சிதைந்த கனவால் சரிந்ததோர் ஆலமரம் தொடர் 02

  • 9

“உம்மா எனக்குப் பொண்ண புடிச்சீக்கி. ஒண்டும் கேக்க வாணம். பொண்ண மட்டும் எடுத்தாப் போதும்” இது ஆஸியாவின் மீது காதல்வயப்பட்ட மகனின் குரல். “நீங்க எந்த மகன் பேசிய??? ஒங்கட லெவல்க்கு ஒண்டும் இல்லாம பொண் எடுக்கேலுமா? எங்கட அடுத்தூட்டு மாமிட மகன் பெரிய பங்களா, கார், கோடிக்கணக்கான சல்லி எண்டு நெறய சீதனத்தோட பொண் எடுத்தீக்கான். அவன விட நீங்க எவளவு பெரிய ஜொப் செய்றீங்க…. ஒங்களுக்கும் நெறய சீதனத்தோட தான் பொண் எடுப்பேன்” என்று தாய் ஆக்ரோஷமாய் மகனின் காதில் ஊதினாள். “ஈந்தாலும் உம்மா…. எனக்கு அதுல விருப்பம் இல்லயண்டு தெரியும் தானே….” “மகன் நீங்க பேசாம ஈக்கோணம். இல்லாட்டி ஒங்கட வாழ்க்கய நீங்களே பார்த்துக்கோங்க. நான் போறன்” என்ற தாயின் முரட்டுத்தனமான மிரட்டலுக்குப் பெட்டிப் பாம்பாய் அடங்கினான் மாப்பிள்ளை.

“புரோக்கர் எங்களுக்கு பொண் ஓகே. மத்த விஷயங்களப் பேசினா நல்லம் எனா….” மாப்பிள்ளையின் தாய் வாழைப்பழத்தில் ஊசை ஏற்றுவது போல் பெண்ணுக்கான தூக்குக் கயிற்றை வீசத் தொடங்கினார். “ஓ…ஓ… இங்க பாருங்க…. மாப்புள நல்ல ஜொப்ல நிக்கிய. அதுக்கேத்த மாதி நீங்களும் குடுத்தா தானே அவங்களுக்கு தல நிமிர்ந்து நடக்கேலும். பெரிசா ஒண்டுமில்ல. ஒரு காரும், 50 பவுண் நகயும், 10 லட்சம் சல்லியும் குடுத்தாப் போதும்…” என்று வங்காள விரிகுடாவைப் போல் பட்டியலை விரித்து மாப்பிள்ளையைக் கல்யாணச் சந்தையில் பேரம் பேசத் தொடங்கினார் ஹாமித் நானா.
தாவூத் நானாவுக்கு தூக்கி வாரிப்போட்டது. மலைகளனைத்தும் தன் மீது இடிந்து வீழ்ந்ததாக ஓர் உணர்ச்சி. இருந்தாலும் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார். ‘இருப்பதோ ஒரே மகள். அவளுக்கும் மாப்புளய மிச்சம் புடிச்சிட்டு. அவள்ட ஆசய நிறைவேற்றுவது தானே ஏண்ட மகிழ்ச்சி’ என்று உள்ளத்தில் நினைத்தவாறே ‘வைன்’ கொடுத்த பொம்மையைப் போல் தலையசைத்து சம்மதித்தார். உள்ளிருந்த தாயும் மகளும் செய்வதறியாது பனியில் உறைந்தது போல் திகைத்து நின்றனர்.

“அப்ப சரி நாங்க பெய்துட்டு வாரோம். ஊட்டுக்கு பெய்த்து எல்லாரோடயும் பேசிட்டு தேதிய முடிவெடுப்பம்” என்று மாப்பிள்ளை வீட்டார் விடைபெறத் தயாராகினர். இவர்கள் மூவரினதும் மனதுகளில் வழியும் இரத்தக் கண்ணீர் அவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது. தாவூத் நானா போலியாக புன்னகையை வரவழைத்துக் கொண்டு அவர்களை வழியனுப்பினார்.

பூரண சந்திரன் வான் சிம்மாசனத்தில் வீற்றிருந்து பூமித் தாயைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தது. “மகள் நீங்க ஒண்டும் கவலப்பட வாணம். ஏண்ட சதுரத்த சாறா புழிஞ்சி சரி ஒங்கட கலியாணத்த செய்வேன். நீங்க நிம்மதியா இரீங்கோ. மைமூனா….. மகளப் பார்த்துக்கோங்க நான் பள்ளிக்குப் பெய்த்துட்டு வாரன்.” தாவூத் நானா வெளியேறினார். ஆஸியா விம்மிய இதயம் உடைந்து விழி வழியாய் நீர் கசியும் முன் அறைக்குள் ஓடினாள். தாயும் கூரையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.

வெளியே சென்ற தாவூத் நானா தொழுதுவிட்டு, அங்கேயும் இங்கேயும் அலைந்து திரிந்து இரவோடிரவாக பணத்தை ஏற்பாடு செய்து கடனாளியாக வீடு திரும்பினார். தாவூத் நானா நம்பிக்கைக்குரிய நல்ல மனிதர் என்பதால் அனைவரும் பணத்தைக் கடனாகக் கொடுத்துதவினர். வீட்டுக்கு வந்தவர், “மைமூனா…. அல்ஹம்துலில்லாஹ் சல்லியெல்லாம் ரெடி. இத தேதி குறிக்கும் வர கைல வெச்சிட்டு ஈக்கப் பயம். கள்ளனுகள் நெறஞ்சி. அதனால நாளக்கி இங்க பக்கத்துல புதிசா தொறந்தீக்கிய பிரைவேட் பேன்க்ல சல்லிய வெப்பம். இன்ஷா அல்லாஹ் தேதி குறிச்சத்தோட வேலய ஆரம்பிப்பம். எங்கட மகள்ட கலியாணத்த ஜாதியா செய்வம்” என்று கூறி விட்டு சாப்பிடாமலே உறங்கி விட்டார்.

மறுநாள் பணத்தை வங்கியில் வைத்து விட்டு திருமணத் திகதிக் குறிப்புக்கான மாப்பிள்ளை வீட்டின் தொலைபேசி அழைப்புக்காக காத்திருந்தனர். பெண்ணைப் பெற்றவர்களல்லவா. பணிந்து தான் போக வேண்டும் என்ற சமூகப் பழக்கத்துக்கு அடங்கிப் போயிருந்தனர். இரண்டு நாட்கள் கழிந்து விட்டன. “ரீங் ரீங்…. ரீங் ரீங்….” தொலைபேசி அலறியது. “வாப்பா கோல் வருது. கொஞ்சம் பாருங்களே. ஏண்ட கைல வேல.” “ஆ சரி மகள். மாப்புள ஊட்டாலயாய்க்கும். நான் பார்க்குறன்” சிறுபிள்ளை போல் துள்ளிக் குதித்துக் கொண்டு ஓடினார். திருமணம் முடிந்து விட்டது போன்றதொரு உணர்வு அவருக்கு. “ஹலோ…. அஸ்ஸலாமு அலைக்கும்….(சிறிது நேரத்தின் பின் அதிர்ச்சி கலந்த குரலுடன்) என்னது….??? உண்மயாவா….??? ஏண்டல்லா…..” அதற்கு மேல் ஓசை வரவில்லை. தந்தையின் கதறலைக் கேட்ட தாயும் மகளும் ஓடி வந்தனர். “எந்த வாப்பா…??? தாரு போன்ல…???” என்று தந்தையைப் பிடித்து உலுக்கினாள் ஆஸியா. “மகள்…..நாங்க சல்லி வெச்ச பேங்க் காரன்….(அவர் கண்களில் கண்ணீர் கசிகிறது)… சல்லியெல்லம் எடுத்துக்கொண்டு…. வெளிநாட்டுக்குத் தலமறவாகி…..ட்….டா….னா…..ம்….” திக்கித் திக்கி கீழே சாய்ந்து விட்டார். வார்த்தைகளுடன் சேர்த்து அவரது மூச்சும் அடங்கியது. ஒப்பாரிச் சத்தம் இடியாய் எங்கும் முழங்குகிறது…….

தொடரும்….

ILMA ANEES
SEUSL
2ND YEAR
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

.

“உம்மா எனக்குப் பொண்ண புடிச்சீக்கி. ஒண்டும் கேக்க வாணம். பொண்ண மட்டும் எடுத்தாப் போதும்” இது ஆஸியாவின் மீது காதல்வயப்பட்ட மகனின் குரல். “நீங்க எந்த மகன் பேசிய??? ஒங்கட லெவல்க்கு ஒண்டும் இல்லாம…

“உம்மா எனக்குப் பொண்ண புடிச்சீக்கி. ஒண்டும் கேக்க வாணம். பொண்ண மட்டும் எடுத்தாப் போதும்” இது ஆஸியாவின் மீது காதல்வயப்பட்ட மகனின் குரல். “நீங்க எந்த மகன் பேசிய??? ஒங்கட லெவல்க்கு ஒண்டும் இல்லாம…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *