ஜனாதிபதி கோட்டாபயவை சர்வதேச நீதிமன்றம் மூலம் விசாரணை மற்றும் கைது செய்ய நடவடிக்கை?

  • 18

தனுஜா

மனித குலத்திற்கு எதிரான மிகமோசமான குற்றச்செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமைக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்புச்செயலாளர் கமால் குணரத்ன, முன்னாள் இராணுவப்பிரதானி ஜகத் ஜயசூரிய, முன்னாள் பொலிஸ்மா அதிபர் சிசிர மென்டிஸ் உள்ளிட்ட மேலும் பல அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்று கோரும் 200 இலங்கைத் தமிழர்கள் சார்பிலான மிகமுக்கிய சமர்ப்பணம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி இதுபற்றிய ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் கிளாஸ்கோவில் நடைபெறவுள்ள மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஏனைய இலங்கை பிரதிநிதிகளைக் கைதுசெய்வதற்கான பிடியாணையைப் பிறப்பிப்பதற்கும் ஏற்றவகையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சமர்ப்பணம் பிரிட்டனின் மெட்ரோ பொலிட்டன் பொலிஸுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்தை தளமாகக்கொண்டு இயங்கிவரும் ‘குளோபல் ரைட்ஸ் கொம்பிலியன்ஸ்’ (பூகோள உரிமைகள் இணக்கப்பாட்டு அமைப்பு) என்ற சர்வதேச மனித உரிமை அமைப்பினால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் சட்ட எல்லைகளின் 15 ஆவது சரத்திற்கு அமைவாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் மேற்படி சமர்ப்பணம் முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2002 ஆம் ஆண்டிலிருந்து இடம்பெற்ற குற்றங்களின்போது இலங்கை பொலிஸ் மற்றும் இலங்கை இராணுவம் உள்ளடங்கலாக அக்குற்றங்களுடன் தொடர்புபட்டவகையில் கட்டளை பிறப்பிக்கும் அதிகாரத்தில் அல்லது பொறுப்பிலிருந்த இலங்கை அரசாங்கத்தின் அதிகாரிகள் பலரின் பெயர்கள் குளோபல் ரைட்ஸ் கொம்பிலியன்ஸ் அமைப்பின் சமர்ப்பணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அதன்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்புச்செயலாளர் கமால் குணரத்ன, முன்னாள் இராணுவப்பிரதானி ஜகத் ஜயசூரிய, முன்னாள் பொலிஸ்மா அதிபர் சிசிர மென்டிஸ் உள்ளடங்கலாக மேலும் பல பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் இலங்கை பொலிஸ் விசேட செயலணியில் கட்டளை பிறப்பிக்கும் அதிகாரத்தில் இருந்தவர்களின் பெயர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டியவர்களின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

கிளாஸ்கோவில் இம்மாதம் 31 ஆம் திகதி முதல் எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதிவரை காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கியநாடுகள் சபையின் மாநாடு நடைபெறவிருக்கும் நிலையிலேயே இந்தச் சமர்ப்பணத்தைத் தாக்கல் செய்திருப்பதாக குளோபல் ரைட்ஸ் கொம்பிலியன்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

அதுமாத்திரமன்றி இதுபற்றிய ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் கிளாஸ்கோ மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஏனைய இலங்கை பிரதிநிதிகளைக் கைதுசெய்வதற்கான உத்தரவைப் பிறப்பிப்பதற்கும் (பிடியாணை) ஏற்புடையவகையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சமர்ப்பணத்தை பிரிட்டனின் மெட்ரோபொலிட்டன் பொலிஸுக்கும் அனுப்பிவைத்திருப்பதாக குளோபல் ரைட்ஸ் கொம்பிலியன்ஸ் அமைப்பு அதன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புடன் முன்னர் பேணிய தொடர்புகளுக்காக ஆயிரக்கணக்கான அப்பாவித்தமிழர்கள் இலங்கையின் பாதுகாப்புப் படையினரால் கடத்தப்பட்டு, சட்டவிரோதமாகத் தடுத்துவைக்கப்பட்டு, சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.

மனிதகுலத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட மிகமோசமான இந்தக் குற்றங்கள் தொடர்பில் எவ்வித சந்தேகங்களும் இல்லை. இவைதொடர்பில் இலங்கையைச் சேர்ந்த நிபுணர்களாலும் ஐக்கிய நாடுகள்சபை, ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச மன்னிப்புச்சபை மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆகியவற்றின் அறிக்கைகளிலும் முன்வைக்கப்பட்டிருக்கும் சாட்சியங்கள் மிகத்தெளிவானவையாக இருக்கின்றன என்றும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளைப் பேணியிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்பட்ட தமிழர்கள் திட்டமிட்டுக் கடத்தப்பட்டமை, சட்டவிரோதமாகத் தடுத்துவைக்கப்பட்டமை மற்றும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டமை ஆகிய சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்களில் முன்னிலை வகிப்பது இலங்கை பொலிஸும் இலங்கை இராணுவமுமேயாகும் என்று சுட்டிக்காட்டியுள்ள குளோபல் ரைஸ்ட் கொம்பிலியன்ஸ் அமைப்பு, தொடர்ச்சியான கண்காணிப்புக்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் நாட்டைவிட்டு வெற்றிகரமாகத் தப்பியோடியவர்கள் அதிஷ்டசாலிகளே. இலங்கை அரசாங்கம் அவர்களின் பாதுகாப்பை மறுப்பதுடன் அவர்கள் மீண்டும் நாடு திரும்புவதற்குத் தடைகளை ஏற்படுத்தியிருக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஆகவே இலங்கை நிலைவரம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தலையீடுகளை மேற்கொள்வதுடன் மனிதகுலத்திற்கு எதிராக மனிதாபிமானமற்ற குற்றங்கள் தொடர்பில்  விசாரணைகளையும் முன்னெடுக்கவேண்டும். அதுமாத்திரமன்றி சர்வதேச தீர்ப்பாயத்தின் கொள்கைகளின் பிரகாரம், பிரிட்டன் இதுகுறித்து விசாரணைகளை முன்னெடுத்து குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். பிரிட்டனால் உரிய நடவடிக்கை எடுக்கமுடியாத பட்சத்தில், நீதிநிலைநாட்டப்படுவதை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உறுதிப்படுத்தவேண்டும் என்றும் அவ்வமைப்பின் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தனுஜா மனித குலத்திற்கு எதிரான மிகமோசமான குற்றச்செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமைக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்புச்செயலாளர் கமால் குணரத்ன, முன்னாள் இராணுவப்பிரதானி ஜகத் ஜயசூரிய, முன்னாள் பொலிஸ்மா அதிபர் சிசிர…

தனுஜா மனித குலத்திற்கு எதிரான மிகமோசமான குற்றச்செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமைக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்புச்செயலாளர் கமால் குணரத்ன, முன்னாள் இராணுவப்பிரதானி ஜகத் ஜயசூரிய, முன்னாள் பொலிஸ்மா அதிபர் சிசிர…