யுத்த சத்தம்

உக்ரைன் மண்மீது அக்கிரமம் நடக்கிறது
வக்கிரம் நிறைந்த தலைமைகளால்
தீக்கிரையாகின்றது உயிரெல்லாம்

குருதிப் பெருவெள்ளம்
அருந்திப் பார்த்திட ஆசையோ
வருந்தியழுவீர் ஒரு நாள்
திருந்திட முனைவீரே அதற்கு முன்னால்

அமைதி குலைப்பதில்
அப்படியென்ன திருப்தி
சமாதிகள் பெருக்கி
மகிழ்வதற்கா உயர் பதவி

புட்டினின் நோக்கமெல்லாம்
பட்டினிச் சாவா
விட்டினிப் போய்விடு
பொல்லாத போரே

சுடுகாட்டினைப் போல் மாற்றாதே ஒரு நாட்டை
உயிரெல்லாம் மடிந்து உருக்குலைந்து சிதைந்து
குண்டடிபட்டு நிம்மதி கெட்டு
கட்டிடமெல்லாம் இடிபட்டுடைந்து
அழிந்து போக விடலாமோ ஒரு தேசம்
எங்கே சென்று ஒழிந்தது மனிதநேசம்

மண்மீது போர் மேகம்
கண்ணீரைப் பொழிகிறதே

பேச்சுவார்த்தை முடிவதற்குள்
பல மூச்சுகளுக்கு அங்கே முடிவுரையோ

இந்த உலகில் வேண்டாம்
இனிக் கலகங்களே
சிந்தும் உதிரம் நிறுத்தக் கேட்டு
பிரார்த்தனை புரிவீர்களே

மக்கொனையூராள்

Tags: