கிழக்கில் பல ஆண்களின் நிர்வாணப் படங்களை சமூக வலைத்தளங்களில் வௌியிடுவதாக அச்சுறுத்தி பணம் பறித்த பெண்

எம். எஸ் முஸப்பிர்

சமூக ஊடகங்களுள் பிரபலமான முகநூல் சமூக வலைத்தளத்தின் ஊடாக பெரும்பாலானவர்கள் பயனுள்ள விடயங்களை மேற்கொண்டு வரும் அதே நேரம் சிலர் அதனை பல்வேறு மோசடி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தி வருகின்றனர். விசேடமாக பெண்களுக்கு சமூக வலைத்தளங்களில் உலாவும் மோடிக்காரர்களால் விடுக்கப்படும் துன்புறுத்தல்கள் ஏராளமானவை. அவற்றுள் பெண்களின் ஆபாசப் படங்கள் வெளியிடப்பட்ட சம்பவங்களும் எண்ணிலடங்காதவை.

சில தினங்களுக்கு முன்னர் முகநூல் சமூக வலைத்தளத்தில் பெண் ஒருவரால் ஆண்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வந்த மோசடி தொடர்பான செய்தி வெளிவந்தது. பேஸ்புக் மற்றும் வட்சப் வீடியோ அழைப்புக்கள் மூலம் ஆண்களின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பெற்றுக் கொண்டு அந்த ஆண்களை அச்சுறுத்தி பாரியளவில் பண மோடிசயில் ஈடுபட்ட பெண் ஒருவருடன் ஆண் ஒருவரையும் கடந்த ஒக்டோபர் 29ம் திகதி அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்தனர்.

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவானது முஸ்லிம்கள் அதிகளவில் வாழும் ஒரு பிரதேசமாகும். கடந்த 28ம் திகதி மாலையில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் விஜேதுங்கவைச் சந்திப்பதற்கு நண்பர் ஒருவருடன் வந்திருந்தது றிபான் என்பராகும். 43 வயதுடைய றிபான் சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்தவராகும். தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனைப் பிரதிநிதியாகப் பணியாற்றும் றிபான் அடிக்கடி பேஸ்புக்கில் உலா வருபவராகும். இற்றைக்கு 3, 4 மாதங்களுக்கு முன்னர் றிபான் பேஸ்புக் ஊடாக யுவதி ஒருத்தியோடு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அவ்யுவதி ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ரஹூமா என்ற பெண்ணாகும். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியைச் சந்திக்க வந்த றிபான் இவ்வாறு கூறினார்,

“சேர்…. என்னிடம் ஒருவர் ஆறு இலட்சம் பணம் கேட்டு மிரட்டுகிறார்…. பணத்தை வழங்காவிட்டால் எனது நிர்வாணப் படங்களை இணையத்தளத்தில் போடுவதாக என்னை அச்சுறுத்துகிறார்….” என்றார்.

இதனையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி றிபானிடம் இச்சம்பவத்தின் முழு விபரங்களையும் விசாரித்தார். அப்போது றிபான்,

“அதாவது சேர்…, நான் இற்றைக்கு 3, 4 மாதங்களுக்கு முன்னர் பேஸ்புக் மூலமாக ரஹூமா என்ற யுவதியுடன் அறிமுகமாகிக் கொண்டேன்….. அவள் எனக்கு எப்போதும் மெசேஜ் அனுப்பத் தொடங்கினாள்….. பின்னர் நாம் இருவரும் பேஸ்புக் மூலமாக, வட்சப் வீடியோ கோல் மூலமாக காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டோம்…. வீடியோ கோல் மூலமாக அவளும் அவளது நிர்வாண புகைப்படங்களைக் காண்பித்தாள்…. அதன் பின்னர் நானும் எனது நிர்வாணப் படங்கள் மற்றும் வீடியோக்களை அவளுக்கு அனுப்பினேன்…..”

அவ்வாறு வீடியோ காட்சிகளை வழங்கும் போது ரஹூமா எந்தச் சந்தர்ப்பத்திலும் அவளது முகத்தைக் காட்டவில்லை. அவள் முகத்தைக் காட்டாமல் வேறு யுவதிகளின் நிர்வாண புகைப்படங்களை ஆண்களுக்கு அனுப்பியுள்ளமை பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. எனினும் அவள் ஆண்களின் முழு மையான நிர்வாணமாக படங்களையும், வீடியோக்களையும் பெற்றுக் கொள்வதற்கு தந்திரங்களைச் செய்துள்ளார். அவ்வாறு பெற்றுக் கொண்ட படங்கள் மற்றும் வீடியோக்களை அந்நேரமே டவுன்லோட் செய்து கொள்வதற்கும் ரஹூமா தந்திரங்களைக் கையாண்டுள்ளார்.

இவ்வாறு படம், வீடியோக்களை பெற்றுக் கொண்ட பின்னர் ரஹூமாவிடமிருந்து ரிபானுக்கு அழைப்புக்கள் வருவது திடீரென நின்று போனது. அதற்கு சில தினங்களுக்குப் பின்னர் றிபானுக்கு அறிமுகமில்லாத ஒருவரிடமிருந்து அழைப்பு ஒன்று வந்துள்ளது. “உனக்கு நான் யார் என்று தெரியுமா…..? நீ என் மனைவியுடன் திருட்டுத்தனமாக உறவைப் பேணி வந்துள்ளாய்….. என் மனைவி கையும் களவுமாக அகப்பட்டுக் கொண்டாள்…..என் மனைவியின் கைபேசியில் அனைத்தும் உள்ளது…. வீடியோ, போட்டோக்கள் என்று எல்லாமே உள்ளது….. உனக்கு நான் யார் என்பதைக் காட்டுகிறேன்…. உன் படங்கள், வீடியோக்களுடன் பொலிஸ் நிலையத்திற்குப் போகப் போகிறேன்…. உன் வீடியோக்கள் அனைத்தையும் முகநூலில் போடப் போகிறேன்…..”

அந்த அழைப்பையடுத்தே றிபானுக்கு தான் செய்திருக்கும் செயலின் பாரதூரத்தன்மை விளங்கியது அதிர்ச்சியையும் அது அவருக்கு ஏற்படுத்தியது. உடனடியாக அந்த நபர் மீண்டும் அழைப்பை எடுத்து “நீ என்னிடமிருந்து தப்பிக்க வேண்டுமாயின், …. எனக்கு பணம் தர வேண்டும். தந்தால் நான் உன்னை விட்டு விடுகிறேன்….” இது றிபானுக்கு நெஞ்சில் பால் வார்த்ததைப் போன்று இருந்தது. “எவ்வளவு அண்ணா வேண்டும்…..? கேட்கும் பணத்தைத் தருகிறேன்…..” என றிபான் பதிலளித்துள்ளார்.

“சரி…. நான் எதையும் பொலிஸாருக்கு வழங்க மாட்டேன்….. இணையத்தளத்தில் போடவும் மாட்டேன்….. எனக்கு ஆறு இலட்சம் தந்தால் போதும்….” அந்நபர் கூறியுள்ளான்.

“ஐயோ…. அண்ணா…. நான் பணத்தைத் தருகிறேன்….. எப்படி உங்களைச் சந்திப்பது….?”

“இல்லை…. இல்லை… என்னைச் சந்திக்க வேண்டியதில்லை….”

அதன் பின்னர் அந்நபர், அப்பிரதேசத்தில் அமைந்துள்ள பாழடைந்த இடம் ஒன்றில் உள்ள குறித்த மரத்தின் கீழ் பணத்தை வைக்குமாறு றிபானிடம் கூறியுள்ளான். இச்சம்பவம் கடந்த செப்டெம்பர் மாதத்தில் ஒரு நாள் இடம்பெற்றுள்ளது. அந்தப் பணத்தை வழங்கிய றிபான், “ஒருவாறு பிரச்சினையிலிருந்து தப்பினேன்….” என பெருமூச்சுவிட்டான். எனினும் சில தினங்கள் கடந்த பின்னர் ஆறு இலட்சத்தைப் பெற்றுக் கொண்ட ரஹூமாவின் கணவரிடமிருந்து மீண்டும் றிபானுக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

“ஹலோ…. பேசுவது யார் என்று தெரியும்தானே…. என்னிடம் உன்னுடைய அந்த படங்கள், வீடியோக்கள் இன்னும் இருக்கின்றன…. நான் நேரடியாகவே கூறுகின்றேன்…. எனக்கு இன்னும் ஆறு இலட்சம் ரூபாய் வேண்டும்….. இல்லையென்றால் நான் அவற்றை முகநூலில் போடுவேன்…. பொலிஸாரிடமும் வழங்குவேன்…. விருப்பமா…?”

அந்த அழைப்பையடுத்து இந்த நபரிடமிருந்து இனி தப்பிக்க முடியாது என றிபான் திகிலடைந்தார். தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரதிநிதியாகப் பணியாற்றும் றிபான் மிகுந்த வசதி படைத்தவரல்ல. ரஹூமாவின் கணவருக்கு வழங்குவதற்காக மீண்டும் றிபான் பணத்தைத் தேடத் தொடங்கியுள்ளார். இதன் போது றிபான் தனது நண்பர் ஒருவரிடமிருந்து கைமாற்றாக இரண்டு இலட்சம் ரூபாவைக் கேட்டிருந்தார்.

“மச்சான்…. எனக்கு இரண்டு இலட்சம் ரூபாய் பணம் வேண்டும்….”

“இப்படி அவசரமாக உனக்கு எதற்கு இரண்டு இலட்சம்…..?” என நண்பர் கேட்டுள்ளார்.

தன் நண்பரிடத்தில் விடயத்தைக் கூறுவதா, வேண்டாமா என தடுமாற்றத்தில் இருந்த றிபான் பின்னர் தான் முகங்கொடுத்திருந்த நிலையினை தனது நண்பரிடத்தில் ஒன்றுவிடாமல் கூறியுள்ளார். அக்கதையைக் கேட்ட றிபானின் நண்பர்,

“அவனுக்கு இனி ஒரு சதமும் வழங்க வேண்டாம்…. நாம் பொலிஸுக்குப் போவோம்….” எனக் கூறியுள்ளார்.

முதலில் றிபான் அதற்கு விரும்பாத போதிலும் பின்னர், கடந்த ஒக்டோபர் 28ம் திகதி றிபான் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்திற்கு தனது நண்பருடன் சென்றுள்ளார்.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விஜேதுங்கவிடம் அனைத்து விடயங்களையும் றிபான் கூறியுள்ளார். றிபான் முகங்கொடுத்திருக்கும் நிலையினை நன்கு புரிந்து கொண்ட பொலிஸ் பொறுப்பதிகாரி, குறித்த நபரை மடக்கிப் பிடிப்பதற்கு சூட்சுமமான நடவடிக்கையைக் கையாளத் தீர்மானித்தார். தொடர்ச்சியாக அந்நபருடன் பேசுமாறும், பணம் தருவதாக உறுதியளிக்குமாறு றிபானிடம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறியுள்ளார். அதனடிப்படையில் முதல் தடவை பணத்தை வைத்த இடத்திலேயே மீண்டும் ஆறு இலட்சம் பணத்தை வைப்பதாக றிபான் அந்நபரிடம் வாக்களித்துள்ளார்.

இதேவேளை அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொலிஸாரும் அவ்விடத்திற்குச் சென்று குறித்த மோசடிக்காரனைப் பிடிப்பதற்காக ஆயத்தமாகினர். கடந்த ஒக்டோபர் 29ம் திகதி விடிந்தது. றிபானிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொள்வதற்கு வரும் நபர் அன்று இரவு 7 மணியளவில் குறித்த மரத்தின் கீழ் பணத்தை வைக்குமாறு றிபானுக்கு உத்தரவிட்டுள்ளான். அதற்கு 3, 4 மணி நேரத்திற்கு முன்னர் பொலிஸார் அவ்விடத்திற்குச் சென்று அங்கு பணத்தை எடுப்பதற்காக வரும் நபரைப் பிடிப்பதற்காகக் காத்திருந்தனர்.

குறித்த நேரம் வந்தது. மோட்டார் சைக்கிள் ஒன்றில் பெண் ஒருவருடன் அந்நபர் அவ்விடத்திற்கு வந்துள்ளான். மரத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்த பணத்தை அவ்விருவரும் எடுத்தபோது அங்கு மறைந்திருந்த பொலிஸார் அவ்விருவரையும் கையும் களவுமாகப் பிடித்துக் கொண்டனர். பிடிபட்ட பெண்ணிடம் கைபேசி ஒன்றும் இருந்துள்ளது.

அந்தக் கைபேசியைச் சோதனையிட்ட பொலிஸார், அதில் 20, 30 ஆண்களின் நிர்வாணப் படங்கள், வீடியோக்கள் இருந்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர்

“இந்தப் படங்கள் யாருடையவை….? நீங்கள் செய்யும் மோசடி என்ன ….?”

பொலிஸாரின் கடுமையான விசாரணைகளுக்கு மத்தியில் அவர்கள் இருவரும் அனைத்தையும் கூறியுள்ளனர். அவர்கள் இருவரும் 2, 3 வருடங்களாக றிபானுக்குச் செய்ததைப் போன்றே ஆண்களை ஏமாற்றி இலட்சக் கணக்கில் பணத்தை கறந்துள்ளனர். இதில் கிழக்கு மாகாணத்தின் சம்மாந்துறை, அக்கரைப்பற்று, நிந்தவூர், கல்முனை, அம்பாறை போன்ற பிரதேசங்களில் பல்வேறு ஆண்கள் இவ்விருவரிடம் சிக்கியுள்ளமை பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. இதற்கு மேலாக அவர்கள் இருவரிடம் சிக்கிக் கொண்ட ஆண்கள் எத்தனை பேர் என்பதை சரியாக தெரிவிக்க முடியாதிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். காரணம் சிலர் தமக்கு ஏற்படும் அவமானத்திற்கு அஞ்சியும், தனிப்பட்ட பிரச்சினைகளுக்காகவும் சட்டத்திற்கு முன் ஆஜராகுவதற்கு முன்வராததே அதற்குக் காரணமாகும். என்றாலும் இந்த மோசடியில் சிக்கிய அனைவரும் பயப்படாமல் பொலிஸ் நிலையத்திற்கு வந்து முறைப்பாடு செய்யுமாறு அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

ரஹூமாவின் கணவராக நடித்தவர் 40 வயதுடைய முஹம்மது பஸீல் என்ற திருமணமாகாத நபராகும். அவர்கள் இருவரும் இந்த மோசடி நடவடிக்கைகளில் தாம் கணவன் மனைவியாக வேடமிட்ட போதிலும் உண்மையிலேயே ரஹுமாவிற்கு பஸீல் மாமா முறையாகும். பஸீல் ரஹூமாவின் தாயினது சகோதரனாகும். 27 வயதுடைய ரஹூமா இரு பிள்ளைகளின் தாயாகும். அவரது கணவர் சில காலங்களுக்கு முன்னர் மரணித்துள்ளார். அதன் பின்னர் ரஹூமா முகநூல் ஊடாக ஆண்களை ஏமாற்றி இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்டிருப்பது பஸீலின் வழிநடாத்தலிலாகும்.

பஸீல் முகநூல் ஊடாக செல்வந்த ஆண்களை ரஹூமாவிற்குத் தேடிக் கொடுப்பார். அவள் றிபானை ஏமாற்றியதைப்போல ஆண்களை ஏமாற்றி நிர்வாணப் படங்கள் மற்றும் வீடியோக்களைப் பெற்றுக் கொண்டு பஸீலுடன் இணைந்து இந்த மோசடி நடவடிக்கையினை மேற்கொண்டு கோடிக் கணக்கில் பணம் சம்பாதித்துள்ளமை பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரிய வந்தள்ளது.

பஸீல் மற்றும் ரஹூமா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் இருவரின் மோசடி வலையில் சிக்கிக் கொண்ட பலர் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்திற்குச் சென்று அவ்விருவரின் மோசடியில் சிக்கியதாகக் கூறி முறைப்பாடுகளைச் செய்துள்ளனர். “முறைப்பாடு செய்ய வந்தவர்களுள் ஒருவர் அவ்வப்போது சுமார் ஐந்து கோடிக்கும் மேலான பணத்தை இவர்கள் இருவருக்கும் வழங்கியுள்ளதாகக் கூறி முறைப்பாடு செய்துள்ளார்” என அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்மிடம் தெரிவித்தார்.

இவ்வாறு பெறப்பட்ட பணத்தைக் கொண்டு இருவரும் சொகுசு வீடுகளை நிர்மாணித்து, வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் கடந்த 30ம் திகதி அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வளவு காலமும் நாம் அறிந்தது சமூக ஊடகங்களின் மூலம் பெண்களுக்கு ஏற்படுத்தப்பட்டு வந்த துன்புறுத்தல்கள் பற்றியே. எனினும் ஆண்களும் ஆபத்தில் சிக்கிக் கொண்ட இவ்வாறான நிகழ்வுகளும் முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் மூலம் இடம்பெறுகின்றன என்பதை சமூக வலைத்தளப் பாவனையாளர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இது தொடர்பான விசாரணைகளை அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எஸ். எம். வை. செனவிரத்ன, அம்பாறை பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயரத்ன ரத்நாயகா ஆகியோரின் ஆலோசனையின் பிரகாரம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தேசப்பிரியவின் மேற்பார்வையில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் டப்ளிவ். எம். எஸ். பி. விஜேதுங்க. பொலிஸ் பரிசோதகர் குணரத்ன, பொலிஸ் சார்ஜன்களான 66324 அசாத், 53392 சிசில மற்றும் பொலிஸ் கான்ஸ்டபில்களான 53896 றிஸ்வான், 76811 சஞ்ஜீவ, 92877 சஷி மறறும் 92878 அனோஜன் ஆகியோர் உள்ளிட்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.