இஸ்லாத்தின் பார்வையில் பகிடிவதை

  • 16

பல்கலைக்கழகம் என்றாலே நம் அனைவரதும் மனக்கண் முன் தோன்றுவது பகிடிவதை என்ற கடும் சொல் தான். பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளோம் என சந்தோஷப்பட்டாலும் பகிடிவதை என்ற நாமம் ஒருபுறம் உள்ளத்தைப் பயத்தால் வாட்டி வதைக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மையே. பெருங் கூட்டமாய் பாடசாலையில் முதன் முறையாக ஒன்று சேர்ந்த நம்மில் ஒரு சிறு தொகையினரே பல்கலைக்கழகம் செல்லத் தகுதி பெறுகிறோம். அவ்வாறு செல்லும் பண்பாடுகள் நிறைந்தவர்களாய் இருக்க வேண்டிய நாம் பகிடிவதை எனும் பெயரில் செய்யும் அட்டகாசம் தான் என்ன? இஸ்லாத்தின் பார்வையில் பகிடிவதை ஆகுமானதா? என ஆராய்வது காலத்தின் தேவையாகும்.

உண்மையில் பகிடிவதை என்ற பெயரில் பல்கலைக்கழகங்களில் எவ்வாறான விடயங்கள் அரங்கேற்றப்படுகின்றன என்பதை நோக்குகையில், தனக்குக் கீழ் இருக்கும் சக சகோதர சகோதரிகளை மேல் வகுப்பு மாணவர்களில் ஒரு கூட்டம் மனதளவிலோ, உடலளவிலோ, பொருளளவிலோ காயப்படுத்துதல் சேதப்படுத்துதல் தான் பகிடிவதை என்று அறியப்படுகிறது. இவ்விதம் பிறரின் துன்பத்தில் இன்பம் காண்பது இஸ்லாத்தின் வரையறைகளுக்கு உட்பட்டதா என நோக்குகையில், இவ்வித செயல்கள் இஸ்லாத்தின் போதனைகளுக்கு முற்றிலும் புறம்பானது என்பதை அல்குர்ஆனின் ஊடாகவும் நபிகளாரின் போதனைகளூடாகவும் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.

அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: எவரொருவரின் நாவிலிருந்தும், கையிலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகின்றனரோ அவரே உண்மையான முஸ்லிம் என நபி ( ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 10)

அபூ ஹுரைரா ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒருவன் தன் சகோதரனுக்கு அவனது மானத்திலோ வேறு விடயத்திலோ இழைத்த அநீதி இருக்குமாயின், அவன் அவரிடமிருந்து தீனாரோ திர்ஹமோ பயன்தர வாய்ப்பற்ற நிலை ( மறுமைநாள்) வருவதற்கு முன் இன்றே பாதுகாப்புத் தேடிக் கொள்ளட்டும். (மறுமைநாளில்) அவனிடம் நற்செயல் இருக்குமாயின் அவனது அநீதியின் அளவுக்கு அவனிடமிருந்து நன்மைகள் எடுத்துக்கொள்ளப்பட்டு அநீதி இழைக்கப்பட்டவனின் நன்மையில் பதியப்படும். அநீதியிழைத்தவனின் நற்செயல்கள் எதுவும் இல்லை எனில் அநீதி இழைக்கப்பட்டவனின் தீயசெயல்கள் எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவனின் மீது சுமத்தப்படும் என என நபி ( ஸல்) அவர்கள் கூறினார்கள்.(புகாரி 2449)

இவ்வாறு இஸ்லாம் பிறர் நலம் பேசுவதை வலியுறுத்தியிருந்தும் நாம் அவற்றை சிந்திக்காது ஷைத்தானின் மாயவலையில் சிக்கி பகிடிவதையில் ஈடுபடும் எம் நோக்கம் தான் என்ன?

தவறுகளைத் திருத்த வேண்டும் எனும் பெயரில் இஸ்லாம் வன்முறையான போக்கை, வன்சொற்களைக் கையாளுமாறு கட்டளை பிறப்பிக்கின்றதா? தவறு செய்தவனைக்கூட மென்மையான முறையில் தவறைச் சுட்டிக்காட்டி தவறைத் தடுக்குமாறே இஸ்லாம் ஏவுகிறது. நற்பண்புகளைப் போதிக்கவந்த எம் உயிரிலும் மேலான தூதரின் புனித மார்க்கத்தை சத்தியத் தூதை உள்ளத்தில் சுமந்துள்ள நாம் எமது நிலை பற்றிச் சிந்திக்க வேண்டும். பாதிக்கப்பட்டவரின் பிரார்த்தனைக்கு வலியும், வலுவும் அதிகம் உண்டென்பதை உணர்ந்து , பகிடிவதை எனும் செயலினூடாக ஏனையோரின் உரிமை விடயத்தில் நாம் எவ்விதம் பாராமுகமாக நடக்கின்றோம் என்பதை சிந்தித்து எம்மை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஏனையோரால் நாம் பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்டோம் என்பதற்காக அடுத்தவர்கள் மீது பலி தீர்ப்பது ஓர் உண்மையான முஸ்லிமின் பண்பல்ல. ஒரு முஸ்லிமின் மானத்தைப் போக்கும் வார்த்தைகள், செயற்பாடுகள் தம் வாழ்வில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றெண்ணி சாதாரணமாக வார்த்தைகளை அதன் விபரீதம் அறியாது அடுத்தவர்கள் மீது கொட்டி விடுகிறோம். ஆனால், நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் ஒவ்வொரு செயலையும் இஸ்லாம் அங்கீகரித்துள்ளதா என அணுவணுவாக ஆராய்ந்து வெளியிடுமாறு இஸ்லாம் கட்டளை பிறப்பிக்கின்றது.

இதனால் தான் அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்பியவர் பேசினால் நல்லதையே பேசட்டும், இன்றேல் வாய்மூடி மௌனமாக இருக்கட்டும் என நபிகளார் கூறினார்கள்.

மேலும், நபிகளார் ( ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஓர் அடியான் அல்லாஹ்வின் திருப்திக்குரிய வார்த்தையை சர்வசாதாரணமாக பேசி விடுகிறான். அதன் காரணமாகவே அல்லாஹ் அவரின் அந்தஸ்துகளை உயர்த்தி விடுகிறான். ஓர் அடியான் அல்லாஹ்வின் கோபத்திற்குரிய வார்த்தையை பின்விளைவைப் பற்றிஎண்ணாமல் சர்வசாதாரணமாக பேசி விடுகிறான். அதன் காரணமாகவே அவர் நரகத்தில் போய் விழுகிறார். (புகாரி 6478)

நபிகளார் தம் இறுதிப் பேருரையின் போதும் ஒரு முஸ்லிமின் இரத்தம், மானம், பொருள் என்பன மற்ற முஸ்லிமுக்கு ஹராமாகும் என வலியுறுத்திக் கூறினார்கள். பண்பாடற்ற கல்வி ஒரு முஸ்லிமின் வாழ்வில் எவ்வித பிரயோசனத்தையும் அளிப்பதில்லை. பல்கலைக்கழகத்தில் கற்கும் நாம் ஏனையோருக்கு முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும்.

எனவே, தீமைகளைத் தடுத்து நன்மையின் பால் ஏவுவது ஒவ்வொரு முஸ்லிமினதும் தலையாய கடமை என்பதால் நாமும் திருந்தி எம் சக சகோதர சகோதரிகளால் நடக்கும் தவறுகளையும் மென்மையான போக்கினைக் கையாண்டு திருத்துவதற்கு முயற்சிப்போம். இஸ்லாம் ஹராமாக்கியுள்ள பகிடிவதை எனும் தீய செயலை எம்மிடமுருந்து நீக்கி மனிதப்புனிதர்களாக வாழ்ந்து எம் கல்வியின் நோக்கத்தை சிறப்புற அடைவோம்.

Aaqila  Binth Nawas

Uthaymeeniya.
SEUSL
வெளியீடு : வீயூகம் வெளியீட்டு மையம்

பல்கலைக்கழகம் என்றாலே நம் அனைவரதும் மனக்கண் முன் தோன்றுவது பகிடிவதை என்ற கடும் சொல் தான். பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளோம் என சந்தோஷப்பட்டாலும் பகிடிவதை என்ற நாமம் ஒருபுறம் உள்ளத்தைப் பயத்தால் வாட்டி வதைக்கிறது என்பது…

பல்கலைக்கழகம் என்றாலே நம் அனைவரதும் மனக்கண் முன் தோன்றுவது பகிடிவதை என்ற கடும் சொல் தான். பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளோம் என சந்தோஷப்பட்டாலும் பகிடிவதை என்ற நாமம் ஒருபுறம் உள்ளத்தைப் பயத்தால் வாட்டி வதைக்கிறது என்பது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *