வளம் நிறைந்த
தாய் நாடே
வங்க கடலில் இலக்கின்றி
சிக்கிய கப்பலாய்
தத்தளிக்கின்றாய் -இன்று
இன அரசியலில்
ஈர்க்கப்பட்டு
சிந்திக்காமல் செய்த
செயலால்
உன் தலையேழுத்தே
மாறிவிட்டது தாய் நாடே
விண் முட்டும் விலை வாசி
விக்கித்து நிற்கும் பொதுமக்கள்
பசி மறந்து
தூக்கம் தொலைத்து
கால் கடுக்க
இரவு பகல் பாராமல்
வீதி எங்கும் நீண்டு
செல்கிறது பெற்றோல்
டீசலுக்கான மக்கள் வரிசை
வயது வித்தியாசம் இன்றி
இன மத பேதமின்றி
சொந்த வேலைகளையும்
சுக துக்கங்களையும்
ஒதிக்கிவிட்டு
சொந்த நாட்டுக்காக
எம் சொந்தங்களின்
போராட்டம் தொடர்கின்றது
கலகலப்பான சித்திரை புத்தாண்டு
களை இழந்து போனது
சுற்றுலா பயணிகளின்
சொர்க்க பூமியாக இருந்த நீ
சோகை இழந்து
பொருளாதார வீழ்ச்சி கண்டு
தட்டு தடுமாறுவதை
பார்க்கும் போது
கண்ணோரம் கரிக்கிறது
வேலியே பயிரை
மேய்ந்து விட்டது
உன்னை நாடி வந்தனர்
உல்லாச பயணிகள்
இன்று
உன்னை விட்டு
செல்கின்றனர்
உன் நாட்டு பிரஜைகள்
விடியும் ஒவ்வொரு பொழுதும்
விடிவு கிடைக்காதா
என்ற ஏக்கத்துடன்
விடிகிறது
அந்திமாலை பொழுது
ஏமாற்றத்தோடு முடிகிறது
துக்கம் தொண்டையை
அடைக்கிறது
இரத்தம் கொதிக்கிறது
உன் நிலை கண்டு
ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன
அப்பாவி உயிர்கள்
தியாகம் செய்துள்ளன
நாள் தோறும் பரபரப்பான செய்திகள்
இந்த நிலை மாற வேண்டும்
அதிகாரம் செய்யாத
அரசியல் வேண்டும்
சமத்துவம் பேணும்
தலைவர்கள் வேண்டும்
இனியும் வேண்டாம்
இன அரசியல்
இன மத பேதமின்றி
இணைந்து நின்று
இலங்கை தாய் நாட்டை
ஒளிமயமாக்குவோம்
மாற்றங்கள் மலரட்டும்!
Rushdha Faris
South Eastern university of Sri Lanka.