08 இடங்களில் தாக்குதல் இடம்பெறலாம் என ஏப்ரல் 20ஆம் திகதியே தகவல் கிடைத்தது

  • 18

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று 08 இடங்களில் தாக்குதல் நடத்தப்படலாமென 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் திகதி பிற்பகல் 04.14 மணிக்கு தமக்கு புலனாய்வுத் தகவல் கிடைத்ததாக அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைமை அதிகாரி சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் நிலந்த ஜயவர்த்தன (25.11.2021) தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் தாம் உடனடியாக பாதுகாப்பமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸ் மாஅதிபர் ஆகியோருக்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுத்ததாக கொழும்பு விசேட மூவர் அடங்கிய மேல் நீதிமன்றத்தில் அவர் கூறியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிரான வழக்கில் மூன்றாவது நாளாகவும் நிலந்த ஜயவர்த்தன சாட்சி வழங்கினார்.

ஏப்ரல் 20 ஆம் திகதி கிடைத்த புலனாய்வுத் தகவலை தொலைபேசி மூலம் பொலிஸ் மாஅதிபருக்கு அறிவித்ததாக அவர் கூறியுள்ளார்.

எனினும், அந்தத் தகவல் தொடர்பில் அவர் அவ்வளவு கவனம் செலுத்தாமையை அறிந்து கொண்டமையினால், பாதுகாப்புச் செயலாளருக்கும் அதனை அறிவித்ததாக நிலந்த ஜயவர்தன சாட்சியம் வழங்கியுள்ளார்.

பொலிஸ் மாஅதிபர் இந்தத் தகவலை பாரதூரமாக கவனத்திற் கொள்ளவில்லையென்பது தமக்கு தெரிந்ததாக பாதுகாப்பு செயலாளரிடம் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்னர் சஹ்ரான் ஹாசிம் உள்ளிட்ட கடும்போக்குவாதிகளால் தாக்குதல் மேற்கொள்ளப்படலாமென கிடைத்த தகவல்கள், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 09 ஆம் திகதி நடைபெற்ற பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கூட வெளிப்படுத்தப்படவில்லையெனவும் அதனை மறைத்து வைத்திருக்க வேண்டிய எவ்வித தேவையும் தமக்கு இருக்கவில்லையெனவும் நிலந்த ஜயவர்தன கூறியுள்ளார்.

நாட்டில் அவ்வேளையில் நிலவிய அரசியல் சூழ்நிலைகளுக்கேற்ப அதனை வெளிப்படுத்துவதனால் ஏற்பட முடியுமான அனைத்து பிரச்சினைகளையும் தாம் எதிர்கொள்வதற்கு நேரிடுவதால், அது தொடர்பில் அன்றைய தினம் கலந்துரையாட முயற்சிக்கவில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நம்பத்தகுந்த புலனாய்வு தகவல்களை பொறுப்புடன் வழங்கியிருந்த போதிலும், அதனை தடுத்து நிறுத்தாமைக்கான பொறுப்பை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைமை அதிகாரி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

புலனாய்வு அதிகாரிகள் என்ற வகையில், தமக்கு கிடைக்கும் தகவல்களை உரிய தரப்பினருக்கு அறிவிக்கும் செயற்பாட்டையே தம்மால் மேற்கொள்ள முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதல் மேற்கொள்ளப்படும் போது, ஜனாதிபதி இலங்கையில் இருக்கவில்லை. எனவே, பாதுகாப்பு செயலாளருக்கு நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் பாரிய பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. ஏப்ரல் 20 ஆம் திகதி தனக்கு கிடைத்த அனைத்து புலனாய்வு தகவல்களையும் அவ்வேளையிலேயே பாதுகாப்பு செயலாளருக்கு அறிவித்ததாகவும் நிலந்த ஜயவர்தன கூறியுள்ளார்.

நாமல் பலல்லே, ஆதித்ய பட்டபெதிகே மற்றும் மொஹமட் இஸடீன் ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று 08 இடங்களில் தாக்குதல் நடத்தப்படலாமென 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் திகதி பிற்பகல் 04.14 மணிக்கு தமக்கு புலனாய்வுத் தகவல் கிடைத்ததாக அரச புலனாய்வு பிரிவின் முன்னாள்…

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று 08 இடங்களில் தாக்குதல் நடத்தப்படலாமென 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் திகதி பிற்பகல் 04.14 மணிக்கு தமக்கு புலனாய்வுத் தகவல் கிடைத்ததாக அரச புலனாய்வு பிரிவின் முன்னாள்…