அதிவேக பாதையின் காசாளர் 14 இலட்சம் ரூபாவுடன் மாயம்

எம்.எப்.எம்.பஸீர்

வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான, அதிவேக பாதையின் களனி கம இடைமாறல் அலுவலகத்தின் பொறுப்பிலுள்ள இரு பெட்டகங்களில் இருந்த 14 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணம் காணாமல் போயுள்ளதாக பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

இந் நிலையில், குறித்த பணத்துக்கு பொறுப்பாக செயற்பட்ட பிரதான காசாளர் ஒருவரும் மாயமாகியுள்ளதாக, ஆரம்பகட்ட விசாரணைகள் ஊடாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பண்டாரகம பொலிஸ் நிலைய குற்றவியல் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் விஷேட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தனது கடமை நேரம் தொடர்பில் கடமைக்கு வந்துள்ள காசாளர் ஒருவர், நிலுவையில் உள்ள பணத் தொகையை சரி பார்த்த போது அதில் 14 இலட்சத்து 18 ஆயிரம் ரூபா குறைவாக இருப்பதை கண்டறிந்துள்ளார்.

இந் நிலையில் அவர் அது தொடர்பில் உயர் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார். இந் நிலையிலேயே அதிகாரிகளின் அறிவுறுத்தல் பிரகாரம் பிரதான பொறியியலாளர் ஒருவர் இது தொடர்பில் பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.

இந்நிலையில், உள்ளக ஆய்வின் போது, காசாளர்களின் பெட்டகத்திலிருந்தும், அன்றாட வருமானத்தை வைக்கும் பெட்டகத்திலிருந்தும் பணம் திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில், ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணையில், பிரதான காசாளர் ஒருவர் மாயமாகியுள்ளமை தெரியவந்துள்ள நிலையில், அவரைத் தேடி தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சூதுக்கு அடிமையாகியவர் என நம்பப்படும் குறித்த காசாளர், புளத் சிங்ஹல பகுதியைச் சேர்ந்தவர் எனவும், அவர் வதியும் வீட்டில் அவர் இல்லை எனவும்  குறிப்பிட்ட பொலிசார், அவரது கையடக்கத் தொலைபேசியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும்  கூறியுள்ளனர்.

Select your currency
LKR Sri Lankan rupee
%d bloggers like this: