நல்லாட்சிக்கால இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சு தொடர்பான கோப் அறிக்கை

யொவுன்புர வேலைத்திட்டத்துக்கு அனுமதிக்கப்பட்ட மதிப்பீடான 350 மில்லியன் ரூபாவையும் விஞ்சி 80,560,914 ரூபா ஒதுக்கப்பட்டமை தொடர்பில் கோப் குழுவில் தெரியவந்தது.

நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்புநாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளது என அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழு) தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை இளைஞர் சேவைகள் தனியார் நிறுவனத்தின் தலைவர் ஆகியோர் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அது அரசாங்கத்தின் பயணத்துக்குத் தடையாக அமையும் என (16.11.2021) நடைபெற்ற கோப் குழுக் கூட்டத்தில் அவர் தெரிவித்தார். உள்ளக முரண்பாடுகளைக் கைவிட்டு அரசாங்கத்தின் நோக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். கவனக் குறைவாக மற்றும் பொறுப்புடன் நடந்துகொள்ளாத அதிகாரிகள் தொடர்பில் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கோப் குழுவின் தலைவர், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அநுராத விஜேக்கோனுக்குப் பணிப்புரை விடுத்தார்.

இலங்கை இளைஞர் சேவைகள் தனியார் நிறுவனம் 2017ஆம் ஆண்டு முதல் ஒருங்கிணைந்த திட்டத்தைத் தயாரிக்காமை குறித்து இக்குழுவில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. இந்நிறுவனத்தின் செயற்திறன் திட்டம் தயாரிக்கப்படாமை குறித்தும் வினவப்பட்டது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வருடாந்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதில் காலதாமதம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத், 2015ஆம் ஆண்டு முதல் இலங்கை தேசிய இளைஞர் சேவை தனியார் நிறுவனம் வருடாந்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்காமை குறித்து கேள்வியெழுப்பினார். இந்த அறிக்கைகள் யாவற்றையும் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளருக்குக் கோப் குழு பணிப்புரை விடுத்தது.

அமைச்சரவைத் தீர்மானத்துக்கு அமைய மாத்தறை நில்வளா இளைஞர் பூங்காவை அமைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டபோதும், இது தொடர்பில் சாத்தியக் கூற்று ஆய்வு மேற்கொள்ளப்படாமை குறித்தும் குழுவின் விசேட கவனம் செலுத்தப்பட்டது. திறன் அபிவிருத்தி மற்றும் தொழில்சார் பயிற்சி அமைச்சின் ஊடாக காணி உரிமையாளர்களுக்கு நஷ்டஈடு மற்றும் வட்டியாக 2014 டிசம்பர் 31ஆம் திகதி 142,810,543 ரூபா வழங்கப்பட்டுள்ளமை மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு ஆலோசனைக்கான கட்டணமாக 7,657,349 ரூபா செலுத்தப்பட்டமை இங்கு கலந்துரையாடப்பட்டது.

2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட யொவுன்புர வேலைத்திட்டத்துக்காக அனுமதிக்கப்பட்ட மதிப்பீட்டுத் தொகை 350 மில்லியன் ரூபாவாகக் காணப்பட்டபோதும், இதனைஞம் விஞ்சும் வகையில் 80,560,914 ரூபா செலவுசெய்யப்பட்டமை இங்கு புலப்பட்டது. அத்துடன், 2019ஆம் ஆண்டின் வேலைத்திட்டத்துக்கான களஞ்சியங்கள் இரண்டு வாடகைக்குப் பெற்றுக்கொண்டதுடன், குறிப்பிட்ட காலப்பகுதியையும் மீறிப் பயன்படுத்தியதாகக் கூறி இதற்காக 2,227,400 ரூபா மேதிகமாக அறவிடப்பட்டுள்ளது. அத்துடன் 2016ஆம் ஆண்டு நடத்தப்பட்ட யொவுன்புர தேசிய வேலைத்திட்டத்தில் பங்குபற்றிய இளைஞர் யுவதிகளுக்கு விநியோகிப்பதற்காக தொழில்நுட்பக் குழுவின் பணிப்புரை இன்றி, வேலைத்திட்டம் முடிவடைந்த பின்னர் 1773 டீஷேர்ட்களை வழங்குவதற்காக 1,932,500 ரூபா செலவுசெய்யப்பட்டிருப்பது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

மதிப்பாய்வு சபையின் அறிக்கைக்கு அமைய 2017ஆம் ஆண்டு 1,822,400 ரூபா செலவில் அச்சிடப்பட்ட 268,000 துண்டுப்பிரசுரங்களை நீக்குமாறு பரிந்துரைக்கப்பட்டமையும் இக்குழுவில் தெரியவந்தது.

இளைஞர் சேவை தனியார் நிறுவனம் 1981ஆம் ஆண்டு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 98% பங்கின் கீழ் உருவாக்கப்பட்டபோதும் இணைந்த நிதிக் கூற்று தயாரிக்கப்படவில்லையென்பதும் கோப் குழுக் கூட்டத்தில் புலப்பட்டது.

2018, 2019 மற்றும் 2020ஆம் ஆண்டில் இளைஞர் சேவைகள் தனியார் நிறுவனத்தின் ஊடாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் 417 மில்லியன் ரூபா பெறுமதியான வேலைகளைச் செய்துள்ளது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை இளைஞர் தனியார் நிறுவனம் ஆகியவற்றின் தலைவர்கள் ஊடாக பிரிவுகளின் தலைவர்களுக்குக் 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 08ஆம் திகதி வெளியிட்ட உள்ளகச் சுற்றுநிருபத்தில் றுவனம் தொடர்பில் வெளிநபர்களுக்கு எவரும் தகவல்களை வழங்கக் கூடாது என்ற விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறித்தும் இங்கு தெரியவந்தது. இது கணக்காய்வு நடவடிக்கைகள் மற்றும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயற்பாடுகளுக்குப் பாதிப்பாக அமைந்தது என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஆரம்பிக்கப்படவுள்ள சிஸ்கோ கணினி வலையமைப்புப் பாடநெறிக்கான ஆரம்பகட்ட வசதிகளை ஏற்படுத்துவதற்கு முன்னர் 2021ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் திகதி 15,708,178 ரூபா செலவிட்டு உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டமை குறித்தும் கோப் குழு, அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பியது.

இக்கூட்டத்தில் அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான மதுர விதானகே, பிரேம்நாத்.சி தொலவத்த மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.