லங்கா பிரிமியர் லீக் இன்று ஆரம்பம்

  • 10

எல்லோரும் மிக ஆவலுடன் எதிர்பார்த்த லங்கா ப்ரீமியர் லீக் இருபதுக்கு இருபது இரண்டாவது தொடர் இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் இன்று (05.12.2021) ஆரம்பமாகின்றது.

இரண்டாவது லங்கா ப்ரீமியர் லீக் நடைபெறுமா? நடைபெறாதா? என்ற பெரும் கேள்விகளுக்கு அப்பால் போட்டித் தொடர் நடைபெறுவது இலங்கை கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

டிசம்பர் 5ம் திகதி தொடக்கம் டிசம்பர் 24ம் திகதிவரை லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் முதலாம் கட்ட சுற்று கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும், இரண்டாம் கட்ட இறுதிச் சுற்று ஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும் நடைபெறவுள்ளது.

கடந்த வருடம் நடைபெற்ற அங்குரார்ப்பண லங்கா ப்ரீமியர் லீக் போட்டித் தொடர் சூரியவெவ மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச விளையாட்டு மைதானத்தில் மாத்திரம் இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

அந்த வகையில் லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் ஆரம்ப நிகழ்வு இன்று 05ம் திகதி ஆர்.பிரேமதாச சர்வதேச மைதானத்தில் 5அணிகளின் பங்கெடுப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ளது.

இதில், காலி கிளேடியேட்டர்ஸ், ஜப்னா கிங்ஸ், கொழும்பு ஸ்டார்ஸ், தம்புள்ள ஜெயண்ட்ஸ், கண்டி வொரியர்ஸ் என அணிகள் பெயரிடப்பட்டுள்ளன.

மொத்தமாக 24 போட்டிகள் இடம்பெறவுள்ளன. இறுதிப்போட்டி டிசம்பர் 23ம் திகதி சூரியவெவ மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச மைதானத்தில் நடைபெறும். இதற்கு மேலதிகமாக 24ம் திகதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா பிரீமியர் லீக் 2021 உலக விளையாட்டுத் துறையில் இலங்கையை பலப்படுத்தும் ஒரு போட்டியாகவும் உள்ளதுடன், இப்போட்டியானது இப்போதே உள்ளூர் மற்றும் சர்வதேச விளையாட்டு பார்வையாளர்கள் மற்றும் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

வீரர்கள், பார்வையாளர்கள் மற்றும் நாட்டின் நீண்டகால நலனை கருத்திற்கொண்டு விளையாட்டு அமைச்சு, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மற்றும் எல்பிஎல் 2021 அமைப்பாளர்கள் ஒன்றிணைந்து எல்பிஎல் 2021 போட்டியை டிசம்பர் 05 முதல் டிசம்பர் 24 வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனா உலகளாவிய தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விளையாட்டு சுற்றுலாத் துறையை வலுப்படுத்தவும், இலங்கையை உலக வரைபடத்தில் விளையாட்டு மூலம் வலுவான நாடாக உயர்த்தவும் இந்த போட்டி ஒரு வலுவான அடித்தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சுகாதாரத்துறையின் ஒப்புதலுடனும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோரின் அனுமதியுடன் இப்போட்டித் தொடர் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸவின் ஒருங்கினைப்பிலும், ஆலோசனையிலும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் மூலமும் இப்போட்டித் தொடருக்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இப்போட்டித் தொடர் இடம்பெறுவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸவின் பங்களிப்பு இன்றியமையாததாகும்.

இதேவேளை, இச்சுற்றுத் தொடரில் பங்கேற்கும் மிகச்சிறந்த வெளிநாட்டு வீரர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதுடன் பயிற்சிகளையும் ஆரம்பித்துள்ளனர்.

போட்டிகள் அனைத்தும் இந்திய தொலைக்காட்டி நிறுவனமான Sony Pictures Networks நிறுவனத்தின் விளையாட்டு அலைவரிசையில் நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளன. இலங்கையில் இப்போட்டிகளை ஒளிபரப்புச் செய்வதற்கான அனுமதியை சுப்ரிம் தொலைக்காட்சி பெற்றுக்கொண்டுள்ளது.

அங்குரார்ப்பண லங்கா பிறிமியர் லீக் சுற்றுப்போட்டித் தொடர் பல தடைகளையும், சவால்களையும், நெருக்கடிகளையும் சந்தித்து வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் இரண்டாவது சுற்றுத் தொடர் அதைவிடவும் மிகச்சிறப்பாக நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கும், நாட்டுக்கும் மகிழ்ச்சியான செய்தியாகும்.

கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் தலைவராக அஞ்சலோ மெத்தியுஸ், கண்டி வொரியர்ஸ் அணியின் தலைவராக அலேச குணரட்ன, ஜப்னா கிங்ஸ் அணித் தலைவராக திஸார பெரேரா, காலி க்ளேடியேட்டர்ஸ் அணியின் தலைவராக பானுக்க ராஜபக்ஸ, தம்புள்ள ஜெயண்ட்ஸ் அணியின் தலைவராக தசுன் சானக்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜப்னா கிங்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் திலிண கண்டம்பியும், காலி க்ளேடியேட்டர்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளராக பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் உமர் குல் நியமிக்கப்பட்டுள்ளார். கண்டி வொரியர்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளராக லால்சாந்த் ராஜ்பூத், கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ருவன் கல்பகே நியமிக்கப்பட்டுள்ளார். தம்புள்ள ஜெயண்ட்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளராக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரா் ஸ்டூவர்ட் லோவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு ஸ்டார்ஸ் அணி

துஸ்மந்த சமீர, டில்சான் முனவீர, கிறிஸ் கைல், அஹமட் செஹ்சாட், முகம்மட் இர்பான், அல் -அமீன் ஹூசைன், தஸ்கின் அஹமட், பத்தும் நிசாங்க, லக்ஸான் சந்தகன், சீக்குக்கே பிரசன்ன, மன்பிறிட் சிங், ஜிஹான் ரூபசிங்க, லஹிரு கமகே, டி.எம்.சம்பத், நுவனிது பெர்னாண்டோ, ஜெஹான் டேனியல், எம்.மதுரங்க, என்.பிரியதர்ஸன, ஹசான் துமிந்து, கே.கபில்ராஜ், தினேஷ் சந்திமால், குஷால் ஜனித் பெரேரா.

தம்புள்ளை ஜெயண்ட்ஸ் அணி

தசுன் சாணக்க, இம்ரான் தாஹீர், சாமிக்க கருணாரத்ன, ரிலி ரோசோவ்ஈ சொய்ப் மக்சூட், ஒடியன் ஸ்மித், ஜோஸ் லிட்டுல், நிரோசன் திக்வல்ல, நுவான் பிரதீப், ரமேஸ் மெண்டிஸ், நஜிபுல்லா சத்ரான், தரிந்து ரட்நாயக்க, லஹிரு உதார, சஜ டி அல்விஸ், முதித்த லக்ஸான், காலன பெரேரா, எஸ். ஜெயதிலக்க, ஆர்.ரவிச்சந்திரகுமார், ஜெனித் லியனகே, சாமிக்க எதிரிசிங்க

காலி க்ளேடியேட்டர்ஸ் அணி

பானுக்க ராஜபக்ஸ, மொஹம்மட் ஹபீஸ், இசுறு உதான, தப்றிஸ் சம்ஸி, குசால் மெண்டிஸ், மொஹம்மட் அமீர், சமீட் பட்டேல், சப்ராஸ் அஹமட், தனுஸ்க குணதிலக்க, தனஞ்சய லக்ஸான், அன்வர் அலி, புலின தரங்க, நுவான் துஸார, லஹிறு மதுசங்க, டில்ஸான் மதுசங்க, எசியன் டேனியல், கவின் கெத்திகொட, மொஹம்மட் சாமாஸ், சுமிந்த லக்ஸான், அஞ்சலோ ஜெயசிங்க

ஜப்னா கிங்ஸ் அணி

திஸார பெரேரா, வனிந்து ஹசரங்க, சுகைப் மலீக், பெப் டு பிளஸிஸ், வஹாப் ரியாஸ், உஸ்மான் சின்வாரி, ரஹ்மத்துல்லா குர்பாஸ், அவிஸ் பெர்னாண்டோ, உபுல் தரங்க, சத்துரங்க டி சில்வா, ஜெய்டன் சீல்ஸ், சுரங்க லக்மால், அசேன் பண்டார, மஸே் தீக்ஸன, சாமிக்க குணசேகர, விஜயகாந் வியாஸ்காந், டி. டினோசன், ஆர்.தேனுரதன், கிறிசான் சஞ்சுல.

கண்டி வொரியர்ஸ் அணி

சரித் அசலங்க, ரொவ்மன் பவல், கமருன் டெல்போர்ட், லஹிறு குமார, மொஹம்மட் மிதுன், நஸ்முல் இஸ்லாம் அபு, மெஹ்தி ஹசன் ரானா, அஞ்சலோ பெரேரா, அலேச குணரத்ன, மிலிந்த சிறிவர்த்தன, அம்ஜட் காண், இஸான் ஜெயரத்ன, பினுர பெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ், காமில் மிஸ்ரா, அயன சிறிவர்த்தன, நிமேஸ் விமுக்தி, உதார ஜெயசுந்தர, சசிக்க டுல்சான், ஹல்கர சேனாரத்ன.

இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களும் டெஸ்ட் கிரிக்கெட் இணைப்பாட்டத்தில் உலக சாதனையாளர்களுமான மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார ஆகிய இருவரும் வர்த்தக கிரிக்கெட் சங்கத்தினால் (எம்.சி.ஏ.) கௌரவிக்கப்பட்டனர். எம்.சி.ஏ. தலைவர் நலின் விக்ரமசிங்க தலைமையில் வர்த்தக கிரிக்கெட் சங்க கிரிக்கெட் விங் மண்டபத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தின்போது அங்கு வைக்கப்பட்டுள்ள முன்னாள் கிரிக்கெட் விற்பன்னர்களின் உருவப் படங்கள் வரிசையில் மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார ஆகியோரின் உருவப் படங்களும் இணைக்கப்பட்டன. தங்களது உருவப் படங்களை மஹேல ஜயவர்தனவும் குமார சங்கக்காரவும் திரை நீக்கம் செய்துவைத்தமை விசேட அம்சமாகும். இவர்கள் இருவரும் ஐசிசியின் புகழ்பூத்த கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளமை மற்றொரு விசேட அம்சமாகும். அவர்கள் இருவருக்கும் நலின் விக்ரமசிங்கவினால் நினைவுச் சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டன. வர்த்தக கிரிக்கெட் சங்கத் தலைவர்கள் வரிசையில் வெள்ளையர்களைத் தொடர்ந்து முதலாவது தலைவராகத் தெரிவான இலங்கையர் என்ற பெருமையைப் பெற்ற சந்த்ரா ஷாவ்டர் உட்பட சங்கத்தின் சமகால நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் பலரும் இந்த வைபவத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

எல்லோரும் மிக ஆவலுடன் எதிர்பார்த்த லங்கா ப்ரீமியர் லீக் இருபதுக்கு இருபது இரண்டாவது தொடர் இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் இன்று (05.12.2021) ஆரம்பமாகின்றது. இரண்டாவது லங்கா ப்ரீமியர் லீக் நடைபெறுமா? நடைபெறாதா? என்ற பெரும்…

எல்லோரும் மிக ஆவலுடன் எதிர்பார்த்த லங்கா ப்ரீமியர் லீக் இருபதுக்கு இருபது இரண்டாவது தொடர் இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் இன்று (05.12.2021) ஆரம்பமாகின்றது. இரண்டாவது லங்கா ப்ரீமியர் லீக் நடைபெறுமா? நடைபெறாதா? என்ற பெரும்…