ஏற்றுமதி நோக்கான மரமுந்திரிகை உற்பத்தி; பூநகரி பெண் தொழில் முயற்சியாளரின் சாதனைப் பயணம்

ஏற்றுமதியை நோக்காகக் கொண்டு பதப்படுத்திய மரமுந்திரிகை உற்பத்தியை மேற்கொண்ட கிளிநொச்சி, பூநகரி, மட்டுவில்நாடு பிரதேச தொழில் முயற்சியாளர் ஜெஸ்மின் ஜெயமலர் தனது சாதனைப் பயணம் தொடர்பில் தினகரனுக்கு வழங்கிய செவ்வி.

கேள்வி: உங்கள் தொழில் முயற்சி, நீங்கள் இத்தொழில் முயற்சியை எப்போது ஆரம்பித்தீர்கள், ஏற்றுமதியை நோக்கமாகக் கொண்ட தொழில் முயற்சியின் மூலம் என்ன வகையான உள்ளூர் உற்பத்திகளை தயாரித்து ஏற்றுமதி செய்கிறீர்கள்?

பதில்: நேச்சவின் பிறைவேற் லிமிட்டெட் (Naturewins Pvt Ltd எனும் வியாபாரப் பெயரைக் கொண்ட எமது நிறுவனம். 2019ஆம் ஆண்டு  புரட்டாதி மாதம் ஆரம்பிக்கப்பட்டது. உள்ளூர் மக்களுக்கான வேலை வாய்ப்பபை  வழங்கும் தார்மீக எண்ணத்துடனும் பிரதானமாக பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் நோக்குடனும் உள்ளூர் விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு சர்வதேச தரத்தில் பெறுமதி சேர்க்கும் நடவடிக்கையை மேற்கொண்டு விவசாயிகளுக்கு அதன் பெறுமதியை பெற்றுக்கொடுக்கும் நோக்குடனும் இது ஆரம்பிக்கப்பட்டது. இது கிளிநொச்சியிலுள்ள பூநகரியில் அமைந்துள்ளது. விவசாயிகளிடமிருந்து பெறப்படும் கஐூவினை பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திப்  பொருட்களாக மாற்றியமைக்கும் செயல் நடவடிக்கையில் 13 பெண்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

தூள், உப்பு, சீனிப்பாணி, பனங்கட்டிப்பாணி ஆகிய உள்ளீடுகள் தனித்தனியாக சேர்க்கப்பட்ட உற்பத்திகளாகவும் மற்றும் எண்ணெயில் பொரித்தல் போன்ற  பலவகையான உற்பத்திகளை “வன்னி மரமுந்திரிகை” (Vanni Cashew) என்னும் எமது உற்பத்தி நாமப் பெயருடன் நாம் செய்து வருகிறோம். வட மாகாணத்தின் முதலாவது நிறுவனமயமாக்கப்பட்ட மர முந்திரிகை உற்பத்தி நிறுவனம் என்பதில் நாம் பெருமை கொள்கிறோம்.

கேள்வி:  உங்கள் தயாரிப்புகள் தற்பொழுது எந்தெந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது?

பதில்: பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் கனடா போன்ற நாடுகளுக்கு கொழும்பின் முன்னனி ஏற்றுமதியாளர்களினால் எமது உற்பத்திகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. ஏற்றுமதியைத் தவிர யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா அனுராதபுரம் கொழும்பு ஆகிய மாவட்டங்களிலும்  இலங்கையின் முன்னனி கஜு உற்பத்தி நிறுவனங்களுக்கு நிகராக எமது விற்பனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம்.

கேள்வி: உங்கள் பொருட்களை உலக சந்தைக்கு ஏற்றுமதி செய்யும் போது நீங்கள் சந்தித்தித்த சவால்கள் எவை?

பதில்: நேரடி ஏற்றுமதி நடவடக்கையை மேற்கொள்ள முக்கிய ஆவணமாக உற்பத்திப் பொருட்களுக்கான தரச்சான்றுதழ் கருதப்படுகின்றது. தரச் சான்றுதழை பெற்றுக் கொள்வதற்கு எமது நிறுவனத்தின் பகுதிகளாக பிரிக்கப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகள்  மற்றும் நவீன இயந்திரங்களின் பாவனை மற்றும் தொழில்நுட்ப உத்திகளை கையாளும் திறமைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்த  வேண்டும். நாம் அதற்கான நடவடிக்கைகளில் வடமாகாண ஏற்றமதி அபிவிருத்தி சபையின் உதவியுடனும் வழிகாட்டுதலுடனும் ஈடுபட்டு வருகின்றோம்.

எமது பிரதேசமான பூநகரியில் காணப்படும் எல்லா நிலங்களும் வயல் காணிகளாகவே பதியப்பட்டுள்ளன. இவற்றில் நாம் வயல் அல்லாத நடவடிக்கையை மேற்கொள்வதற்கு அனுமதி பெறுவது என்பது கடினமாக உள்ளது. எனவே சிறிய ஒரு இடத்திற்குள் எமது உற்பத்தி நடவடிக்கைகளை மட்டுப் படுத்த வேண்டிய நிலையில் நாம் உள்ளோம்.

கேள்வி: தற்பொழுது நாட்டில் ஏற்றுமதியின் வகிபாகம் முக்கியமாக உணரப்பட்டுள்ள சூழ்நிலையில் உங்களுக்கு அரச நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் ஆதரவுகள் உதவிகள்  பற்றிக் குறிப்பிட முடியுமா?

பதில்: ஆம். வடமாகாண ஏற்றுமதி அபிவிருத்திச் சபை ((Sri Lanka Export Development Board – (EDB) ) எமக்கான வெளிநாட்டு வாடிக்கையாளர்களை,  இறக்குமதியாளர்களை பெற்றுக் கொள்வதற்கு பல சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தந்துள்ளது. ஏற்றமதி தொடர்பாக எல்லா வழிகளிலும் உதவி செய்வதற்கு அவர்கள் முன்னின்று செயற்படுவதில் நாம் நிறைவடைகின்றோம். வியாபார மேம்படுத்தல், உள்ளூர் காட்சிப்படுத்தல், எமக்கான நிலையான இடத்தினை பெற்றுக் கொடுத்தல் என்பவற்றுடன் மரமுந்திரிகை கொள்வனவு முதல் விற்பனை வரை அனைத்து நடவடிக்கைகளிலும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் வடமாகாண அலுவலகம் உறுதுணையாக நிற்கின்றது;. எமது நேச்சர்வின் பிரைவேற் லிமிற்ரெற் நிறுவனம், அவர்களின் ஆழ்ந்த ஈடுபாட்டிற்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.

கேள்வி: உள்ளூர் சந்தையில் உங்கள் தயாரிப்புகளுக்கு நல்ல கேள்வி உள்ளதா? உள்ளூர் சந்தையிலுள்ள கேள்வியை உங்களால் பூர்த்தி செய்ய முடிகிறதா?

பதில்: ஆம். உள்ளூரில் எமது உற்பத்திப் பொருளுக்கு மிக அதிகளவான கேள்வி உள்ளது. நாம் பிரதானமாக உள்ளூர் சந்தைக்கே நமது உற்பத்திப் பொருட்களை வழங்கி வருகின்றோம். மேலும் சிறிய அளவில் ஏற்றுமதி நடவடிக்கையை மேற்கொள்கின்றோம். உள்ளூர் வாடிக்கையாளர்களுக்கு  மிகுந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். அவர்கள் எமது உற்பத்தி தொடர்பாக தமது சமூக வலைத்தளங்கள் மூலமாக மற்றவர்களுக்கும் எமது உற்பத்தியை தெரியப்படுத்தினார்கள். நாம் எமது வாடிக்கையாளரிடமிருந்து எமது உற்பத்தி தொடர்பான கருத்துக்களையும் அவரகளது ஆலோசனைகளையும் பெற்று எமது உற்பத்தியின் தரத்தை மேம்படுத்துவதில் ஆர்வமாகவும் அர்ப்பணிப்புடனும் உள்ளோம். கஐூவை  மூலப்பொருளாக கொண்ட புதுவகையான உற்பத்திப் பொருட்களை (Cashew milk , Cashew Butter, Cashew Oil) அறிமுகப்படுத்துவதற்கு  பனை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவருத்தி சபை போன்ற  பல நிறுவனங்களுடன் சேர்ந்து பணியாற்றி வருகின்றோம்.

கேள்வி: உலகளாவிய ரீதியில் மற்றும் உள்நாட்டில் உங்களின் தொழில் வளர்ச்சிக்கு என்ன காரணிகள் பங்களித்ததாக நீங்கள் நினைக்கின்றீர்கள்?

பதில்: அண்மைக்கால கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகான ஆய்வுகள் பதப்படுத்தப்பட்ட மரமுந்திரிகை கொள்வனவுக்கான கேள்வி சர்வதேச ரீதியில் அதிகரித்துள்ளமையை தரவுகள் வெளிப்படுத்துகின்றன. ஆரோக்கியம் தொடர்பான மக்களிடம் உள்ள  விழிப்புணர்வு ஆர்வம், தானிய மற்றும் பருப்பு வகைகளுக்கான சந்தை வாய்ப்பை அதிகரித்துள்ளது. முன்னர் பலர் மரமுந்திரிகையில் கொலஸ்ரோல் இருப்பதாக தவறாக புரிந்து வைத்திருந்தார்கள். ஆனால் அண்மைக்கால இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தால் இது தொடர்பான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம், பிரசாரங்கள் மூலம் மரமுந்திரிகையில் நமது உடலுக்கு ஏதுவான நல்ல கொழுப்பை கொண்டுள்ளது என்றும் மேலும் இதயத்தை பலப்படுத்துகின்றது என்பது தொடர்பான தெளிவை மக்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளது.

கேள்வி: கொவிட் 19 பெருந்தொற்று உங்கள் வியாபாரத்தை எவ்வாறு பாதித்தது?

பதில்: நாம் ஆரம்பித்து ஆறு மாதங்கள் செல்வதற்கு முன்னதாகவே கோவிட் 19 தாக்கத்தை சந்திக்கவேண்டியிருந்தது. பயணக்கட்டுப்பாடு, போக்குவரத்துத்தடை, விலை உயர்வு போன்றன கேள்வியில் தாக்கத்தை ஏற்படுத்தியருந்தது. மேலும் ஆரம்பத்தில் கடைகள் முற்றாகவே மூடப்பட்டிருந்தன. நாம் விற்பனைக்கு கொடுத்த பொருட்களை விற்பனையின்றி மீண்டும் பெறவேண்டியிருந்தது. அது சிரமமாகவும் மேலும் இழப்பாகவும் இருந்தாலும் நமது உற்பத்திப்பொருட்களின் தன்மையை மாற்றிக் கொண்டமை வியாபாரத்திற்கான நல்ல முன்னேற்றமாகவே அமைந்தது. மேலும் பூநகரி, சங்குப் பிட்டி பாலம் ஊடாக மன்னார், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் பயணிப்போரை இலக்கு வைத்து எமது நிறுவனத்தின் விற்பனை நிலையம் ஒன்றினை (Mini sales stall) எமது தொழிற்சாலைக்கு முன்பாக நிறுவி எமது  உற்பத்தி பொருட்களை நுகர்வோருக்கு விற்றும் வருகின்றோம் இது இவ் வீதியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் எமது நிறுவனத்துக்கும் மிகவும் பயனுள்ளதாகவுள்ளது.

கேள்வி: உலகளாவிய ரீதியில் பெறுமதி சேர்க்கப்பட்ட மரமுந்திரிகை பொருட்களுக்கான சந்தை நிலவரம் எவ்வாறு உள்ளது இந்த சந்தையில் முக்கிய பங்கு வகிக்க்கும் இலங்கை தவிர்ந்த ஏனைய நாடுகள் எவை?

பதில்: இலங்கை மரமுந்திரிகையின் விலை உலக சந்தையில் சற்று அதிகமாக உள்ளது. பெறுமதி சேர்க்கப்பட்ட மரமுந்திரிகை பொருட்களான  மரமுந்திரிகையினாலான  பட்டர் (Cashew butter)  மரமுந்திரிகையினாலான பால் (Cashew milk) என்பன இலங்கையினுடைய  உற்பத்திப் பொருட்களாக உலக சந்தையில் இல்லை. இதற்கான முக்கிய காரணம்  இலங்கையில் மரமுந்திரிகையின் விளைச்சல் குறைவாக காணப்படுகின்றமை ஆகும் உலக சந்தையில்  பிரதானமாக கஐூ ஏற்றுமதி நாடாக விளங்கும் வியட்னாம், இந்தியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுடன்  போட்டியிட வேண்டியுள்ளதால் இலங்கையின் கஐூ உற்பத்தியின் விளைச்சலை  அதிகரிக்க வேண்டும்.

கேள்வி: ஏற்றுமதியாளராக (இளம் தொழில் முனைவோராக) விரும்புவோருக்கு நீங்கள் என்ன ஆலோசனை வழங்க விரும்புகிறீர்கள்?

பதில்: தொழில்முயற்சியாளர்களுக்கு சொல்லக்கூடியது என்னவெனில் ஒரு தொழில்முயற்சியை ஆரம்பித்து இரண்டு மூன்று வருடங்களுக்கு வரும் சவால்களை எதிர்நோக்கி நிற்பது ஒரு முயற்சியை நிலைப்பதற்கான முதலாவது மைல் கல்லாக இருக்கும். அது ஒரு சவாலான விடயமாக இருந்தாலும் முயற்சி ஆர்வம் தைரியம் இருக்கும்போது அது மிகவும் புதுமையானது கடந்து செல்லக்கூடிய விடயமாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் சிறிதாக ஆரம்பித்து பலமாக வளர்வது சிறப்பாக இருப்பதாக நினைக்கிறேன். உள்ளூரில் செய்யப்படும் முதலீடுகள், முயற்சிகள் அவரின் தனித்தன்மையின் நல்ல இயல்புகளையும் மாற்றாமல், தேவையான பொருளாதாரத்தை பெற்றுக்கொள்ளக்கூடிய இயல்பான வாழ்க்கையை மாற்றாத வகையில் செய்யப்பட வேண்டும் என நான் எண்ணுகின்றேன். உள்நாட்டுச் சந்தை போலவே வெளிநாட்டு சந்தையிலும் நமது தரமான உற்பத்திகளுக்கான வாய்ப்பு உள்ளது பல நேரங்களில் அதிகமாக உள்ளது.