புரியாத புதிர்

வாழ்க்கை என்பது எப்படியோ வாழமுடியும் என்பது அல்ல. இப்படித்தான் வாழவேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் காலையில் விழித்ததிலிருந்து இரவு தூங்கும் வரை வாழ்க்கை எதற்கு? எப்படி வாழவேண்டும்? எப்படி வாழ்கின்றோம்? என்று அறியாமல் காலத்தை கழிக்கின்றோமே அதை விட ஒரு துரதிருஷ்டம் இருக்க முடியுமா!

ஆக வாழ்க்கையை வாழும் போதே முழுமையான கவனத்துடன் நமது வாழ்க்கையை துவங்க வேண்டும்.

எமது வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும், ஏன் ஒவ்வொரு நிமிடத்தையும், நாம் எப்படி கழிக்கப்போகிறோம், என்ற சிந்தனை எம் உள்ளத்தில் ஆழப்பதிந்திருக்க வேண்டும். அதுவே எம்மை சரிப்படுத்தும்.

காலம் முழுவதுமாக சம்பாதிப்பதில் குடும்பத்தின் நெருக்கத்தை இழந்து விட்டோம். ஓய்வெடுக்கலாம் என்று எண்ணுகிற போதே நாம் இருப்பதில்லை. வேறு சிலர் மனோ இச்சைக்கு அடிமைப்பட்டு அதற்காக பல விடயங்களில் ஈடுபட்டு அம் முயற்சிகளில் தோல்வியுற்று வாழ்க்கையைத் தொலைத்தவர்களும் எம்மில் இல்லாமலில்லை.

சற்று வாழ்வின் யதார்த்தத்தை நினைத்துப் பாருங்கள், எத்தனையோ கோடி மக்கள் வாழ்ந்து மரணித்திருக்கிறார்கள் அவர்கள் வாழ்வின் யதார்த்தத்தை புரிந்து, உணர்ந்து, வாழ்க்கையை ஆனந்தமாக அனுபவித்து, நிம்மதியாக கண் மூடி போனவர்கள் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஏன்? அவ்வளவு பெரிய ஒரு விடயமா! இல்லை இன்ப துன்பங்களை அறிந்து, வாழ்க்கையை சமநிலையாக புரிந்து ஒவ்வொன்றுக்கும் உரிய கடமையை சரியாக நிறைவேற்றினார்கள். அதாவது சமூக உறவு, தொழில், குடும்பத்தின் நெருக்கம், குழந்தைகளின் அன்பு மொத்ததில் அனைத்தையும் புரிதலுடன் சமநிலையாக அணுகினார்கள்.

ஆனால் நம்மில் பலர் நிம்மதியாக ஒரு நாள் கூட இருக்கமுடியாமல் இருப்பது ஏன்? வாழ்க்கைக்கலை பற்றிய சரியான புரிதல் இல்லாமல் மேற்கத்தையே சிந்தனைக்கு அப்படியே மாறிவிட்டமையே.

ஒரு இயந்திரம் போல் எமது வாழ்க்கையை பழக்கப்படுத்தியுள்ளோம் சமூக தேவைகளை மறந்து, குடும்ப பாசத்தை இழந்து உயிரற்ற சடம் போல் வாழ்கிறோம். அதுமட்டுமா வாழ்க்கையை இப்படி தான் வாழ வேண்டும் என்ற புரிதல் இல்லாமல் துன்பங்களைச் சந்திக்கும் போது துவண்டு போய் வாழ்க்கையை தொலைக்கிறார்கள்.

ஆனால் தோல்விகளிலும் – வெற்றிகளிலும் கலந்த முழுமையான வாழ்க்கையில் தன்னிறைவு காணும் போது தான் சமநிலையான வாழ்க்கையை உணர்ந்து சாதனைமிக்க வாழ்க்கையை ஏற்படுத்திக்கொள்ளலாம் என்ற உண்மையை மறந்து விட்டோம்.

மாணவர்கள் தேர்வுகளில் தோல்வி, குடும்ப வாழ்க்கையில் சிக்கல், குழந்தைகளின் தொல்லை இவ்வாறு பல விடயங்களினால் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள் அதிகம். ஆனால் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கை என்பது ஒரே மாதிரியான அச்சு அல்ல. அனைத்தும் ஆசைப்பட்டது போல் உடனே நடக்கும் என்பதும் அல்ல, வாழ்க்கை இன்பலோக பயணமும் அல்ல.

எனவே வாழ்க்கை என்பது புரியாத புதிர் அதை முறையாக புரிந்து நாம் தான் வாழ்க்கையை சமநிலைப்படுத்தி சிறப்பாக அமைத்துக்கொள்ளவேண்டும்.

இன்னும் சிலர் தம் வாழ்க்கையை புரியாத புதிர் என எண்ணி இலக்கற்று தம் வாழ்நாளை நஷ்டப்படுத்துகிறார்கள். அதிலும் குறிப்பாக இளைஞர்கள் இன்று இலட்சியவான், யதார்த்தவான் என்பதை தாண்டி கற்பனை உலகில் சஞ்சரிப்பதும் கவலைக்குரிய விடயமே!

காலங்கள் ஒவ்வொரு நாளையும் எமக்கு புத்துணர்வுடன் புதுக்கலையாய் இவ்வாழ்க்கை கலையை பரிசளிக்கிறது. என்றாலும் அதை ஏற்கும் மனோநிலை மானிடர்களிடம் அருகிவருவதும் காணத்தக்க விடயமாகும். விடயதானங்களுக்கான முன்னுரிமை வழங்கல் என்ற கோட்பாடும் இன்று மனிதர்களுக்கு மத்தியில் உயிரிழந்து காணப்படுகிறது!

இப்படியான நீண்ட பட்டியலில் ஒரு சில விடயதானங்களை விழிப்பூட்டிய தருணமாய்,இவ்வாழ்வு ஒரு புரியாத புதிர்.

இந்த புதிர், காலத்திற்கும் சூழ்நிலைக்கும் தன்னை மாற்றி கொள்ளும், புதுப்பித்து கொள்ளும். இப்புதிரை புரிய புரிந்துணர்வும், அவதானமும், அழகான அனுபவ உரைகளும், ஆழமான சிந்தனைகளும், தூரநோக்கும் அவசியம் என கூறி முற்றுகையிடுகிறேன்.

Faslan Hashim

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *