எமது இலங்கைத் திரு நாடு பல இனத்தவர்களும் பல மதத்தவர்களும் வாழுகின்ற ஒரு பல்லின சமூகத்தைக் கொண்ட நாடாகும் பல்வேறு கலாசாரப் பண்புகளைக் கொண்ட சமூகம் பல்பண்பாட்டுச் சமூகமாக கருதப்படுகின்றது
இப் பல்பண்பாட்டுச் சமூகக் காரணிகளில் தம்முடைய வாழ்க்கைக் கோலத்தை கொண்டு செல்லும் மக்கள் தாங்களுக்கிடையே நிலவுகின்ற நல்லுறவிலேயே இத் தேசத்தின் மேம்பாடும் முன்னேற்றமும் தங்கியுள்ளது என்பதைப் புரிந்நு கொள்ள வேண்டும். “ஒன்று பட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கிடின் அனைவருக்கும் தாழ்வே” என்று பாடினார் பாரதியார் ஒரு தேசத்தின் வெற்றிக்கு ஒற்றுமை ஆணிவேராகக் காணப்படுகின்றது. ஒவ்வொரு தனி மனிதனும் ஒற்றுமை எனும் கயிற்றைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டும் இதன் மூலம் குடும்பம் மற்றும் உறவினர்களுக்கிடையில் ஒற்றுமை ஏற்படும் இந்நிலை ஊரில் சமூகத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தும்.
சமூகம் என்பது அனைத்து மக்களின் தொகுதியாகும். எனவே சமூகத்தில் நிலவுகின்ற ஒற்றுமை ஒரு தேசத்தை கட்டியெழுப்பும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. “ஊர் கூடினால் தான் தேர் இழுக்க முடியும்” என்பார்கள். மக்களின் கூட்டுறவுநிலைதான் இனநல்லுறவைச் சீரமைத்து ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கு சீரான பாதையைத் திட்டமிடுகிறது.
பரஸ்பரம் ஒருவருக்கொருவர் அன்பு காட்டுதல், உதவிபுரிதல் மற்றும் விட்டுக்கொடுப்புக்களுடன் வாழப்பழகிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு சமூகத்தினதும் தனித்துவம் மதிக்கப்பட்டு உணர்வுகள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.
வேற்றுமையில் ஒற்றுமை என்பதை தாரகமந்திரமாகக் கொள்வோமானால் வேறுபட்ட இன, மத, மொழிகளுடன் ஒற்றுமையைப் பேணி வளமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கலாம்.
ஒன்றுபட்டுச் செயல்பட்டால்தான் அனைவரும் அழகாக வாழலாம் என்பதனை வலியுறுத்துவது போல பாகவதத்தில் பின்வரும் கதை இடம்பெற்றுள்ளது.
ஒருமுறை தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த பின்னர் விருந்துபசாரம் நடைபெற்றது. அப்போது கையினை மடக்காது விருந்துண்ண வேண்டும் என்று திருமால் நிபந்தனை விதித்தார். இதனை ஏற்காத அசுரர்கள் இது எப்படி முடியும் கையை மடக்காது யாராலும் உண்ண முடியாது இது வேண்டுமென்றே பழிவாங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட நிபந்தனை இதனை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று விருந்துண்ணாமல் சென்று விட்டனர். ஆனால் தேவர்கள் இதனை ஏற்றுக்கொண்டனர். எதிர் எதிர் இலைகளில் அமர்ந்து உணவைப் பிசைந்து தங்களுக்கு எதிரில் உள்ளவர் வாயில் கையை மடக்காது ஊட்டி விட்டனர்.
ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டதனால் விருந்துண்டனர்கள் தேவர்கள். இந்தத் தேவருள்ளம் தான் இன்றைய தேவையாக இருக்கின்றது. சகலருக்கும் உதவும் மனமும் சகலரையும் மதிக்கும் குணமும் தலை தூக்கினால் போதும் எங்கள் தேசம் தலைநிமிர்ந்து வாழும்.
மனித குலத்துக்கு வழி காட்ட வந்த அத்தனை மதங்களுக்கும் ஒற்றுமை, சாந்தி, சமதானம், விட்டுக்கொடுப்பு, மன்னிப்பு இவற்றைத் தான் வலியுறுத்துகின்றன.
இன நல்லிக்கணம் என்பது மிகவும் வலிமையானது. இதனை சின்னச் சின்ன தனிநபர்களின் சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக சிதறச்செய்துவிடாமல் காப்போம். தனிநபர்களின் அகந்தை ஆணவம் பதவி ஆகியவற்றை விட சமுதாய நல்லிணக்கமே இன்றியமையாதது என்பதை உணர்வோம். வளமான சுபீட்சமான ஆரோக்கியமான இலங்கைத் தேசத்தைக் கட்டியெழுப்ப ஒன்றுபடுவோம்.
மக்கொனையூராள்
Tags: Farhana Abdullah