எழுத்துக்களுடன் என் பேச்சு

குனிந்த படியே புத்தகமொன்றை
மடியில் வைத்து
வாசித்துக் கொண்டிருந்தேன்.
பிடரியில் சிறு
வலியொன்று உண்டானது.
பிடரியை தடவிய படியே
மெதுவாய்
என் நாற்காலியில்
சாய்ந்து கொண்டேன்.
என்னை அறியாமல்
ஒரு அசந்த தூக்கம்

சில நேரங்களில் பின்னர்
ஒரு அறியப்படாத குரல்
இலேசாக என் செவிகளை எட்டியது.

ஏ மனிதா!
என்னைப் பார் என்றது.

சுற்றும் முற்றும் திரும்பினேன்
யாரும் இல்லை

மீண்டும் அதே குரல்

அங்கே ஏன் பார்க்கிறாய்
சற்று கீழே குனிந்து பார் என்றது.

என்ன அற்புதம்!
எழுத்துக்கள் எழுந்து பேசலாயிற்று.

என்னை உன் கையில்
வைத்துக் கொண்டு
ஏன் வேறு வேலை செய்கிறாய்,
நான் உன் கண்களுக்கு
புலப்படவில்லயா என்று கேட்டது.
திகைப்பில் மௌனம் சாய்த்தேன்.

வாய் திறந்து பேசு என்றது,
பேச ஆரம்பித்தேன்
“அது ஒன்றுமில்லை
உன்னை படித்துக் கொண்டிருந்த
வேளையில் – என்
பிடரி சற்று வலித்தது
அதனால் தான்
சாய்ந்து கொண்டேன்”, என்றேன்.

உனக்கு தெரியாத அற்புதங்கள்
என்னில் பொதிந்துள்ளது
நீ இன்னும் அதனை
உணரவில்லயே என்று
என்னை பார்த்து கேட்டது.
என்ன அப்படிப் பெரிய உன்
பொக்கிஷம் என்றேன்.
அவ்வளவும் தான் கேட்டேன்
எழுத்துக்கள் யாவும்
சிவந்து போயின.

“என் எழுத்துக்கள்
ஒவ்வொன்றும் உன்
வாழ்க்கைக்கான விடை .
நீ அதனை உற்று நோக்கி
உணர்ந்து பார்
நீ நினைக்காத ஒரு இடம்
உனக்கு கிடைக்கும்.

என் ஒவ்வொரு எழுத்தையும்
உன் விழிப்பார்வை கொண்டு பார்-
அதில் ஒரு மெய் உலகம் தெரியும்.
உன் செவிகளால்
நீ மொழிவதைக் கேள்- அதில்
என் தத்துவ பேச்சுக்கள் கேட்கும்.
நாட்டுக்கு அடங்காத
பெருங் கொம்பனையும்
மனதால் மாற்றி மனிதனாக்கும்
வலிமை கொண்டது
என் எழுத்துக்கள்.

கொலைகாரன், வழிப்பரிக்கள்வன், முரடன், நிர்க்கதி இழைக்கப்பட்டோன்,
காதல் தோல்வி உற்றோன்
என எத்தனையோ பேர்
என் மதிமயங்கி
என் காலடியில் கிடந்தனர்.

பேராசிரியர்களை உருவாக்கியுள்ளேன்,
பெரும் நோய்களை குணப்படுத்தும் வைத்தியர்களை உருவாக்கியுள்ளேன்.
என்னுடன் பேசிப் பிணைவோருக்கு
துரோகம் இழைக்க நான் ஒன்றும்
உன்னைப் போல மனித இனமல்ல.
என் அன்பிற்கு அடிமையானோர்
இந்த உலகில் பலர் உள்ளனர்.

இன்று உன்னால் முடியாது
என கூற தோன்றினால்
நாளை “முடியும்” என்று
சொல்ல வைக்கக் கூடியவன் நான்.

உன் பேச்சில் என்னைப் பற்றி
உனக்கு ஒன்றும் தெரியாது என்றே
எனக்கு உதிக்கின்றது.

“என்னைத் தலை குனிந்து பார்
உன்னை தலை நிமிர வைப்பேன்.”

அது ஒரு நீண்ட நேர உரையாடல்
கேட்டுக் கொண்டே இருந்தேன்.
திடீர் என ஒரு நோ
என் காலில் உண்டானது
அதோ ஒரு நுளம்பு பறக்கிறது.
அது என்னவோ ஒரு கனவு தான்
ஆனால் எழுத்துக்களுடன் பேசியதில்
தைரியக்கோட்டை ஒன்று என் மனதில் கட்டியெழுப்பியது.

AL. Rifnas
Tags: