பாழடைந்து காணப்படும் புரடொப் வைத்தியசாலை

ஆர். நவராஜா

நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேசத்திற்குட்பட்ட புரடொப் வைத்தியசாலை மூடப்பட்டு பாழடைந்த நிலையில் பேய் பங்களாபோல காட்சியளிக்கின்றது. 7 தோட்டப் பிரிவுகளையும் சேர்ந்த 10 ஆயிரத்திற்கு அதிகமான மக்கள் அன்றாடம் தமது மருத்துவ தேவைகளுக்கு பயன்படுத்தி வந்த மிகப் பழமையான வைத்தியசாலை. இந்த வைத்தியசாலை கடந்த 13 வருடங்களுக்கு மேலாக இயங்காமல் மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது.

ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட இவ்வைத்தியசாலை இரண்டு மாடிகளை கொண்டது. தனி கருங்கற்கலால் கட்டப்பட்ட இந்த வைத்தியசாலையில் வைத்தியர் விடுதிகள், தாதிமார் விடுதிகள் இவற்றுக்கு மேலாக துணிகளைக் கழுவும் சலவையாளர் விடுதி, தொலைபேசி வசதி, பிரத்தியேகமாக வைத்தியசாலைக்கு என நீர் மின்சார உற்பத்தி வசதி மற்றும் விநியோக கட்டமைப்பு என்பவற்றை உள்ளடக்கியது.

இரண்டு வைத்தியர்கள் 4 தாதிமார் உட்பட 10க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொன்டு இயங்கிய இந்த வைத்தியசாலை பிரசவ வாட், நோயாளி வார்ட், சிறுவர் வார்ட், வெளிநோயாளர் பிரிவு என தனித்தனியே பல வசதிகளைக் கொண்டிருந்தது. 40 நோயாளர் கட்டில்களை தன்னகத்தே கொண்டிருந்தும் இந்த மூடப்பட்ட வைத்தியசாலையில் வைத்தியர்கள் பயன்படுத்தும் மருத்துவ உபகரணங்கள் பயன்படுத்தப்படாத நிலையில் உள்ளது.

இன்று இந்த மக்கள் 30 கி.மீற்றருக்கு அப்பால் உள்ள புசல்லாவ மாவட்ட வைத்தியசாலை, 45 கி.மீட்டருக்கு அப்பால் உள்ள கம்பளை வைத்தியசாலைக்கு செல்வதற்கு 2 ஆயிரம் தொடக்கம் 4 ஆயிரம் ரூபா வரையில் செலவிடவேண்டியுள்ளது என்பதால் நோயாளி தனியே போகமுடியாது. இவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் நபரின் அன்றைய வருமானமும் இழக்கப்படுகின்றது. இவருக்கான உணவு மற்றும் இதர செலவுகளை நோயாளியே செலுத்த வேண்டியுள்ளது.

தாய் சேய் மருத்துவ பரிசோதனை உட்பட பல்வேறு மருத்துவ பிரச்சினைகளுக்கும் பல கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டியுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகள் முறையாக நிறைவேற்றப்பட்டன. சுதந்திரத்தின் பின்னர் ஆங்கிலேயர் விட்டுச்சென்ற வசதிகள், சலுகைகள் உரிமைகள் படிப்படியாக பறிபோகின்றன என்பதற்கு இந்த மருத்துவமனை ஒரு உதாரணம்.

இங்கே இன்னொரு விஷயத்தையும் சொல்ல வேண்டியிருக்கிறது. மக்கள் தம் பிரச்சினைகளை ஊடகங்களுக்கு தெரிவிக்கும்போது சங்கங்களையும் அரசியலையும் சார்ந்தவர்கள் அவை தத்தமது தலைவர்களுக்கு எதிரானவை எனக் கருதி ஊடகத்துரையினர் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்துகின்றனர். மலையகத்தில் மதுபான அரசியலுடன் குண்டர் அரசியலும் கலந்துள்ளமைக்கு இந்த அச்சுறுத்தல்கள் சான்றாகும். இந்த அரசியல்வாதிகள் இன்றும் தோட்டங்களுக்குள் வசித்து கொண்டே தோட்ட மக்கள் நலனுக்கு விரோதமாக செயற்படுகின்றனர். இவ்வாறான அரசியல்வாதிகளை இனங்கண்டு மக்கள் ஓரம்கட்டும் காலம் வந்துவிட்டது. மக்கள் குறைபாடுகளைக் கண்டு அதை விரைவாக தீர்ப்பதே அரசியல்வாதிகளின் பிரதான கடமை. குறையை சுட்டிக்காட்டுபவர்களை அச்சுறுத்துவது அராஜகம்.

புரடொப் தோட்டத்தில் காணப்படும் தோட்டப் பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் 3 கி. மீட்டர் தூர உள்வீதிகள் ஊடாக பயணிக்க வேண்டும். இவை பாதைகளாக இல்லை மழைக்காலத்தில் ஓடைகளாகவும் சேறும் சகதியுமாகவும் காணப்படுகின்றன. வாகனங்கள் மட்டுமல்லாது நடைப்பயணமாகக்கூட பயணிக்க முடியாது என்பதுதான் உண்மை.

இந்த வைத்தியசாலை மூடப்பட்ட பின் பிரசவத்திற்காக கொண்டு செல்லும் வழியில் முச்சக்கர வண்டியில் பிரசவமான சம்பவங்கள் பல நடந்துள்ளன. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் அவசர நோயாளி ஒருவரை புசல்லாவ வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் இடையிலேயே மரணித்து விட்டார். புரடொப் வைத்தியசாலை இயங்கியிருந்தால் இந்த உயிரிழப்பு இடம்பெற்றிருக்காது.

தமது அடிப்படைத் தேவைகளை சுட்டிக்காட்டி அவற்றை நிறைவேற்றி தரும்படி கோரும் மக்களை அச்சுறுத்தும் குண்டர்களின் வீட்டில் இவ்வாறான ஓர் உயிரிழப்பு ஏற்பட்டிருந்தால் அதன் வேதனை இவர்களுக்கு தெரிந்திருக்கலாம், இந்த வைத்திசாலையின் பெறுமதியும் தெரிந்திருக்கும்.