ரூ.28 ஆயிரத்து 400 மில்லியன் அறவிடப்பட வேண்டியுள்ளது – மின்சார சபை

லோரன்ஸ் செல்வநாயகம்

கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக அரசாங்கத்தினால் மின் பாவனையாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள நிவாரணங்களினால் பாவனையாளர்களிடமிருந்து 28,400 மில்லியன் ரூபாவை மின்சார சபை அறவிட வேண்டியுள்ளது.

அந்த வகையில் மாதாந்தம் 7000 மில்லியன் ரூபா அறவிட வேண்டியுள்ளதாகவும் அதேவேளை மூன்று மாதங்களுக்கு 8,600 மில்லியன் ரூபா அறவிட வேண்டியுள்ளதாகவும் அத்துடன் மூன்று மாதங்களுக்கு மேற்பட்டு 12, 800 மில்லியன் அறவிடப்பட வேண்டியுள்ளதாகவும் மின்சார சபை தெரிவிக்கின்றது.

நாட்டின் வீட்டு மின் பாவனையாளர்கள் அறுபத்தி மூன்று இலட்சமாக உள்ள நிலையில் 62 இலட்சம் பாவனையாளர்களிடமிருந்து மேற்படி நிதியை அறவிட வேண்டியுள்ளதாகவும் மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதேவேளை கொரோன வைரஸ் சூழ்நிலை காரணமாக அரசாங்கத்தினால் பெற்றுக் கொடுக்கப்பட்ட நிவாரணம் காரணமாக பாவனையாளர்களிடமிருந்து இதுவரை 45 ஆயிரம் மில்லியன் ரூபா அறவிடப்பட வேண்டியுள்ளதாகவும் அதேவேளை ஹோட்டல் மற்றும் கைத் தொழிற்சாலைகள் ஆகியவற்றிலிருந்து 17 ஆயிரத்து 200 மில்லியன் ரூபாவை அறவிட வேண்டியுள்ளதாகவும் மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க கைத்தொழில் நிறுவனங்களிடமிருந்து 9 ஆயிரத்து 300 மில்லியன் ரூபாவும் வணிக மற்றும் கடைகள், அலுவலகங்கள் மூலம் 6800 மில்லியன் ரூபாவும் ஹோட்டல்கள் மூலம் 1000 மில்லியன் ரூபாவும் அரச நிறுவனங்கள் மூலம் 274 மில்லியன் ரூபாவும் அறவிடப்பட வேண்டியுள்ளதாகவும் மின்சார சபை தெரிவித்துள்ளது. மின் பாவனையாளர்களுக்கு சுமார் இரண்டரை மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில் அந்த காலப்பகுதியில் அவர்கள் மின் கட்டணத்தை செலுத்தாமல் உள்ள நிலையில் மின்சார சபைபெரும் சிக்கல்களை எதிர்கொள்ள நேரும் என்றும் மின்சார சபை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.