் தற்போதைய…

அரிசி ஆலை உரிமையாளர்கள், அரிசி வர்த்தகர்கள் மற்றும் அரிசி தட்டுப்பாடு தொடர்பில் நிலவும் வதந்திகள் தொடர்பில், ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்கவினால் தெளிவுபடுத்தல் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை வருமாறு, நாட்டின் தற்போதைய…