சொப்பனமாய் செதுக்கி மஞ்சம் பூசி
கோட்டழகுடன் கண்வெட்டும்
அழகோவியமாய் வலம் வந்த
நங்கை ஆசைக்கனவுகளை
தன்னுள்ளே முடிச்சிட்டு
கூடிநின்றோர் வாழ்த்தும்
களிப்புடன் முகிழ்த்தெழுந்த
வந்தனங்களுடன் வேட்கையில்
பல சொந்தங்கள் சூழ
களைந்த தேனீக்களாய்
சிதறும் எண்ணங்கள் தாங்கியும்
பவ்வியமாய் புன்முகங்காட்டும் பெற்றவர்கள்
கொஞ்சும் மொழி பேசி
தன் உறவாய் உரிமை
எடுத்தவர்களுடன் – அவள்
மனக்கிடங்கில் மாளிகையின் கதவுகள் தானாகத்திறந்து கொள்ளும்
கங்காணிகள் போல் தொடுக்கும்
கணைகளை மனதில் வாங்கியவள்
வெறும் சதைப்பிண்டமாய் கண்டவர்கள்
தன்னில் இருந்து வந்தவளின்
நிலையில் நோக்கவில்லை
காலைக் கதிரவனைக் காணச்செல்ல
இரவும் நீண்டது
அவர்கள் பதில் போல்
இப்படியே வந்து போன தடங்களை
வெளுத்துப்போன கைகளுடன்
தேனீர்க் கோப்பைகளுக்கே தெரியும்
ஈனப்பிறவியாக நீ என்னைக் கண்டாயா
பேரம்பேசும் விலைபண்டமாய்
திரும்பிப் போன கூழாங்கற்களாய்
கால் தட்டிச் செல்லும்
உனக்கென்ன தெரியும்
பழகிப்போன வெறுமை
அது தனிமை
எனக்கொன்றும் புதிதல்ல
தோன்றிப் புதைத்த உணர்வுடன்
பெற்றவர் மற்றவர் முன்னின்றி
புதைத்து விட்டேன்
மாசுமருவற்று பக்குவமாய்
வளர்ந்த சந்தனமரம்
வீணர்களின் கைபட்டால்
என்ன பாடுபடும்
காதில் கேட்காத ஓலங்கள் கொண்டு
முத்துக்கள் கொண்டு கோர்த்த விழிநீர்
எத்தனை நதிகள் கொண்டு
கடலில் சங்கமித்திருக்கும்
சப்னா பஸ்லூன்
Tags: பின்த் பஸ்லூன்