நாட்டின் பொருளாதார சிக்கல்களுக்கு கோவிட் மட்டும்தான் காரணமா?

  • 24

கலாநிதி எம். கணேசமூர்த்தி
பொருளியல் துறை
கொழும்பு பல்கலைக்கழகம்

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள தீவிரமான டொலர் பற்றாக்குறையும் அதன் காரணமாக பொருளாதாரம் எதிர்நோக்கும் நெருக்கடி நிலைமையும் கோவிட் பெருந்தொற்றின் விளைவாக ஏற்பட்ட ஒன்றல்ல. மாறாக சுதந்திரம் பெற்ற காலந்தொட்டே நாட்டின் பொருளாதாரத்தை முறையாக வழிப்படுத்தி முகாமை செய்யத் தவறியதன் காரணமாக ஏற்பட்ட ஒன்றாகும்.

தற்போது வெறும் 84 பில்லியன் டொலர் பெறுமதியான ஒரு பொருளாதாரத்தை தொடர்ந்து இயங்கச் செய்வதில் திக்கித்திணற வேண்டியிருக்கிறது. கோவிட் பெருந்தொற்றின் விளைவாக நெருக்கடிகள் உருவாகியதாகக் காரணம் கற்பிக்கவும் முயற்சிக்கின்றனர். ஆனால் இலங்கைப் பொருளாதாரம் தொடர்ச்சியாகவே தனது சக்திக்கு அப்பாற்பட்டு வாழ முயற்சித்ததன் (living beyond means) விளைவாகவே இன்றைய நிலை உக்கிரமடைந்திருக்கிறது.

குறிப்பாக, எந்த ஒரு பொருளாதாரத்தையும் ஆட்டிப்படைக்கவல்ல இரட்டைக்குறை நிலைகள் (twin deficits) இலங்கையின் பொருளாதாரத்தைத் தொடர்ச்சியாக முடக்க நிலையில் வைத்திருப்பதை ம் பார்க்க முடியும். ஒன்று, வரவு செலவுத்திட்டக் குறைநிலை மற்றையது வர்த்தகக் குறைநிலை.

சுதந்திரத்தின் பின்னரான இற்றை வரையிலான காலப்பகுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வப் புள்ளிவிபரங்களை ஆராயுமிடத்து நாடு தொடர்ச்சியாக பற்றாக்குறை வரவு செலவுத்திட்டத்தைப் பின்பற்றி வருவதையும் இதன் காரணமாக உள்நாட்டில் மேற்கொள்ளப்படும் உற்பத்தியைவிட நாட்டில் மேற்கொள்ளப்படும் செலவுகள் உயர்வாக இருப்பதையும் அந்தச் செலவுகள் இறக்குமதிகள் மீது மேற்கொள்ளப்பட்டிருப்பதையும் காணமுடியும்.

அதாவது, நாட்டின் பொருள் ஏற்றுமதி வருவாயைவிட இறக்குமதிச் செலவினங்கள் உயர்வாகக் காணப்படுகின்றன. நாட்டின் வர்த்தக நிலுவை எனப்படும் ஏற்றுமதிகளுக்கும் இறக்குமதிகளுக்கும் இடையிலான இடைவெளி குறைநிலையில் உள்ளது. எனவே தான் தனது உள்நாட்டு உற்பத்தியைவிட அதிகம் செலவிடும் எந்த ஒரு நாடும் வர்த்தகக் கணக்கு குறைநிலையை அனுபவிக்கும் எனக்கூறப்படுகிறது. வேறு வகையில் கூறினால் ஒரு நாட்டின் வரவுசெலவுத்திட்டக் குறைநிலைக்கும் வர்த்தக நிலுவையில் குறைநிலைக்கும் இடையில் தொடர்பு உண்டெனக் கூறப்படுகிறது.

இலங்கையைப் பொறுத்தமட்டில் இவை இரண்டும் தொடர்ச்சியாகக் குறைநிலையில் உள்ளமை இன்றைய டொலர் நெருக்கடிக்கான முக்கியமான காரணமாகக் கொள்ளப்படலாம். கடந்த பத்து வருட காலப்பகுதியில் இவற்றின் போக்குகள் அட்டவணையிற் காட்டப்பட்டுள்ளன.

அட்டவணையில் 2019 மற்றும் 2020 ஆண்டுகளில் வரவு செலவுத்திட்டக் குறைநிலை அதிகரித்திருப்பதையும் அதேவேளை வர்த்தக நிலுவை குறைவடைந்து சென்றிருப்பதையும் அவதானிக்க முடிகிறது.

கோவிட் கொள்ளை நோய் காரணமாக ஏற்பட்ட செலவின அதிகரிப்பு மற்றும் கடன் சேவைகள் போன்றன செலவின அதிகரிப்புக்கு காரணமாகக் கொள்ளப்படலாம். மறுபுறம் பொருள் இறக்குமதிகள் மீது விதிக்கப்பட்ட தீவிரமான கட்டுப்பாடுகள் காரணமாக வர்த்தக நிலுவைக் குறைநிலை வீழ்ச்சியடைந்திருந்தது. ஆனால் 2021 இல் ஒகஸ்ட் மாதம் வரையிலான எட்டு மாத காலப்பகுதியில் இந்த நிலை மாறி வர்த்தக நிலுவைக் குறைநிலை விரிவடைந்து சென்றுள்ளது.

2020 இல் முதல் எட்டு மாதகாலப் பகுதியில் 3.5 பில்லியன் டொலர்களாகக் காணப்பட்ட குறைநிலை 2021 இன் இதே காலப்பகுதியில் 5.5 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது. அதேவேளை தொடர்ச்சியாகத் தேய்வடைந்த சென்ற இலங்கை ரூபாவின் நாணயமாற்று வீதம் 2020 இல் 186 ரூபா மட்டத்திலிருந்து 203 ரூபாவை அண்மிய மட்டத்தில் தற்போது உத்தியோகபூர்வமாக (officially pegged) நிலைப்படுத்தப்பட்டுள்ளது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 9 சதவீதத் தேய்வாகும். 2019 இல் சுமார் 7.6 பில்லியன் டொலராக இருந்த உத்தியோகபூர்வ ஒதுக்குகள் 2020 இல் 5.6 பில்லியனாக வீழ்ச்சியடைந்தன. 2021 ஒக்டோபர் மாதத்தில் இது 2.2 பில்லியன் டொலர்களாக கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. 2019 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது சுமார் 73 சதவீத வீழ்ச்சியாகும். முதிர்ச்சியடைந்த பொதுப்படுகடன்களை மீளச்செலுத்த நேர்ந்தமையே இதற்கான மூலகாரணம் என்று அரசாங்கம் கூறுகிறது.

ஆனால் ஏற்றுமதிகளின் அதிகரிப்பை விட இறக்குமதிகள் கூடிய வேகத்தில் அதிகரித்துச் செல்கின்றமை நீண்டகால அடிப்படைக் காரணமாகும். ஏற்றுமதிகள் பன்முகப்படுத்தப்படாமை. உயர்பெறுமதி கொண்ட பொருளுற்பத்திகள் ஊக்குவிக்கப்படாமை வெளிநாட்டு முதலீடுகளைக் கவர்வதில் நாடு தோல்வியடைந்தமை சுற்றுலாத்துறைக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட அதேவேளை உயர் பெறுமதி சேர்க்கை கொண்ட வியாபாரச் செயன்முறை வெளிமூலாதார (business process outsourcing) நடவடிக்கை அறிவுச் செயன்முறை வெளிமூலாதார நடவடிக்கைகள் போன்றவறறை போதியளவு ஊக்குவித்து அந்நியச் செலாவணியை பெறமுயற்சிப்பதில் தோல்வியடைந்தமை, உள்நாட்டில் மனித மூலதனத்தை உள்நாட்டில் பயன்படுத்த வாய்ப்பின்றி நாட்டைவிட்டும் தொடர்ச்சியாக மூளைசாலிகள் வெளியேறிச் செல்கின்றமை வெளிநாடுகளுடன் உற்பத்தி வலையமைப்பு (production networks) மற்றும் பெறுமதிச் சங்கிலி (value chain) என்பவற்றின் ஊடாக தொடர்புபட்டு இடைநிலைப் பொருள்களின் ஏற்றுமதியை ஊக்குவித்து நாட்டுக்குள் அந்நியச் செலாவணியை உட்பாச்சுவதை விடுத்து மோட்டார் வாகன உற்பத்தி போன்றவற்றை ஆரம்பிக்கும். (உதாரணமாக குளியாப்பிட்டியில் போல்க்ஸ்வாஹன் இலங்கைச் சந்தைக்கு உற்பத்தி மேற்கொள்ள வருவதாக) யதார்த்தபூர்வமற்ற கனவுகளில் மிதந்தமை போன்ற இன்னோரன்ன குறைபாடுகள் இலங்கையின் ஏற்றுமதிகள் குறைவாக இருப்பதற்கான முக்கிய காரணமாகும்.

அதேவேளை அதிக உள்நாட்டு பெறுமதிச் சேர்க்கை கொண்ட ஏற்றுமதிகளை மேற்கொள்ள முடியாதவாறு ஏற்றுமதிப்பொருள்களின் இறக்குமதி உள்ளடக்கம் (import content of exports) செறிவானதாக இருக்கிறது. அதனால் ஏற்றுமதிகளை அதிகரிப்பதில் கட்டமைப்பு ரீதியான குறைபாடுகள் நிலவுகின்றன. மறுபுறம் கேள்விப்பக்க அதிகரிப்பு காரணமாக இறக்குமதிகள் தொடர்ந்து அதிகரித்துச் செல்கின்றன. குறிப்பாக உள்ளீடுகள் மற்றும் இடைநிலைப்பொருள் இறக்குமதிகள் மொத்த இறக்குமதிகளில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட பங்கினை வகிக்கின்றன. இவை அத்தனையும் ஒன்றிணைந்து வர்த்தக நிலுவையின் தொடர்ச்சியான குறைநிலைக்கு பங்களித்துள்ளன. வர்த்தக நிலுவையில் நிலவும் குறைநிலை நாணய மாற்றுவீதத்தைத் தேய்வடையச் செய்துள்ளது.

மறுபுறம் தொடர்ந்தவந்த இலங்கை அரசாங்கங்கள் குறைநிலை வரவு செலவுதிட்டங்களையே தொடரச்சியாக இயக்கியதுடன் நாட்டின் வரிக்கட்டமைப்பில் நிலவும் குறைபாடுகள் காரணமாக துண்டுவிழும் தொகையைக் குறைப்பதில் வெற்றியடையவில்லை. அதனால் வருடாந்தம் பற்றாக்குறை நிதியீட்டத்திற்காகக் கடன் பெறும் நிலை அதிகரித்ததுடன் வெளிநாட்டுக் கடன்களின் அளவும் தொடர்ச்சியாக அதிகரித்துச் சென்றது. கடன் பெறுவதும் பெற்றகடனை மீளச்செலுத்த அதைவிடப் பெரிய கடனைப் பெறுவதும் என மாறிமாறித் தொடர்ந்தமையால் நாட்டின் டொலர் கையிருப்புகளில் பாதிப்பேற்பட்டு நாணயமாற்று வீதத் தேய்வுக்கு இட்டுச்சென்றது.

இன்றைய நிலையில் போதியளவு டொலர் கிடைத்தால் பிரச்சினை தற்காலிகமாகத் தீர்ந்து விடலாம். எனினும் இன்றைய 203 ரூபா மட்டத்தில் ரூபாவுக்கான உத்தியோகபூர்வ நாணய மாற்றுவீதம் அமையப்போவதில்லை. மறுபுறம் மேலே சொன்ன அடிப்படைப் பலவீனங்களுக்கு உறுதியான தீர்வுகள் காணப்படாதவரையில் இலங்கையின் பிரச்சினை நிரந்தரமாகத் தீரப்போவதில்லை.

இப்போதைய நெருக்கடி தொடர்ந்து தீவிரமடையும் பட்சத்தில் இப்போது சர்வதேச நாணய நிதியத்தை வெறுக்கும் நபர்கள் அதன் உதவியை நாடவேண்டிய வலுகட்டாயத்திற்கு தள்ளப்படுவர். அதன்போது விதிக்கப்படும் கடன் நிபந்தனைகளில் அத்தகைய தீர்வுகளுக்கான முன்மொழிவுகளும் உள்ளடக்கப்பட்டிருக்கும். அதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம் தென்படுகின்றன.

கலாநிதி எம். கணேசமூர்த்தி பொருளியல் துறை கொழும்பு பல்கலைக்கழகம் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள தீவிரமான டொலர் பற்றாக்குறையும் அதன் காரணமாக பொருளாதாரம் எதிர்நோக்கும் நெருக்கடி நிலைமையும் கோவிட் பெருந்தொற்றின் விளைவாக ஏற்பட்ட ஒன்றல்ல. மாறாக…

கலாநிதி எம். கணேசமூர்த்தி பொருளியல் துறை கொழும்பு பல்கலைக்கழகம் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள தீவிரமான டொலர் பற்றாக்குறையும் அதன் காரணமாக பொருளாதாரம் எதிர்நோக்கும் நெருக்கடி நிலைமையும் கோவிட் பெருந்தொற்றின் விளைவாக ஏற்பட்ட ஒன்றல்ல. மாறாக…