இலங்கையில் கோட்டா கோ கம மக்கள் எழுச்சியுடன் தொடர்ந்து ஆட்சியாளர்களின் ஊழல் மோசடிகளுக்கு எதிராக மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக மக்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அம் மக்கள் எழுச்சியின் நோக்கம் இலங்கையில் நீதியானதொரு ஆட்சியை உருவாக்குவதாகும்.
இச் சந்தர்ப்பத்தில் நீதியான ஆட்சியை நிலைநாட்ட இஸ்லாம் வழங்கியுள்ள சில வழிகாட்டலை வழங்குவதே இக்கட்டுரையின் நோக்காமாகும்.
இஸ்லாம் என்பது எக்காலத்திற்கும் பொருத்தமான வாழ்க்கைநெறியாகும். சாந்தியையும் சமாதானத்தையும் நிலை நாட்டக்கூடிய ஒரு நடுநிலை மார்க்கமாகவே வள்ளோனவனால் இறக்கியருளப்பட்டது. அந்த வகையில் அனைத்து விடயங்களுக்கும் வழிகாட்டும் இஸ்லாமிய மார்க்கம் ஒரு ஆட்சியாளன் எவ்வாறு இருக்க வேண்டும் அவன் எவ்வாறான பண்புகளையும் குணாம்சங்களை கொண்டிருக்க வேண்டும் என்பதையும் சிறந்த முறையில் எடுத்துக்காட்டியும் சிறந்த முறையில் வழிகாட்டியும் உள்ளது
உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) – நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான். (24:55)
இந்த இறை வசனத்தின் அடிப்படையில் ஒரு ஆட்சியாளன் நற்செயல்கள் (சிறந்த தலைவனாகவும்) புரியக்கூடியவனாகவும் சிறந்த ஒழுக்க சீலனாகவும் இருக்க வேண்டும் என்பது மிக முக்கியமான ஒன்றாக எடுத்துக்காட்டப்படுகிறது.
மேலும் ஒரு ஆட்சியாளன் என்பவன் பதவி மோகம் கொண்டவனாக பணத்தாகம் நிறைந்தவனாக நிச்சயமாக இருத்தல் கூடாது. அப்படியான ஒருவனால் மக்களின் தேவைகளையும் மக்களின் நலன்களையும் புரிந்து கொண்டு மக்கள் திருப்திப்பட ஆட்சியை முன்னெடுக்கமுடியாது. ஒரு இஸ்லாம் மார்க்கம் கூறும் ஆட்சியாளன் பதவியில் தீரா மோகம் நிறைந்தவனாக இருத்தல் கூடாது என்பதற்கு பின்வரும் நபிமொழி எடுத்துக்காட்டாக உள்ளது.
“நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்), ‘அப்துர் ரஹ்மான் இப்னு சமுராவே! ஆட்சிப் பொறுப்பை நீயாக (ஆசைப்பட்டு)க் கேட்காதே! ஏனெனில், (நீ) கேட்டதால் அது உனக்கு அளிக்கப்பட்டால் அதோடு நீ (தனிமையில்) விடப்படுவாய். (இறைவனின் உதவி கிட்டாது.) கேட்காமல் அது உனக்கு அளிக்கப்பட்டால் அது தொடர்பாக உனக்கு (இறைவனின்) உதவி அளிக்கப்படும். நீ ஒரு சத்தியம் செய்து, அது அல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாக நீ கருதினால் உன்னுடைய சத்தியத்(தை முறித்துவிட்டு முறித்த)துக்கான பரிகாரத்தைச் செய்துவிடு. சிறந்தது எதுவோ அதைச் செயல்படுத்து” என்றார்கள்” (புஹாரி : 6622 அப்துர்ரஹ்மான் பின் ஸமுரா (ரலி))
“நான் ஒரு முறை நபி (ஸல்) அவர்களை நோக்கிச் சென்றேன். என்னுடன் (என்) அஷ்அரீ குலத்தைச் சேர்ந்த இருவரும் இருந்தனர். அவர்களில் ஒருவர் என் வலப்பக்கத்திலும் இன்னொருவர் என் இடப்பக்கத்திலும் இருந்தனர். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பல் துலக்கிக் கொண்டிருந்தார்கள். (என்னுடன் வந்த) அவ்விருவரும் (நபி (ஸல்) அவர்களிடம் ஏதேனும் அரசாங்கப் பதவி அளிக்குமாறு) கோரினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘அபூ மூஸாவே’ அல்லது ‘அப்துல்லாஹ் இப்னு கைஸே!’ என்றார்கள். நான், ‘சத்திய (மார்க்க)த்துடன் தங்களை அனுப்பியவன் மீதாணையாக! இவர்கள் இருவரும் தம் மனத்தில் இருந்ததை என்னிடம் தெரிவிக்கவுமில்லை. இவர்கள் பதவி கேட்பார்கள் என்று எனக்குத் தெரியவும் செய்யாது” என்று சொன்னேன். அப்போது நபி (ஸல்) அவர்களின் இதழுக்குக் கீழ் துருத்திக் கொண்டிருந்த பல்துலக்கும் குச்சியினை இப்போதும் கூட நான் பார்ப்பதைப் போன்றுள்ளது. நபி (ஸல்) அவர்கள், ‘பதவியை விரும்புகிறவருக்கு நாம் பதவி ‘கொடுப்பதில்லை’ அல்லது ‘ஒருபோதும் கொடுக்க மாட்டோம்’. எனவே, ‘அபூ மூஸாவே’ அல்லது அப்துல்லாஹ் இப்னு கைஸே’ நீங்கள் யமன் நாட்டிற்கு (ஆளுனராக)ச் செல்லுங்கள்” என்றார்கள். (அவ்வாறே அபூ மூஸா (ரலி) அவர்கள் யமன் நாட்டிற்குச் சென்றார்கள்.)
பிறகு அபூ மூஸா அவர்களைப் பின்தொடர்ந்து முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களை (யமன் நாட்டுக்கு) நபியவர்கள் அனுப்பிவைத்தார்கள். முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் அபூ மூஸா (ரலி) அவர்களிடம் சென்றபோது அவர்களைக் கண்ணியப்படுத்தும் விதமாக) அவர்களுக்கு தலையணை ஒன்றை அபூ மூஸா (ரலி) அவர்கள் எடுத்து வைத்து ‘வாகனத்திலிருந்து இறங்குங்கள் (இதில் அமருங்கள்)” என்றார்கள். அப்போது அபூ மூஸா (ரலி) அவர்களின் அருகில் ஒருவர் கட்டப்பட்டிருப்பதைக் கண்டு, ‘இவர் யார்?’ என்று முஆத் (ரலி) அவர்கள் கேட்டார்கள். அபூ மூஸா (ரலி) அவர்கள் ‘இவர் யூதராயிருந்து இஸ்லாத்தைத் தழுவினார். அதற்குப் பிறகு (இஸ்லாத்தைவிட்டுவெளியேறி) யூதராகிவிட்டார்” என்றார்கள். (மீண்டும் அபூ மூஸா (ரலி) அவர்கள் முஆத் (ரலி) அவர்களிடம்) ‘அமருங்கள்” என்று கூறினார்கள். அதற்கு முஆத் (ரலி) அவர்கள், ‘இல்லை. அல்லாஹ்வுடையவும் அவனுடைய தூதருடையவும் தீர்ப்புப்படி இவருக்கு மரணதண்டனை அளிக்கப்படாத வரை (நான் அமரமாட்டேன்)” என்று மூன்று முறை சொன்னார்கள். எனவே, அவருக்கு மரண தண்டனையளிக்கும் படி (அபூ மூஸா (ரலி) அவர்கள் உத்தரவிட அவ்வாறே அவர் கொல்லப்பட்டார். பிறகு அவர்கள் இருவரும் இரவில் நின்று வணங்குவது குறித்து பேசிக்கொண்டனர். அப்போது அவர்களில் ஒருவர் (முஆத் (ரலி) அவர்கள்) ‘நான் இரவில் சிறிது நேரம்) நின்று வணங்குகிறேன். (சிறிது நேரம்) உறங்குகிறேன். நின்று வணங்குவதற்கு நான் பிரதிபலனை எதிர்பார்ப்பதைப் போன்றே என் உறக்கத்திற்கும் நான் பிரதிபலனை எதிர்பார்க்கிறேன்” என்றார்கள். (புஹாரி : 6923 அபூபுர்தா (ரலி))
.ஒருஆட்சியாளன் தனக்கான பொறுப்பை கடைமையுணர்வோடு நிறைவேற்ற வேண்டும். தன் பொறுப்பு விடயத்தில் அசமத்தனமாக செயற்படக்கூடாது என்பது மிக கட்டாயமான ஒன்று . அதற்கு ஆதாரமாகத்தான் பின்வரும் நபிமொழி காணப்படுகிறது.
“நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். மக்களின் மீது ஆட்சி புரியும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாளியாவான். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவன் விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளியாவாள். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். அடிமை, தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அதை (பாதுகாத்த விதம்) குறித்து விசாரிக்கப்படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” (புஹாரி : 2554 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி))
“(நபித் தோழர்) மஅகில் இப்னு யஸார் (ரலி) அவர்கள் இறப்பதற்கு முன் நோய்வாய்ப்பட்டிருந்த போது அன்னாரை(ச் சந்தித்து) நலம் விசாரிப்பதற்காக (அன்றைய பஸ்ரா நகர ஆட்சியர்) உபைதுல்லாஹ் இப்னு ஸியாத் சென்றார். அவரிடம் மஅகில் (ரலி) அவர்கள் ‘நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட செய்தி ஒன்றை உமக்கு அறிவிக்கிறேன். நபி (ஸல்) அவர்கள், ‘ஓர் அடியானுக்குக் குடிமக்களின் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவன் அவர்களின் நலனைக் காக்கத் தவறினால், சொர்க்கத்தின் வாடையைக் கூட அவன் பெறமாட்டான்’ என்று சொல்ல கேட்டேன்” எனக் கூறினார்கள். (புஹாரி : 7150 மஅகில் பின் யஸார் (ரலி))
ஹராஜ் வரியை அறவிடும் விடயத்தில் உமர் (ரழி) நபி (ஸல்) அவர்களின் நடைமுறைக்கு மாற்றமாக செயற்பட்டார்கள். இதை பலரும் விமர்சித்தனர். ஆனால் உமர்( ரழி) தானாக இந்த தீர்மானத்தை எடுக்காமல் இறை வசனமான ஸுரா ஹஸ்ருடைய 6-10 வரையான வசனங்களை உற்றுநோக்கி ஆராய்ந்த பின்னும் மூத்த ஸஹாபாக்களின் ஆலோசணையின் அடிப்படையிலுமே நபியின் நடைமுறைக்கு மாற்றமான தீர்மானங்களை எடுத்தார்கள்.
இது ஒரு ஆட்சியாளனிடம் இருக்கவேண்டிய மிக முக்கியமான பண்பாகும். அதாவது நிலைமைக்கு பொருத்தமான தீர்மானத்தை எடுக்கும் அறிவும் சிந்தனையும் ஆற்றலும் ஒரு ஆட்சியாளனிடம் இருக்கவேண்டும் என அந்த இறைவசனத்தை வைத்து எடுத்த உமர் (ரழி) யின் தீர்மானம் எடுத்துக்காட்டாக அமைகிறது.
ஒரு ஆட்சியாளன் என்பவன் நீதியை நிலைநாட்டக் கூடியவனாகவும் அநீதிக்கு எந்நாளும் துணை சேராதவனாகவும் இருக்க வேண்டும். அவனது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளின் அவனின் மதத்தை சேர்ந்தவர்கள் வாழ்ந்து அவர்கள் பெரும்பான்மையாயிருப்பினும் மாற்றுமதத்தவர்கள் சிறுபான்மையாயிருப்பினும் அவர்களுக்குரிய உரிமைகளையும் கடமைகளையும் வழங்கி அவர்களை சிறப்பாக நடாத்த வேண்டும். எவ்வகையிலும் அவர்களுக்கோ அவர்களது சமய கலாச்சாரங்களுக்கோ தீங்கிழைப்பது ஒரு சிறந்த ஆட்சியாளனின் பண்பாக அமையாது. அது தான் ஒரு ஆட்சியாளனுக்கு இஸ்லாம் கூறும் சிறந்த அறிவுரைகளில் ஒன்றாக இருக்கின்றது. அந்த வழிகாட்டலைத்தான் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் பலர் கடைபிடித்தும் வந்துள்ளனர். இதற்கு ஆதாரமாக உமர் ( ரழி)யின் பின்வரும் கூற்றை எடுத்துக்கொள்ளமுடியும்.
“அவர்களது தேவாலயங்களில் யாரும் குடியிருக்கக்கூடாது. அவற்றை அழிக்கவும் கூடாது. அவற்றின் எப்பகுதியும் உடைக்கப்படவும் கூடாது ” (அத்தபரி)
பின்வரும் கூற்று உமர் (ரழி) ஆட்சியில் சிறுபான்மையினராக வாழ்ந்த திம்மிக்களைக் (இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வாழும் இஸ்லாமல்லாதவர்கள்) குறிப்பதுடன்அவர்களுக்கான முக்கியத்துவத்தை இஸ்லாமிய கலீபா நல்ல முறையில் வழங்கியுள்ளார் என்பதையும் குறிக்கின்றது.
முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) – பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்(5:8)
ஒரு ஆட்சியாளன் நீதி செலுத்துவதில் உண்மையாளனாகவும் பக்கச்சார்பற்றவனாகவும் செயற்பட வேண்டும். அநீதியின் பால் சாயக்கூடியவனாக இல்லாது சிறந்த நீதியாளனாக ஆட்சி புரிய வேண்டும் எற்பதை மேலே உள்ள இறை வசனம் தெளிவு படுத்துகிறது.
அந்த வகையில் ஒரு ஆட்சியாளனிடம் இருக்க வேண்டிய பண்புகள் நன்நடத்தைகள் பற்றி இஸ்லாமிய மார்க்கம் தெளிவாக விளக்கியுள்ளதை உதாரணத்திற்காய் எடுத்துக்காட்டிய ஒரு சில இறைவசனங்கள் மூலமும் நபிமொழி மூலம் அறியக்கூடியதாக உள்ளது .
அதனடிப்படையில் ஒருஆட்சியாளன் என்பவன் ஒரு மக்கள் நலன் பேணக்கூடியவனாகவும் சிறந்த நாட்டுத்தலைவனாகவும் அவனின் நற்குணாம்சங்களைக்கொண்டு பல நல்ல தலைவர்களை உருவாக்கக்கூடியவனாகவும் செயற்படுவதே ஒரு சிறந்த தலைவனின் அடையாளமாக காணப்படுகிறது.
எனவே இலங்கையிலும் நிலையான அபிவிருத்தி, நீதியை நிலைநாட்ட நற்குணாம்சங்கள் கொண்ட தலைவர்களை நாட்டின் தலைவர்களாக தெரிவு செய்வோம்.
இஷாதா முஹம்மத்
Tags: இஷாதா முஹம்மத்