பின் இருக்கை மாணவர்கள்

  • 1

எந்த ஒரு கல்விக்கூடமாகவோ அல்லது கலாசாலையாகவோ இருப்பினும் கூட மிக நன்றாக படிக்கும் மாணவர்கள் முதல் பின் இருக்கை மாணவர்கள் அதாவது மாணவர்கள் ஆசிரியர்கள் வழக்கில் சொல்லப் போனால் பின்தங்கிய,படிப்பு ஏறாத “மக்கு” மாணவர்கள் வரை கல்வி கற்பது வழக்கம். இதனை யாரும் பிழை காண்பதும் முடியாத காரியமே.

இதனை வாசிக்கின்ற நேரத்தில் தாம் எந்த இடத்தில் இருந்தவர்கள் என்றும் அதன் விளைவுகள் எப்படியான தாக்கத்தை எம்மில் ஏற்படுத்தியது என்றும் மனக்கண்முன்னே சில நிழற்படங்கள் வந்து செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை.

பாடசாலைக் காலங்களின் பசுமையான நினைவுகளுக்கு பஞ்சமே இல்லை என்பார்கள். அப்படியான சில பசுமையான நினைவுகளில் தான் பலரது வாழ்கை சிதைவுண்டு போனதையும் எம்மால் அவதானிக்க முடிகிறது.

நானும் ஒரு பின் இருக்கை மாணவனாய் சில யதார்த்தங்களை எழுதுகிறேன்.யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல.

ஒரு வகுப்பறையில் நாற்பது மாணவர்கள் கல்வி கற்க்குமிடத்து அனைவரும் வைத்தியர்களாகவும், நீதிபதிகளாகவும், பொறியியலாளர்களாகவும் உருவெடுப்பதென்பது சாத்தியம் அற்ற ஒரு செயலாகவே கருதுகிறோம். ஆனால் அந்த வகுப்பறையில் இருந்துதான் பல் துறைகளில் சாதிக்கும் வல்லமை படைத்த பல படைப்பாளிகள் உருவாகிறார்கள். ஆனால் அவர்கள் வகுப்பறையில் வாங்குகின்ற மதிப்பெண்களோ அல்லது வகுப்பு நிலையோ அவர்களின் வாழ்க்கையை தீர்மானிப்பதும் கிடையாது அது தீர்மானிக்கும் சாதனமும் கிடையாது. மாறாக அவை அவர்களின் கல்வி நிலையை அளவிடும் வெறும் அளவுகோலாகத்தான் கருதப்படுகிறது.

ஒரு மாணவனிடம் இருக்கு அவனது திறமைகளை இனம் காணுவதில் அளப்பெரும் பங்கு ஆசிரியப் பெருந்தகைகளுக்கே இருக்கிறது. காரணம் மாணவர்களின் கூடுதலான நேரம் பாடசாலைகளில் ஆசிரியர்கள் உடனானதே.

ஆசிரியர்களின் பெரும் பங்களிப்பே அந்த மாணவனை அவன் ஊக்கமுள்ள துறையில் சாதிக்கவைக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் பெற்றோர்கள் இதில் ஆசிரியர்களுக்கு பக்க பலமாகவே இருக்க முடியும்.

அவல நிலை என்னவென்றால் எத்தனையோ பின் இருக்கை மாணவர்கள் சிலர் பாதியில் கல்விப்பயணத்தை முடித்துக்கொள்கிறார்கள். மீதிப்பேர் நீரில் மூழ்கியவனைப்போல திணருகிறார்கள், திக்குமுக்காடுகிறார்கள்.

காரணம் என்னவென்று யோசிக்கிறீர்களா?

வகுப்பறைகளிலும், வெளிக்களச் செயற்பாடுகளிலும் ஆசிரியர்கள், சக மாணவர்களின் வார்தைப்பிரயோகங்கள், செயற்பாடுகள், அணுகுமுறைகள் தான் என்றால் மிகையாகாது.

பின் இருக்கை மாணவர்கள் என்றாலே படிக்க இயலாதவர்கள், உதவாக்கரைகள் என்று அவர்கள் தானே உணரும் வகையில் முத்திரை குத்தப்படுகிறார்கள்.

பல இம்சைகள், அவமானங்கள், காழ்ப்புணர்வுகள், இழுபறிகள் அவர்களின் உணர்வுகளுக்கும், கனவுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது.

இக்கனம் அறிஞர் அப்துல்கலாம் ஐயாவின் “நாட்டின் நிறைந்த மூளை வகுப்பறையின் கடைசி பெஞ்சுகளில் காணலாம்” என்ற கூற்று சற்று எம்மை சிந்திக்கத் தூண்டுகிறது.

இவ்வாறு பின் இருக்கை மாணவர்களாக இருந்து திறைமைகள் இனங்காணப்படாமல் கைவிடப்பட்டவர்கள் பிற்காலத்தில் சமூகச் சீர்கேட்டின் தந்தைகளாவே உரு எடுக்கிறார்கள். இவர்களின் நாசகாரிய செயல்களினால் அவர்களைப் பெற்ற பெற்றோருக்கும் அற நெறியையும் பண்பாட்டையும் கற்றுக்கொடுத்த பாடசாலைக்குமே இழிவும் அவமானமும் என்பதை நன்கு நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

உலகில் உயர்ந்து உச்சம் தொட்ட துறைசார் நிபுணர்கள் யாரும் வகுப்பறைகளில் உச்சம்தொட்டவர்களோ முன் வரிசை மாணவர்களாகவோ இருந்தது கிடையாது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

எதற்கும் தகுதி இல்லாதவர்கள் என்று ஒதுக்கிய பலர்தான் அவர்கள். இன்றளவிலும் அவர்களின் பல சாதனைகளை எவராலும் முறியடிக்க முடியாத அளவுக்கு ஸ்தம்பிதமாய் இருக்கிறது.

இன்று எம்மில் எத்தனையோ பெற்றோர்கள் பாடசாலை தேர்வு மட்ட அறிக்கைகள் தான் தன் பிள்ளைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்ற பிழையானதொரு எண்ணக்கருவை தன்னகத்தே வைத்திருக்கிறார்கள்.

இதனால் தன் பிள்ளைகளின் திறமைகளை இனம்காண்பது கிடையாது. இதனால் அவர்களின் எதிர்காலத்து வளர்ச்சிப்பாதை கேள்விக்குறியாகவே அமைகிறது.

இதன் ஒரு அங்கமாகவே வீடுகளிலும் கூட “படிப்பு ஏறாதவன்” என்ற பெயர் நாமத்தை சூட்டி விடுகிறார்கள். இன்னும் சிலர் தன் பிள்ளைகளை பிறரிடம் அடயாளப்படுத்துமிடத்து “என் இளைய மகன் நன்றாகப்படிக்கும் கெட்டித்தனம் உடையவன் ஆனால் இவரின் சகோதரன் படிப்பில் மக்கு/மந்தம்.” என்று கூறு விடுகிறார்கள். இந்நிலைகள் முற்றிலும் மாற்றம் பெற வேண்டும்.

திறமைகள் இனங்காணப்பட வேண்டும் அதற்கான வழிகளும் அமைக்கப்பட வேண்டும்.

அன்பு ஆசிரியப்பெருந்தகைகளே! நாளைய தலைமுறையின் வாரிசுகளே! யாரும் சளைத்தவர்களோ திறமைகள் அற்றவர்களோ கிறையாது என்பதை நன்கு நினைவில் கொள்ளுங்கள்.

தோள் தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்துங்கள் உற்சாகம் கொடுங்கள் திறமைகளை பாராட்டுங்கள் யாரையும் எதிலும் திணிக்காதீர்கள். பின் இருக்கை மாணவர்கள் எங்களால் எதுவும் இயலாது என்ற எண்ணத்தை அவர்களின் மனங்களில் விதைத்து விடாதீர்கள்.

உங்களின் நண்பர்களின் திறமைகளை நீங்கள் இனங்காணுங்கள் அதில் முன்னேறிச் செல்லும் வழிகளை காட்டிக்கொடுங்கள்.

உடலாலும் மனதாலும் உதவி ஒத்தாசை புரியுங்கள் அவர்களின் நேர்வழிக்கு இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் அவர்களும் சிறப்படைவார்கள் உங்களின் வாழ்வும் சிறக்கும்.

கவிப்பொய்கை
ஜவ்சன் அஹமட்

எந்த ஒரு கல்விக்கூடமாகவோ அல்லது கலாசாலையாகவோ இருப்பினும் கூட மிக நன்றாக படிக்கும் மாணவர்கள் முதல் பின் இருக்கை மாணவர்கள் அதாவது மாணவர்கள் ஆசிரியர்கள் வழக்கில் சொல்லப் போனால் பின்தங்கிய,படிப்பு ஏறாத “மக்கு” மாணவர்கள்…

எந்த ஒரு கல்விக்கூடமாகவோ அல்லது கலாசாலையாகவோ இருப்பினும் கூட மிக நன்றாக படிக்கும் மாணவர்கள் முதல் பின் இருக்கை மாணவர்கள் அதாவது மாணவர்கள் ஆசிரியர்கள் வழக்கில் சொல்லப் போனால் பின்தங்கிய,படிப்பு ஏறாத “மக்கு” மாணவர்கள்…

%d bloggers like this: