குஷிநகர் புனிதத் தலத்தில் விமான நிலையம் பிரதமர் மோடியினால் திறந்துவைப்பு

  • 14

இலங்கையில் இருந்து அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தலைமையில் புதிய விமான நிலையத்தில் தரையிறங்கிய முக்கியஸ்தர்களுக்கு இந்திய உயர்மட்ட குழுவினரால் பெருவரவேற்பு

புத்தர் பெருமானின் புனித சின்னங்களுடன், ராஜகுரு ஸ்ரீ சுபுதி மகாவிகாரையின் பிரதம குருவான சங்கைக்குரிய வஸ்கடுவே மஹிந்தவன்ச நாயக தேரர் உட்பட 100 பௌத்த குருமாரும் பயணத்தில் பங்கேற்பு

புத்தர் பெருமான் மகாபரிநிர்வாணமடைந்த புனிதம் நிறைந்த தலத்தைப் பார்வையிட வருகின்ற உள்நாட்டு மற்றும் சர்வதேச யாத்திரிகர்களுக்கு வசதியாக, உத்தரபிரதேசத்தின் குஷிநகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய சர்வதேச விமான நிலையத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். இலங்கையிலிருந்து முதல் விமானம் வந்ததைத் தொடர்ந்து புதிய சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார்.

இந்த விமான நிலையமானது உலகெங்கும் உள்ள புத்தர் பெருமானின் யாத்திரைத் தலங்களை இணைக்கும் வகையில் செயல்படும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தர்ப்பத்தில் முதலாவது விமானம் இலங்கையிலிருந்து வருகை தருமாயின் அது குறித்து பெரும் மகிழ்ச்சியடைவதாக இந்தியப் பிரதமர் ஏற்கனவே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்திருந்தார்.

அதற்கமைய குஷிநகர் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக பிரகடனப்படுத்தப்படுவதைக் குறிக்கும் வகையில் இலங்கையிலிருந்து புறப்பட்டு சென்றுள்ள ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் விமானம் முதலாவதாக அங்கு தரையிறங்கியது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் எண்ணக்கருவிற்கமைய அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் வெண்டருவே உபாலி தேரர் உள்ளிட்ட மஹாசங்கத்தினர் நூறு பேர் பங்கேற்றுள்ளனர்.

விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவையின் தலைவர் அசோக் பதிரகே உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இவ்விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.

நான்கு இராஜாங்க அமைச்சர்கள், சிரேஷ்ட அதிகாரிகளும் வப் போயா தினமான நேற்று புனித தலமான குஷிநகரை சென்றடைந்தனர். இலங்கையில் இருந்து சென்றுள்ள குழுவினரில் இராஜாங்க அமைச்சர்கள் டி.வி.சானக, ஜீவன் தொண்டமான், சிசிர ஜயக்ெகாடி, விஜித பேருகொட ஆகியோரும் அடங்கியுள்ளனர்.

மேலும் இலங்கைக் குழுவில் நாட்டின் 22 மாவட்டங்களைச் சேர்ந்த பௌத்த விகாரைகளின் மகாநாயக்கர்கள் அடங்கியுள்ளனர்.

இலங்கை, இந்திய மக்களை வரலாற்று ரீதியாக இணைக்கின்ற பாலமாக பௌத்த சமயம் திகழ்கின்றது.

கி.மு 3 ஆம் நூற்றாண்டு காலப் பகுதியில் இந்தியாவில் இருந்து அசோகச் சக்கரவர்த்தியின் புதல்வரான மஹிந்த தேரர், புதல்வியான இளவரசி சங்கமித்த ஆகியோரின் வருகையையடுத்து இலங்கையில் பெளத்த சமயம் பரவியது. அவ்வேளையில் இலங்கையில் தேவநம்பியதீசன் மன்னர் ஆட்சியில் இருந்தார். அதனையடுத்து இலங்கை_ இந்திய மக்களுக்கிடையில் சமய மற்றும் கலாசார ரீதியில் நெருங்கிய தொடர்புகள் நிலவி வருகின்றன.

இதேவேளை டெல்லியிலிருந்து குஷிநகருக்கு நேரடி விமானங்கள் நவம்பர் 26 முதல் தொடங்கும் என்று இந்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 18 முதல் குஷிநகர் மும்பை மற்றும் கொல்கத்தா ஆகியவை நேரடி விமானங்கள் மூலம் இணைக்கப்படும். இந்திய விமான நிலைய ஆணையம் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை 3600 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய முனைய கட்டிடத்துடன் உருவாக்கியுள்ளது.

குஷிநகருக்கான முதலாவது சர்வதேச விமான சேவையை கொழும்பிலிருந்து ஆரம்பிக்கும் வகையில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் நேற்று புதன்கிழமை அதிகாலை இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து குஷிநகர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டனர். குஷிநகர் விமான நிலையத்தை சென்றடைந்த இலங்கைக் குழுவினர் இந்திய வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷ் வர்தள் ஷ்ரிங்லாவினால் வரவேற்கப்பட்டனர். விமான நிலையத்தை திறந்து வைத்ததன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றினார்.

குஷிநகர் விமான நிலையத்தை திறந்து வைத்த பின் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷவை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்.

சங்கைக்குரிய மஹாசங்கத்தினரின் ஆசீர்வாதத்துடன் வஸ்கடுவ கபிலவஸ்து புனித சின்னங்கள் சகிதம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணமாக நேற்றைய பயணம் கருதப்படுகின்றது. அதற்கமைய கொழும்பிலிருந்து குஷிநகருக்கான விமானத்தின் வருகையுடன் வஸ்கடுவ புனித கபிலவஸ்து சின்னங்களின் கண்காட்சி ஆரம்பமானது.

இதன் போது அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான குழுவினரை உத்தர மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் அமைச்சர்கள் பலர் வரவேற்றனர்.

புத்தபெருமான் மஹாபரிநிர்வாண நிலையினை அடைந்த ஸ்தலமான குஷிநகர் மிகவும் தனித்துவமான ஸ்தானத்தைக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு 2020 செப்டெம்பர் 26 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான மெய்நிகர் இருதரப்பு மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடி குஷிநகருக்கான முதலாவது சர்வதேச விமான சேவையானது இலங்கை யாத்திரிகர்கள் குழுவுக்கானதாக அமைய வேண்டும் என அறிவித்திருந்தார்.

இலங்கையின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள முக்கிய விகாரைகளைச் சேர்ந்த சுமார் 100 சிரேஸ்ட பௌத்த மதகுருமாரும் இந்த முதலாவது விமான சேவையில் இணைந்து கொண்டனர். இந்தியாவின் பௌத்த வளாகத்தின் மையப் புள்ளியாக குஷிநகர் கருதப்படுவதுடன் புதிய சர்வதேச விமான நிலையம் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான மக்கள் தொடர்புகளை கணிசமான அளவில் மேலும் பலப்படுத்தும்.

இந்த விமானசேவை அங்குரார்ப்பணமானது மக்களிடையிலான தொடர்புகளை அடிக்கோடிட்டுக் காட்டுவது மட்டுமல்லாமல் இரு அயல் நாடுகளுக்கும் இடையேயான ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமையான நாகரிக உறவுகளையும் சுட்டிக் காட்டுகிறது. இந்த இருதரப்பு உறவில் கலாசார, ஆன்மீக மற்றும் மொழியியல் பிணைப்புகளுக்கு பௌத்த மதம் மையமாக உள்ளது.

இலங்கையிலிருந்து சென்ற குழு இந்தியாவில் தங்கியிருக்கும் காலப் பகுதியில் வாரணாசிக்கும் விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளது. அத்தோடு இக்குழு நேற்று காசி விஸ்வநாதர் ஆலயத்தில் விசேட வழிபாட்டில் ஈடுபட்டதோடு, இன்று வியாழக்கிழமை மாலை கொழும்புக்குத் திரும்புவதற்கு முன்னர் கங்கை தரிசனத்திலும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த நிகழ்வுக்கு முக்கியத்துவத்தைச் சேர்க்கும் வகையில், வஸ்கடுவா ராஜகுரு ஸ்ரீ சுபுதிமஹாவிகாரையிலிருந்து புனித கபிலவஸ்து புத்தர் சின்னங்களும் வப் போயா நாளில் நடைபெறும் இந்த முதலாவது விமான சேவையில் கொண்டு செல்லப்பட்டன.

புத்தபெருமானின் நினைவுச்சின்னங்களை தற்போது பாதுகாத்து வரும், ராஜகுரு ஸ்ரீ சுபுதி மகாவிகாரையின் பிரதம குருவான சங்கைக்குரிய வஸ்கடுவே மஹிந்தவன்ச நாயக தேரர் இப்புனித சின்னங்களை குஷிநகருக்கான முதலாவது சர்வதேச விமான சேவையில் கொண்டு சென்றார்.

புனித சின்னங்களுக்கு குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தில் உரிய முறையில் வரவேற்பளிக்கப்பட்டதோடு, இந்திய அரசாங்கத்தால் முழுமையான அரச கௌரவமும் வழங்கப்பட்டது. மேலும் குஷிநகர் மற்றும் சாரநாத் உள்ளிட்ட பல இந்திய நகரங்களில் அவை காட்சிப்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

குஷிநகருக்கான முதலாவது விமானசேவையும் புனித சின்னங்களின் கண்காட்சியும் இந்திய இலங்கை மக்களால் பகிரப்படும் பொதுவான அம்சங்களுக்கு சான்று பகிர்வதாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் இருந்து அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தலைமையில் புதிய விமான நிலையத்தில் தரையிறங்கிய முக்கியஸ்தர்களுக்கு இந்திய உயர்மட்ட குழுவினரால் பெருவரவேற்பு புத்தர் பெருமானின் புனித சின்னங்களுடன், ராஜகுரு ஸ்ரீ சுபுதி மகாவிகாரையின் பிரதம குருவான…

இலங்கையில் இருந்து அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தலைமையில் புதிய விமான நிலையத்தில் தரையிறங்கிய முக்கியஸ்தர்களுக்கு இந்திய உயர்மட்ட குழுவினரால் பெருவரவேற்பு புத்தர் பெருமானின் புனித சின்னங்களுடன், ராஜகுரு ஸ்ரீ சுபுதி மகாவிகாரையின் பிரதம குருவான…