மனநலமே பெருவரம்

உலகமனநல தினம் ஒக்டோபர் 10

தனித்து விளையாடும் பிள்ளையிடம் கொஞ்சநேரம் கொஞ்சல் பேச்சு
இயந்திரமாய் உலா வரும் அம்மாவுக்கோர் அன்பு முத்தம்
அந்திச்சூரியனாய் வீடேறும் அப்பாவிடம் ஒரு புன்னகை

சில்லறைகளை கைகளுக்குள் சிறைவைக்கும்
பாட்டியிம் கொஞ்சம் அன்பு வார்த்தைகள்
இனிப்புக்ளை இனிதுவக்கும் தாத்தாவுடன் சிறு நடை

பக்கத்து வீட்டுக்காரரிடம் ஆர்வமாய் நலம் விசாரிப்பு
தெருவோரக் குளிரில் சுருண்டு படுத்திருக்கும்
முதியவருக் கொரு போர்வை

யாசித்து திரியும் ஏழை கையில் ஓர் உணவுப் பொட்டலம்
இதழ்பிரியா அவசரத்தில் ஒரு பாசப் பார்வை
தூரத்து விடைபெறுதலொன்றில் ஒரு கையசைவு

மனதின் கனதி தாங்காப் பொழுதினில் ஒரு தலைவருடல்
துயரத்தின் முறையீடொன்றில் சில தீர்வுகள்
உள்ளம் உடைந்த கணம் தோள் சாய ஒரு தோழமை

எதிர்பாராப் பொழுதுகளில் சிறு அன்பளிப்புகள்
எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள வாழ்க்கைத்துணை
சிலநேரங்களில் குடும்பமாய் ஒரு சுற்றுலா

இத்தனையும் இந்நாட்களின் தேடலாய்
வாய்த்துவிட்டால் வரமல்லவா!
சீராகிவிடும் மனநலமல்லவா!

மக்கொனையூராள்