வெடிகுண்டு போல் மாறியுள்ள இலங்கையின் எரிவாயு சிலிண்டர்கள்

இலங்கை வீடுகளில் எரிவாயு வைத்திருப்பது வெடிகுண்டு இருப்பது போன்று ஆபத்தான விடயமாகியுள்ளதென நுகர்வோர் விவகார அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்காக பயன்படுத்தப்படும் உள்நாட்டு வாயுக்களின் இரசாயன விகிதத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளமையினால் இந்த ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வீட்டில் வெடி குண்டு வைத்துக் கொண்டு இருக்கும் நிலைமையே காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் அண்மைய நாட்களாக பல இடங்களில் எரிவாயு சிலிண்டர்கள் அதிக அளவில் வெடிப்பதற்கு இந்த இரசாயன மாற்றமே காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் எரிவாயு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள இரண்டு பிரதான நிறுவனங்களும் இணைந்து இந்த இரசாயன மாற்றத்தை செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அப்போது தான் இந்த விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர்களிடம் கூறிய போதிலும் அவர்கள் அதனை கவனத்தில் கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இது ஒரு மோசடியான செயல் எனவும் கொலைக்கு உதவும் வகையிலான செயல் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இணையத்தள ஊடகமொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இன்று (25.11.2021) பன்னிப்பிடிய பகுதியில் வீடொன்றில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிவாயு சிலிண்டர் காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என கொட்டாவ பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த வெடிப்புச் சம்பவத்தினால் குறித்த வீடு பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.

எவ்வாறாயினும், இந்த சம்பவத்தில் வீட்டில் வசிக்கும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மாதத்தில் மாத்திரம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

நவம்பர் 04 ஆம் திகதி வெலிகம கப்பரதொட்ட பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் மூவர் காயமடைந்தனர்.

நவம்பர் 16 ஆம் திகதி, இரத்தினபுரியில் உள்ள உணவகம் ஒன்றில் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாகவும், விசாரணைகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்தமையே சம்பவத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

நவம்பர் 20 ஆம் திகதி, கொழும்பில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உள்ள உணவகத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் மூன்று பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.