சர்வதேச மகளிர் தினத்தில் கொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி

சர்வதேச மகளிர் தினம் கடந்த மார்ச் 08ம் திகதி அனுஷ்டிக்கப்பட்டது. அன்றைய தினத்தில் ஏற்பாடு செய்யப்படும் விழாக்கள், வைபவங்களில் பெண்களின் உரிமைகள், சமூக ரீதியில் அவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட அனேக விடயங்கள் அதிகமாக பேசப்படும்.

அவ்வாறு மகளிர் தினம் அனுஷ்டிக்கப்படும் சந்தர்ப்பத்தில் இளம் பருவத்தில் காலடி எடுத்து வைத்திருந்த பதுளை மாவட்டத்தின் ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, உடுவர தோட்டத்தின் கீழ் பிரிவில் வசிக்கும் இளம் யுவதி ஒருவர் கோடரியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர் 18 வயதையுடைய தர்மராஜா லிதியா என்ற மாணவியாகும். தெமோதர, ஏழாம் கட்டை, உடுவர தோட்டத்தின் கீழ் பிரிவில் உள்ள லைன் வீட்டுத் தொகுதியில் வசித்த லிதியா, ஹாலிஎலவில் 12ம் தரத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்துள்ளார். இம்மாணவி சர்வதேச மகளிர் தினத்தன்றே கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார். லிதியாவை படுகொலை செய்த கொலையாளி அவளது வீட்டுக்கு இரண்டு வீடுகளுக்கு அப்பால் அமைந்துள்ள வீட்டில் வசிக்கும் 32 வயதுடைய ராமைய்யா திவாகரன் என்பவனாகும். இச்சந்தேக நபர் லிதியாவைக் காதலிக்க முயற்சித்த போதும் அதற்கு லிதியாவும், அவளது குடும்பத்தினரும் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். காரணம் லிதியா பாடசாலை மாணவி என்பதாலாகும்.

லிதியாவின் தாய் முத்துராஜ் மலராகும். தந்தை 56 வயதுடைய கருப்பைய்யா தர்மராஜா என்பராகும். அவர்கள் இருவரும் உடுவர தோட்டத்தின் தேயிலை தோட்டம் ஒன்றில் தொழிலாளர்களாக பணியாற்றி வருபவர்களாகும். லிதியாவுக்கு மூத்த சகோதரர் ஒருவரும் உள்ளார். அவர் பதுளை நகரில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் பணியாற்றி வருகிறார். லிதியா படிப்பில் மிகுந்த ஆர்வம் காட்டுபவராகும். அத்துடன் லிதியா தனது பாடசாலையில் மகளிர் மாணவர் கே​ேடட் குழுவினைப் பிரதிநிதித்துவப் படுத்தினார். 12ம் தரத்தில் கற்றுக் கொண்டிருந்த லிதியா அடுத்த வருடம் உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கும் ஆயத்தமாக இருந்துள்ளார். அவளது ஒரே எதிர்பார்ப்பாக இருந்தது உயர் தரத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் செல்வதாகும். பாடசாலை மாணவியாக இருந்த போதிலும் லிதியா அழகிய தோற்றத்தைக் யுவதியாகும்

உயர் கல்வியைத் தொடராத ராமைய்யா திவாகரன் 32 வயதுடைய இளைஞராகும். லிதியாவின் வீட்டுக்கு இரண்டு வீடுகளுக்கு அப்பால் அமைந்துள்ள வீட்டில் வசிக்கும் திவாகரன், ஹாலிஎல 7ம் கட்டையில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். அவனது பெற்றோரும் தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களாகும். அத்துடன் திவாகரனுக்கு இளம் சகோதரர் ஒருவருமுள்ளார்.

அழகிய தோற்றத்தைக் கொண்ட லிதியாவைக் காணும் போதெல்லாம் லிதியாவை எப்படியாவது காதலிக்க வேண்டும் என்பதே திவாகரனின் எண்ணம். இதற்காக கடந்த ஒரு வருட காலமாக இருந்தே திவாகரன் எடுக்காத முயற்சிகளே இல்லை. இருவருக்குமிடையிலான 15 வருட வயது வித்தியாசத்தை திவாகரன் நினைத்துப் பார்க்கவில்லை. எனினும் லிதியா சாதகமாக பதில் அளிக்கவில்லை. லிதியா திவாகரனுக்கு எவ்வித விருப்பத்தையும் காட்டவில்லை.

திவாகரன் தன்னைக் காதலிக்குமாறு கட்டாயப்படுத்துவதாக ஒருநாள் லிதியா பெற்றோரிடம் முறையிட்டுள்ளார்.

“அம்மா…. என்னால் திவாகரனிடமிருந்து தப்ப முடியாதுள்ளது. நான் போகும் எல்லா இடத்திற்கும் என் பின்னாலேயே வருகிறான்…. எனக்கு வெட்கமாக உள்ளது…. சில நாட்களில் பாடசாலைக்கும் வருகின்றான்…”

அதனையடுத்து லிதியாவின் பெற்றோரும் திவாகரனுக்கு கடும் எதிர்ப்பைக் காட்டினார். முக்கியமாக லிதியா இன்னமும் கல்வி கற்கும் பிள்ளையாக இருப்பதால் அந்த எதிர்ப்பு மென்மேலும் தீவிரமடைந்தது.

2021 ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாள் லிதியாவின் பெற்றோருக்கும் திவாகரனுக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டிருந்தது. அது திவாகரன் லிதியாவின் பின்னால் சென்றதன் விளைவாகவாகும். அன்றைய தினம் திவாகரன் லிதியாவின் தந்தைக்கும், சகோதரனுக்கும் கத்தியால் குத்தியிருந்தான். இது தொடர்பில் ஹாலிஎல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டது. அந்த முறைப்பாடு தொடர்பில் ஹாலிஎல பொலிஸாரால் பதுளை நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்து வழக்கு விசாரணைகளும் இடம்பெற்றன.

அந்த வழக்கு விசாரணைகளுக்குப் பின்னர் ஹாலிஎல இணக்க சபைக்கு அவ்வழக்கு மாற்றப்பட்டு இணக்க சபையால் இரு தரப்பாரையும் சமாதானப் படுத்தி 50 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டை லிதியாவின் தந்தைக்கும் சகோதரனுக்கும் செலுத்துவதற்கும் திவாகரனுக்கு உத்தரவிடப்பட்டது. அப்பணத்தை இரு தவணைகளாக வழங்கவும் உத்தரவிடப்பட்டது. அதன் முதலாவது தவணைப் பணம் மார்ச் 13ம் திகதி ஞாயிற்றுக் கிழமை செலுத்தப்பட வேண்டியிருந்தது

இதற்கிடையே லிதியா பாடசாலை நண்பர் ஒருவரைக் காதலிப்பதாக திவாகரன் சந்தேகம் கொண்டான். அந்த காதல் தொடர்பே திவாகரனுக்கு லிதியாவைக் காதலிக்க பெரும் தடையாக இருப்பதாக அவன் நினைத்தான்.

அது கடந்த 8ம் திகதி அதிகாலை 6.30 மணியளவில் லிதியா வீட்டிலிருந்து புறப்பட்டது வீட்டிலிருந்து ஆறு கிலோ மீற்றர் தொலைவில் ஹாலிஎல நகர மத்தியில் அமைந்துள்ள பாடசாலைக்குச் செல்வதற்காகும். பகல் 1.30 மணியளவில் பாடசாலை முடிவடைந்து லிதியா பதுளை – பண்டாரவளை பஸ்ஸில் ஏறினார். லிதியா வழமை போன்று பஸ்ஸிலிருந்து உடுவர தோட்டத்தின், ஏழாம் கட்டை பஸ் தரிப்பிடத்தில் இறங்கினார்.

பின்னர் லிதியா தனது வீட்டை நோக்கிச் செல்வதற்காக இருக்கும் தோட்ட வீதியான வலஸ்பெத்த வீதியில் கால்நடையாக நடக்க ஆரம்பித்தார். பஸ்ஸிலிருந்து இறங்கி வீட்டுக்கு சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரம் நடக்க வேண்டும். அன்றைய தினம் துரதிர்ஷ்டவசமாக அவ்வீதியில் லிதியா மாத்திரமே நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். வீதியின் இரு புறத்திலும் தேயிலைச் செடிகளால் நிறைந்த தேயிலைத் தோட்டம் உள்ளது. லிதியா 400 மீற்றர் தூரம் மாத்திரமே பயணிக்க வேண்டும்.

லிதியாவைக் கொல்வதற்கு கொலையாளி வீதியில் காத்துக் கொண்டிருந்துள்ளான். தேயிலைச் செடிகளுக்குள் மறைந்திருந்த கொலையாளி வேறு யாருமில்லை, திவாகரன்தான். அவன் லிதியா எதிர்பார்க்காதவாறு திடீரென கையில் கோடரி ஒன்றுடன் லிதியாவின் முன்னால் பாய்ந்துள்ளான். அந்நேரம் இருவருக்குமிடையில் வாய்த்தர்க்கமும் ஏற்பட்டுள்ளது. அந்த வாய்த்தர்க்கம் முற்றிப் போனதைத் தொடர்ந்து திவாகரன் கையிலிருந்த கூரிய ஆயுதத்தினால் லிதியாவின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளான். பாடசாலைச் சீருடையில் இருந்த லிதியா சிறு வயது முதல் தான் சென்று பழகிய வீதியில் இரத்த வெள்ளத்தில் வீழ்ந்தார். இருவருக்குமிடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கத்தின் போது லிதியாவின் புத்தகப் பையும் வீதியில் வீழ்ந்துள்ளது. லிதியாவின் கழுத்திலும் தலையிலும் கடுமையாகத் தாக்கிய கொலையாளி கொலைக்குப் பயன்படுத்திய கூரிய ஆயுதத்தை தேயிலைத் தோட்டத்தினுள் வீசிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளான்.

மாலை 2.30 மணியளவில் உடுவர தோட்டத்தின் 13ம் இலக்க லயத்தின் கங்காணியான வேலு பெரியசாமி என்பவர் அவ்விடத்தால் பகல் உணவுக்காகச் சென்று கொண்டிருந்துள்ளார். அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இரத்த வெள்ளத்தில் மிதந்த லதியாவுக்கு அருகில் சென்ற பெரியசாமியால் அது லதியா என்பதை இனங்கண்டு கொள்வதற்கு நீண்ட நேரம் எடுக்கவில்லை. அந்தளவுக்கு லிதியா உடுவர தோட்டத்தில் அனைவர் மனதிலும் நன்மதிப்பை பெற்றிருந்த பாடசாலை மாணவியாக பிரபலமாகியிருந்தாள்.

“ஐயோ கடவுளே….. இது கருப்பையாவின் மகளாச்சே…..” அவரின் வாயிலிருந்து வந்தது இந்த வாத்தைகள் மாத்திரமே. பெரியசாமி உடனே லிதியாவின் மரணத்தைப் பற்றி லிதியாவின் தந்தை கருப்பையாவுடன் வேலை செய்யும் கருப்பையாவின் நண்பரிடத்தில் கூறியுள்ளார்.

உடுவர தோட்டத்தின் கீழ் பிரிவு வீதியில் பாடசாலை மாணவியான லிதியா, பாடசாலை சீருடையுடனேயே படுகொலை செய்யப்பட்டுள்ள விடயம் காட்டுத் தீ போல ஒரு நிமிடத்திலேயே ஊர் முழுதும் பரவியது. ஒரு சில நிமிடங்களுக்குள் லிதியாவின் சடலம் காணப்பட்ட இடத்தில் உடுவர தோட்டத்து மக்கள் மாத்திரமின்றி, பக்கத்துக் கிராமங்களையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்று கூடி “ஐயையோ…..” என கத்தினர்.

இதற்குள் 119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக ஹாலிஎல பொலிஸ் நிலையத்திற்கு லிதியாவின் படுகொலை தொடர்பான செய்தி கிடைத்தது. அந்த தகவல் கிடைத்த உடனேயே ஹாலிஎல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் றுவன் குணதிலகவின் வழிநடாத்தலில் பொலிஸ் நிலைய குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி டப்ளிவ். எம். தயானந்த தலைமையிலான பொலிஸ் குழுவினர் அவ்விடத்திற்கு விரைந்து விசாரணைகளை ஆரம்பித்தனர். ஹாலிஎல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் றுவன் குணதிலகவினால் பதுளை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வெதமுல்லவுக்கும் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டு அவரது ஆலோசனையின் பிரகாரம் கொலையாளியைத் தேடிக் கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட அதேநேரம், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரினால் லிதியாவின் கொலை தொடர்பான விசாரணைகளுக்காக சொகோ அதிகாரிகள் உள்ளிட்ட விசாரணைக் குழுக்கள் சிலவற்றையும் ஈடுபடுத்துவதற்கான உத்தரவு வழங்கப்பட்டது. லிதியாவின் கொலை திவாகரனினால் மேற்கொள்ளப்பட்டுள்ள விடயம் பொலிஸாரினால் ஊர்ஜிதப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவன் தலைமறைவாகியிருந்த இடத்தைத் தேடி பொலிஸ் குழுக்கள் விரிவான நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.

இதனிடையே படுகொலைச் சம்பவம் இடம்பெற்ற மறுநாள் அதாவது 9ம் திகதி காலையில் கொலையாளி பதுளை – கொழும்பு புகையிரத வீதியில் நடந்து சென்று கொண்டிருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அவனைக் கைது செய்வதற்கு பொலிஸ் குழு ஒன்று ஆயத்தமான அதேவேளை ஹாலிஎல பொலிஸ் நிலையத்திற்கு வந்துள்ள லிதியாவைக் கொலை செய்த கொலையாளி தன்னால் இனி தப்பிக் கொள்ள முடியாது என்பதைப் புரிந்து கொண்டு பொலிசாரிடம் சரணடைந்தான்.

“நான் தண்டவாளத்தில் தலையை வைக்க ஆயத்தமானேன் சேர்….. எனினும் பொலிஸில் சென்று சரணடைவோம் என பின்னர் யோசித்தேன்….” என அவன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளான்.

லிதியாவைக் கொலை செய்த கொலையாளி பொலிஸாரிடம் சரணடைந்த போதே அவன் பொலிஸாரிடம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளான். ஹாலிஎல பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட திவாகரனிடம் பொலிஸார் தொடர்ச்சியாக விசாரணைகளை மேற்கொண்டனர்.

“சேர்…. நான் அவளை ஒருதலைப்பட்சமாகக் காதலித்தேன்…. இதனை அவளிடம் பல தடவைகள் தெரியப்படுத்தி காதலை ஏற்றுக் கொள்ளுமாறு கூறினேன்….. எனினும் லிதியா விருப்பம் தெரிவிக்கவில்லை….. அவள் என்னை விரும்பாததால் நான் கடந்த காலங்களில் பைத்தியம் பிடித்தவனைப் போல இருந்தேன் சேர்…. அவள் எனக்கு கிடைக்காமல் போவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை…. அதுனால்தான் சேர் இது நடந்தது….”

லிதியாவின் கொலையுடன் தொடர்புடைய திவாகரன் கைது செய்யப்பட்ட தினமே அவனை பதுளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு ஹாலிஎல பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டனர். இவ்வாறு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தும் வரை இம்மாதம் 18ம் திகதி வரைக்கும் விளக்க மறியலில் வைக்குமாறு பதுளை பதில் நீதவான் சட்டத்தரணி ரொனாலி அபேவிக்ரமவினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

தனது எதிர்காலத்தை வெற்றி கொள்வதற்கான முயற்சியில் கல்வியைக் கடுமையாக கற்றுக் கொண்டிருந்த லிதியாவின் விதிப் பயணம் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் தினத்தில் மிகவும் சோகமான முறையில் முடிவடைந்திருக்கின்றது. மனித சமூகத்தில் இவ்வாறான பாவிகளின் காரணமாக இளம் பராயத்தினருக்கு ஏற்படும் பரிதாபகரமான முடிவு மிகவும் துயர் மிக்கதாகும். எனவே சமூகத்தில் மேலும் இவ்வாறான குற்றங்கள் தொடர்பான செய்திகளைக் கேட்பதற்கோ அல்லது பார்ப்பதற்கோ இடம் வாய்க்காத வகையில் இவ்வாறான பாவிகளுக்கு சட்டத்தினால் வழங்கப்படக் கூடிய அதிகூடிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.

இது தொடர்பில் பதுளை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வெதமுல்லகேவின் ஆலோசனையின் பிரகாரம் ஹாலிஎல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் றுவன் குணதிலகவின் வழிநடாத்தலில், ஹாலிஎல பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி டப்ளிவ். எம். தயானந்த தலைமையில் பொலிஸ் சார்ஜன்ட்களான ஜயசிங்க (1477), ரத்னபால (19803), ஜயபிரகாஷ் (59200), கஷீர் (54262), பொலிஸ் கான்ஸ்டபில்களான எதிரிசிங்க (40922), ஏகநாயக்கா (74708) மற்றும் ராஜபக்‌ஷ (78779) ஆகியோர் கொண்ட குழுவினரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.