மனித சிந்தனையை குழப்பும் போலி தகவல்கள்

  • 1

மொஹமட் அல்தாப்

நாட்டில் அவ்வப்போது இன ரீதியாக பரப்பப்படும் போலியான தகவல்களால் சிறுபான்மை மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதை நாம் காண்கிறோம். சமூக வலைத்தளங்களின் அபார வளர்ச்சிக்குப் பிறகு இதன் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது.

ஒரு சிறு சம்பவத்தைக்கூட மிகைப்படுத்தி வெளியிடப்படும் கருத்துகள் பாரதூரமான பின்விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அவை, பல சந்தர்ப்பங்களில் ஆறாத காயங்களாக உருவாகிவிடுவதுடன், இன ரீதியான முரண்பாடுகளுக்கு வித்திடுவதாகவும் அமைகின்றன.

இலங்கையில் இன மற்றும் சமய ரீதியிலான வன்முறை தொடராக 1915, 1956, 1977, 1983, 2001, 2014, 2018, 2019 ஆகிய வருடங்களில் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஏற்பட்ட – அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட முதல் இனக்கலவரமாக 1915 சிங்கள – முஸ்லிம் இனக்கலவரமே கருதப்படுகிறது. இதுவும் ஒரு தவறான செய்தி பரப்பப்பட்டதாலேயே ஏற்பட்டது.

சிங்கள மக்களின் கலாசார நிகழ்வுகளில் பெரஹரா நிகழ்வுகள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. பல்வேறு இடங்களில் இந்த பெரஹரா நிகழ்வுகள் அரசாங்கத்தின் உதவியுடன் நடத்தப்பட்டு வருகின்றன. அதுபோலவே 1915ஆம் ஆண்டு குறித்த பெரஹர கம்பளை, கண்டி நகரங்களில் அமைந்துள்ள முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கு முன்னே செல்லும்போது மௌனமாகச் செல்லவேண்டும் என சில முஸ்லிம்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், இந்த நியாயமான கோரிக்கை பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் தவறாக பரப்பப்பட்டது. பெரஹராவின்போது முஸ்லிம்களால் சிங்களவர்கள் மீது கல் எறியப்பட்டதாக கூறப்பட்டது. இந்த தவறான செய்தி சிங்கள மக்கள் மத்தியில் காட்டுத் தீ போல் பரவியது. இதுவே 1915ஆம் ஆண்டு சிங்களவர்களால் முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டிவிடப்பட்ட கலவரங்களுக்கு முக்கிய காரணியாக அமைந்ததாக சர்வதேச ஆய்வாளரும், அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான அமீர் அலி என்பவர் எழுதிய The 1915 Racial Riots in Ceylon (Sri Lanka): A reappraisal of its causes என்ற புத்தகத்தில் இதுபற்றி விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கண்டியில் ஏற்பட்ட கலவரம் மெல்ல மெல்ல ஒரு வார காலத்துக்குள் ஏனைய இடங்களுக்கும் பரவியது. கிராமப்புறங்களிலும் இத்தகைய முரண்பட்ட தன்மையை காணமுடிந்தது. ரம்புக்கணை, காலி, மாத்தறை, நீர்கொழும்பு, நாத்தாண்டி, பாணந்துறை என நாடுதழுவிய ரீதியில் கலவரங்கள் இடம்பெற்றாலும் கண்டியில்தான் இதனது தாக்கம் அதிகம் உணரப்பட்டது. பல வீடுகள், கடைகள், பள்ளிவாசல்கள் எரிக்கப்பட்டன. குறிப்பாக, கொழும்புக்கும் மாத்தறைக்குமிடையில் இருந்த பல வீடுகள், கடைகள் தாக்கப்பட்டன. கொழும்பு கலவரத்தின்போது சுமார் 150 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் பதிவாகியுள்ளன.

இதேவேளை, சமூக ஊடகங்கள் இல்லாத காலப்பகுதியில் வாய்மொழி மூலமாக பல நாட்களாக இலங்கையிலுள்ள முஸ்லிம் கிராமங்களை தவறான செய்திகள் தாக்கின. இதனைத் தொடர்ந்து முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வு சமூகத்தில் கட்டவிழ்க்கப்பட்டது. எனினும், இவ்வாறு பரப்பப்பட்ட தவறான செய்திகள் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதற்கு முக்கிய காரணம், அந்த காலப்பகுதியில் இன்றைய நிலைபோன்று சமூக ஊடகங்களின் செல்வாக்கு இருக்கவில்லை.

இதேவேளை, 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராகவும் ஒரு வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இதற்கு அரசியல் ரீதியான பல காரணங்கள் பின்னணியில் இருந்தன. விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற போரின்போது யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் 13 இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு பலியாகியமைதான் அதில் முக்கிய இடம்பிடித்தது. இதன்போது தமிழர்கள் சிங்களவர்களை துண்டுத் துண்டாக வெட்டி வீசினார்கள் என்ற தவறான செய்தி சிங்கள மக்கள் மத்தியில் பரப்பப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, குறித்த கலவரம் தமிழ் மக்களுக்கு எதிராக 5 நாட்கள் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது சுமார் 4 ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும், 11 ஆயிரம் கோடி பெறுமதியான சொத்துகள் சேதமாக்கப்பட்டதாகவும் இதுவரை வெளியான பல அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதனுடாக, மாவனல்ல பிரதேசத்தில் வசித்துவந்த தமிழர்கள் மீதும் இனவாதிகளின் வன்முறைகள் இடம்பெற்றதாக மாவனல்லயை வசிப்பிடமாகக்கொண்ட ஊடகவியலாளரும் எழுத்தாளருமான அமீர் ஹூசைன் தெரிவித்தார்.

அடுத்து முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பிரதான கலவரமே மாவனெல்ல கலவரம். 2001 ஆம் ஆண்டு மாவனெல்ல நகரிலும் அதற்கு அண்மையில் இருந்தப் பகுதிகளிலும் இருந்த முஸ்லிம்களுக்கு எதிராக இந்த கலவரம் இடம்பெற்றது.

முஸ்லிம் வியாபார நிலையங்களில் சிங்கள இனத்தினர் கப்பம் கோரியமைக்காக பெரும்பான்மை பௌத்தர் ஒருவர் முஸ்லிம் ஒருவரால் தாக்கப்பட்டார். ஆனால் இதனை அடுத்து மாவனெல்லை நகரில் சிங்களவர்கள் வெட்டப்பட்டு துன்புறுத்தப்பட்டதாக மாவனெல்லயை அண்டிய பகுதிகளில் தவறாக பரப்பப்பட்டன.

மேலும் சிங்கள மத குரு ஒருவரை வெட்டி டிரக்டர் வாகனத்தில் இழுத்து செல்லப்பட்டதாகவும் தவறான செய்திகள் இதன்போது பரப்பப்பட்டன. இதுவே தனிப்பட்ட இரு நபர்களுக்கு இடையிலான பிரச்சினை, 2001 ஆண்டு மாவனெல்லயை அண்மித்த பகுதிகளில் சிங்களவர்களால் முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டிவிடப்பட்ட கலவரமாக மாற முக்கிய காரணியாக அமைந்ததாக மாவனெல்லயை வசிப்பிடமாகக்கொண்ட ஊடகவியலாளரும் எழுத்தாளருமான அமீர் ஹூசைன் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, 2009 ஆம் ஆண்டு விடுதலை புலிகளுக்கு எதிரான யுத்தம் இராணுவ ரீதியாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அதன்பின்னர் நாட்டில் ஒரு அமைதியான சூழல் சில காலங்கள் நிலவியது. இந்நிலையில், அதுவரை காலமும் நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிரான போக்கொன்று இருந்துவந்த நிலையில் தமது அரசியல் இருப்புக்களை தக்கவைத்துக்கொள்ள ஒரு கருவியாக சில இனவாத சக்திகள் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களை மேற்கொள்வதில் கவனம் செலுத்தின.

இம்முறை அவர்களின் பிரதான இலக்காக முஸ்லிம் சமூகத்தை தெரிவுசெய்ததாக இலங்கையில் உள்ள ஊடகவியலாளர்களுள் பொன்விழா கண்ட ஊடகவியலாளரும் சர்வதேச புகழ்பெற்ற எழுத்தாளருமான லத்தீப் பாரூக் இந்தக் காலப்பகுதியில் எழுதிய தனது கட்டுரை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளார். அவற்றுள் 2014ஆம் ஆண்டு அளுத்கமயிலும், 2017ஆம் ஆண்டு காலி, ஜிந்தோட்டையிலும் 2018ஆம் ஆண்டு அம்பாறை நகர் மற்றும் கண்டி, திகன ஆகிய பிரதேசங்களிலும், 2019ஆம் ஆண்டு குருநாகல், நீர்கொழும்பு, மினுவாங்கொட ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் பாரிய சேதங்களை ஏற்படுத்தின.

அழுத்கம கலவரத்தின்போது முஸ்லிம் இளைஞர்கள் பௌத்த பிக்கு ஒருவரை மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி ஏசியதாக ஒப்புக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால், அந்த பௌத்த மதகுரு மீது தாக்குதல் நடத்தப்பட்டதால், அவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அளுத்கம கலவரத்தின்போது, பொதுபல சேனா இயக்கத்தின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மேடை பேச்சொன்றின்போது தெரிவித்திருந்தார்.

ஆனால், இந்தச் சம்பவத்தில் பௌத்த பிக்கு ஒருவர் கொல்லப்பட்டதாக மேலும் ஒரு வதந்தி பரப்பப்பட்டது, பௌத்தர்களின் உணர்வுகள் இவ்வாறு தூண்டப்பட்டன. இதுவே, அளுத்கமயை அண்மித்த பகுதிகளில் சிங்களவர்களால் முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டிவிட்ட கலவரங்களுக்கு முக்கிய காரணியாக அமைந்ததாக சர்வதேச புகழ்பெற்ற இளம் எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளரும் அண்மையில் இலங்கை அரசின் சாகித்திய விருதை வென்றவருமான ரிஷான் ஷரீப் கறுப்பு ஜூன் 2014 என்ற அவரது ஆய்வு நூலொன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்பின்னர், கடந்த 2018ஆம் ஆண்டு கண்டி மாவட்டத்திலுள்ள திகன மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இந்த வன்முறையின்போது இரண்டு பேர் கொல்லப்பட்டனர். அத்துடன், 33 வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டதுடன், 256 வீடுகள் பகுதியளவில் சேதமாக்கப்பட்டன. மேலும் 163 கடைகளும், 47 வாகனங்களும் சேதமாக்கப்பட்டதுடன், இப்பிரதேசங்களிலுள்ள 20 பள்ளிவாசல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தச் சம்பவங்களின் பின்னணியை ஆராய்கின்றபோது கலவரத்துக்கான ஊற்றுக்கண் தவறாக பரப்பப்பட்ட தகவல்களே என தகவல் சட்டம் தொடர்பிலான ஆலோசகர் நாலக்க குணவர்தன தனது கட்டுரை ஒன்றின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார். 2010ஆம் ஆண்டுமுதல் இலங்கையில் பிரதான ஊடகங்களுக்குள் ஒருவகையான பேரின தீவிரவாதம் ஊடுருவத் தொடங்கியது. அங்கு கண்காணிப்பாளர்கள், கட்டுப்பாட்டாளர்கள், மேற்பார்வையாளர்கள் என பல தளங்களில் மேலதிகாரிகள் இருந்தும்கூட பிரதான ஊடகங்களுக்குள் பேரினவாத தீவிரபோக்கு தலைவிரித்தாடத் தொடங்கியதாகவும் தகவல் சட்டம் தொடர்பிலான ஆலோசகர் நாலக்க குணவர்தன தனது கட்டுரை ஒன்றின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன் பின்னர் எந்தவகையான கண்காணிப்பாளர்களோ மேற்பார்வையோ அல்லது கட்டுப்பாடுகளோ இல்லாத சமூக ஊடகங்களுக்குள் இந்த போக்கு விரைவாக பரவத் தொடங்கியது. அதற்கு பிந்திய காலங்களில் சில அரசியல் மற்றும் சமய குழுக்கள் ஒழுங்குபடுத்தப்பட்ட விதத்தில் சமூக ஊடகங்களை ஆயுதமயமாக்கின.

பெரும்பாலானவர்களுக்கு விளங்குவதற்கும் அல்லது புனைப்பெயர்களைப் பயன்படுத்துவதற்கும் இணையங்கள் வழங்குகின்ற வாய்ப்பைபையும், உள்ளடக்கங்களையும் பயன்படுத்திக்கொண்டதாக ஊடகவியலாளரும் சர்வதேச புகழ்பெற்ற எழுத்தாளருமான லத்தீப் பாரூக் தனது மற்றொரு கட்டுரையொன்றில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில், 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற திகன கலவரத்தின் பின் பௌத்தர்கள் தலைமையில் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினர் மீது தொடர்ச்சியாக இடம்பெற்ற வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கு முடியாத நிலை காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து இலங்கை அரசாங்கம் சமூக ஊடகங்களையும் தொடர்பாடல் செயலிகளையும் தற்காலிகமாக சில தினங்களுக்கு தடைசெய்தது.

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களையும் மூன்று நாட்களுக்கு நாடுமுழுவதும் பேஸ்புக் மற்றும் வட்ஸப், வைபர் பாவனையை இடைநிறுத்துமாறு கேட்டுக்கொண்டது. இன வன்முறைகள் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கையென தகவல் சட்டம் தொடர்பிலான ஆலோசகர் நாலக்க குணவர்தன தனது கட்டுரையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, கண்டி மாவட்டத்தில் மாத்திரம் இணைய பாவனை முற்றாக சில நாட்களுக்கு நிறுத்தப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறான தகவல்கள் சமூகத்தில் பரவாமல் இருக்க 2018ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜனாதிபதியாக இருந்த மைத்ரிபால சிறிசேன இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தார். முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை ஒருங்கிணைப்பதற்காக, வட்ஸப் போன்றவற்றை கலகங்களில் ஈடுபடுபவர்கள் பயன்படுத்துவது தெரியவந்ததன் பின்னரே இந்த நடவடிக்கையை அரசாங்கம் எடுத்தது.

சட்டம், ஒழுங்கு பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், அதை அமுல்படுத்துவதற்காக பொலிஸாரும் அவர்களுக்கு துணையாக இராணுவமும் அழைக்கப்பட்ட நிலையில், வீதிகளில் இடம்பெற்ற வன்முறைகளை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட தரப்பினர் தவறிவிட்டனர். ஆனால், அந்தத் தவறின் காரணமாக பலத்த பாதிப்புகள் ஏற்பட்ட பின்னர் இணையத்தை ஒழுங்குபடுத்த அரசாங்கம் முயன்றது மிகவும் பொருத்தமற்ற செயற்பாடாகவே காணப்படுகிறது.

எனினும், அன்றைய வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளில் சமூக ஊடகங்களை தடைசெய்யும் அரசாங்கத்தின் நடவடிக்கை ஒரு பொறிமுறையாகவே கையாளப்பட்டது. வெறுப்புணர்ச்சி என்ற எண்ணம் இனவாதிகளின் மனதில் விதைக்கப்பட்டு தற்போழுது வெளியே வந்துவிட்டது. இந்நிலையில், அரசாங்கம் எவ்வைகையான உத்திகளை கையாண்டாலும் கலவரங்களைக் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு காலம் மாறியுள்ளது. அது மாத்திரமன்றி பல வருடங்களாக இனவாதிகள் மக்களின் மனங்களை இன மற்றும் மத, சமய உணர்வால் நஞ்சூட்டி வந்துள்ளனர்.

அத்துடன், ஒருசில ஊடகங்களும் இனவாதக் கருத்துகளுக்கு இடமளித்து வந்துள்ளன. இவற்றுக்கு மெருகூட்டும் விதமாக தனியார் தொலைக்காட்சிகளும் இனங்களுக்கிடையில் தவறான தகவல்களை பரப்புவதை தமது பிரதான பணிகளுள் ஒன்றாக கருதி செயற்படுகிறது. இந்நிலையில், நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட கலவரங்களுக்கப்பால் பல அரசியல்வாதிகளும் தேரர்களும் ஒருசில பெரும்பான்மை நபர்களும் தமது நோக்கத்தை அடைந்துகொண்டனர்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலை இதற்கு பிரதான உதாரணமாகக் கூறலாம். இனவாதம் ஓர் அரசியல் பிரவேசமாக மாறியது. இலங்கை வரலாற்றில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட கலவரங்களுக்கு பின்னாலிருந்த ஒரு முக்கிய நபராக ஞானசார தேரரை குறிப்பிடலாம். அவர் எங்கள் மக்கள் சக்தி சார்பாக கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு சுமார் 19 ஆயிரம் வாக்குகளை பெற்றுக்கொண்டார்.

மறுபக்கம், கண்டி மாவட்டத்தில் போட்டியிட்ட அமித் வீரசிங்க 13 ஆயிரம் வாக்குகளைப் பெற்றார். இவர்களது பிரவேசம் இனவாதத்தின் ஊடாக எதனையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்துகிறது. இந்நிலையில், பெரும்பான்மைச் சமூகத்தினரால் பரப்பப்பட்ட தவறான தகவல்கள் மற்றும் குரோத பேச்சினால் கலவரங்கள் தோற்றம் பெற்றன. மறுபக்கம் முஸ்லிம்களுக்கு இலங்கை வரலாற்றில் பல அநியாயங்கள், துன்புறுத்தல்கள் இடம்பெற்றாலும் அவை கலவரங்களாக வெடிக்கவில்லை. முஸ்லிம்கள் கலவரங்களில் ஈடுபடவில்லை.

எனவே, குரோத பேச்சுகள் தவறான செய்திகள் என்பவற்றை கட்டுப்படுத்துவதன் மூலம் இலங்கையில் சமாதானத்தை நிலைநாட்ட முடியும். மேலும் தவறான செய்திகளை கட்டுப்படுத்த உறுதியான சட்டம், ஒழுங்கு கொண்டுவரப்பட வேண்டும். அந்த சட்டம் பாரபட்சமின்றி எல்லோருக்கும் பொதுவான முறையில் சரியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

இதேவேளை, இனவாத செயற்பாடுகளைப் பொறுத்தமட்டில் எதிர்வரும் காலங்களில் பல சவால்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். அரசியல் காய்நகர்த்தலாகப் பயன்படுத்தப்படும் இனவாதம், ஆட்சியை கைப்பற்றிக்கொள்ளவும் கீழ்த்தரமான அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தவும் வாய்ப்புள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் பலரும் பேராசிரியர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற அனைத்து கலவரங்களுக்கும் பின்னாலும் தவறான செய்திகளே பல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், இவற்றை கட்டுப்படுத்துவதன் மூலம் இலங்கை மண்ணில் அமைதியையும் சமாதானத்தையும் நிலைநாட்ட முடியும். குரோதமான பேச்சுகள், போலியான செய்திகள் மற்றும் தவறான பேச்சுகள் எமது அறிவையும் புரிந்துணர்வையும் குழப்பும் ஒரு மார்க்கமாக தற்போது மாறியுள்ளன. இதை எவ்வாறு சமாளிப்பது என்பதே தற்போது நாம் எதிர்கொண்டுள்ள பிரதான சவாலாகும்.

மொஹமட் அல்தாப் நாட்டில் அவ்வப்போது இன ரீதியாக பரப்பப்படும் போலியான தகவல்களால் சிறுபான்மை மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதை நாம் காண்கிறோம். சமூக வலைத்தளங்களின் அபார வளர்ச்சிக்குப் பிறகு இதன் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது. ஒரு…

மொஹமட் அல்தாப் நாட்டில் அவ்வப்போது இன ரீதியாக பரப்பப்படும் போலியான தகவல்களால் சிறுபான்மை மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதை நாம் காண்கிறோம். சமூக வலைத்தளங்களின் அபார வளர்ச்சிக்குப் பிறகு இதன் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது. ஒரு…

%d bloggers like this: