அளுத்கமயில் புகையிரதம் மோதி சிறுவன் உயிரிழப்பு

அளுத்கம புகையிரத நிலையத்திற்கு அருகில் சிறுவனொருவன் புகையிரதத்தில் மோதி இன்று (19.12.2021) உயிரிழந்துள்ளான்.

காலியில் இருந்து கல்கிஸ்ஸை நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் குறித்த சிறுவன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தர்காநகரைச் சேர்ந்த 9 வயது சிறுவனே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அளுத்கம புகையிரத நிலையத்திலிருந்து மேற்படி புகையிரதம் புறப்படத் தயாரான போது, கடவையில் மறுபுறத்தில் இருந்த பெற்றோர், தம்மிடம் வருமாறு சிறுவனை அழைத்துள்ளனர்.

இதனையடுத்து, குறித்த சிறுவன் பெற்றோரிடம் செல்ல முற்பட்டபோது, தண்டவாளத்தில் தவறி வீழ்ந்ததையடுத்து, புகையிரதத்தில் மோதுண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் சடலம் களுத்துறை – நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.