பசியும் பட்டினியும்

வேலை தேடிப் போக முடியல்லயே…
என் குடிசையில்
நெடுநாள் அடுப்பு எரியல்லயே…

எரியாத அடுப்பு கண்டு
என் நெஞ்சு எரிகிறதே
அழுகின்ற பிள்ளைக்கு
ஆகாரம் தேடி யலைகிறதே…

பட்டினி கிடந்த வயிறெல்லாம்
பசியில் கொதிக்குதே
தட்டினில் உணவில்லா நிலை கண்டு
கண்ணீரும் வழியுதே…

பிள்ளை பசி தீர்க்க முடியா துன்பம்
தந்தையொருவரின் உயிரைப் பறித்ததே…
ஏழ்மையின் வாசலில்
வெறுமை மிகக் கொடுமையானதே…

தண்ணீர்க் குவளையில்
கண்ணீர் துளிகள் சேருதே…
மிடிமையின் பிடியில்
உடைமை பசியென்றானதே…

பசியும் பட்டினியும்
ஏழ்மையின் சொத்தென்றானதோ
கசியும் விழிநீரில்
காயம் பலவும் நிழலாடுதோ…

நீளும் வரிசைகள் எல்லாம்
பசியைத் தீர்க்குமா…
ஆளும் வரிசைகள்
எம்மைத் திரும்பிப் பார்க்குமா…

வாக்குகள் வாங்கிய
தலைமைகள் அறியுமோ…
வாய்க்குழி காய்ந்து போன
சம்பவம் தெரியுமா…

யாசகம் கேட்டிட
நாட்டமும் இல்லையே…
உழைத்திட வழியொன்று
காட்டுவோர் இல்லையே…

எத்தனை நாள்தான்
தண்ணீர் உணவாகுமோ…
இத்தனை துயரிலும்
கண்ணீர் மட்டுமே உறவாகுமே….

குப்பையில் உணவினை வீசிடும் கூட்டமே…..
இரைப்பையின் இரைச்சல்கள்
உம் செவிகளில் கேட்குமோ…

ஆடம்பர விருந்துகளின்
நோக்கங்கள் என்னவோ..
பசிபட்டினியால் வாடும்
உயிர் துயர் அறிவரோ…

பணக்கார வம்சமே
சிறிது பகிர்ந்தளிக்க வாருங்கள்…
படைத்தவன் பரிவும் உமை
பாதுகாக்கும் உணருங்கள்.

மக்கொனையூராள்
Tags: