போராட்டத்துடன் தேசத்தை கட்டியெழுப்புவோம்

தாக்குதல் அரச தரப்பின் சதியா?

நாடாளாவிய ரீதியில் 09,10.05.2022 திகதிகளில் இடம்பெற்றுள்ள தாக்குதல்களில் 103 வீடுகள் உட்பட 08 மரணங்கள் பதிவாகியுள்ளன. (புள்ளிவிபரங்கள் மாறலாம்) இந்நிலையில் இவ்வாறு திங்கட்கிழமை முதல் இடம்பெற்ற தொடர் தாக்குதலுக்கான உடனடிக் காரணம் எதுவென்று அவதானித்தால் அலரி மாளிகையில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரின் ஆதரவாளர்களுக்கு இடையில் இடம்பெற்ற கூட்டத்தை தொடர்ந்து பிரதமரின் ஆதரவாளர்கள் பிரதமருக்கு எதிராக அமைதியான ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட மைனா கோ கம மக்கள் மற்றும் ஜனாதிபதிக்கு எதிராக அமைதியானதும் அறிவியல் ரீதியானதும் ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட கோட்டா கோ கம மக்கள் மீது பைய்யோ அல்லது ஹட நவய லக்ஷா என்ற மஹிந்த ஆதரவாளர்கள் மேற்கொண்ட தாக்குதல்களாகும்.

குறித்த தாக்குதல் பகல் நேரத்தாக்குதலாக இருந்தமையால் குறித்த நேரத்தில் ஆர்ப்பாட்ட களத்தில் குறைந்தளவான மக்களே இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. என்றாலும் குடிபோதையில் மஹிந்த தரப்பினர் இருந்துள்ளமையால் எதிர்தரப்பினால் குறித்த கலகக்காரர்களை அடக்க முடிந்ததுடன் அவர்களை பேரவாவியில் நீராடச் செய்து அவர்கள் பயணித்த வாகனங்களையும் சேதத்திற்கு உட்படுத்தினர்.

எத்தரப்பாக இருந்தாலும் பொதுச் சொத்துக்கள் மற்றும் அரச சொத்துக்கள் மீது சேதம் விளைவிப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.

ஏதோ அரசின் ஊரடங்கு அறிவித்தல் கிடைத்தவுடன் மக்கள் ஊர்களுக்கு சென்று கொண்டிருக்கும் போது முதல் நாள் திங்கட்கிழமை இரவு 11 அடைவதற்கு முன்னர் நாடாளாவிய ரீதியில் 25 கு மேற்பட்ட அரச தரப்புக்கு ஆதரவான பிரபலங்களின் வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. இவை பொதுவாக அரசுக்கு எதிரான தரப்பு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.  ஆனால் ஒரு மாதமாக பொலிஸாரும் கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொள்ள முடியாத வண்ணம் அமைதியான முறையில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் காலி முகத்திடலில் அமைதியாகவும் அறிவியல் ரீதியாகவும் ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட தரப்பு வெறும் 24 – 36 மணித்தியாலத்தில் 103 வீடுகளை தீ வைத்து எரிக்கும் நிலைக்கு மாறியது எவ்வாறு? அதற்குள் அவர்களுக்கு தீவிரவாத சிந்தனையை ஊட்டியது யார் என்பது சந்தேகத்திற்குரிய விடயமாகும்.

நாட்டில் இடம்பெற்றுள்ள ஆர்ப்பாட்டங்களில் பெரும்பாலானவை சட்டதிட்டங்களை மீறும்போது கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொண்டு அகற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தீ பரவலில் யாரும் சிக்கி காயத்திற்கு உள்ளாகவில்லை, சில வீடுகளில் வீட்டுப் பாவனை பொருட்களும் காணப்படவில்லை, அவ்வாறே தீ பரவும் விதம் மற்றும் அதன் வேகத்தை அவதானித்தால் அவை பெற்றோல் ஊற்றி எரித்திருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. பொதுமக்கள் வாகனத்திற்கு பல மணித்தியாலம் காத்திருந்து பெற்றோல் எடுக்கும் காலத்தில், கலூன்களுக்கு பெற்றோல் வழங்காத காலத்தில் நாடாளாவிய ரீதியில் வீடுகளை எரிக்க பெற்றோல் பெற்றுக் கொள்ளப்பட்டது எவ்வாறு எங்கு என்பதையும் தேட வேண்டியுள்ளது.

அலுவலகங்களும் எரிக்கப்பட்டுள்ளன. தற்போது கோட்ட கோ கம  போராட்டத்தில் ஈடுபடுவோர் அரசியல்வாதிகளின் ஊழல், சட்டவிரோத சொத்து சேகரிப்புகள் தொடர்பாக அரசியல்வாதிகளுக்கு எதிராக வழக்குகளை தொடரவுள்ள நிலையில் அவை தொடர்பான  ஆவணங்களை அழிக்க ஆளுந்தரப்பே மேற்கொண்ட சதியாக இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில் கடந்த காலத்திலும் பல வழக்குகளில் போதியளவு சாட்சிகள், ஆவணங்கள் இன்மையால் பல வழக்குகள் த‌ள்ளுபடி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

என்னதான் இருந்தாலும் கடந்த ஒரு மாத காலத்தில் பல சட்டத்தரணிகள் நடந்து கொண்ட விதம் திருப்தியை ஏற்படுத்தும் விதமாக உள்ளது எனவே இது விடயத்திலும் ஆளுந்தரப்பின் சொத்துகள் அழிப்பு தொடர்பிலும் நீதமான தீர்ப்புகள் வெளியாகும் என நம்பிக்கையுள்ளது.

மேலும் குறித்த சம்பவத்திற்கான அடிப்படைக் காரணம் என்னவென்று அவதானித்தால், கோட்டா கோ ஹோம் ஆர்ப்பாட்டமாகும்.  இலங்கையில் குறுகிய காலத்தில் அடிப்படை தேவைகளான எரிபொருள், மின்சாரம், மருந்துப் பொருட்களில் தொடர் இறக்குமதிகள் டொலர் பற்றாக்குறை காரணமாக தடைப்பட்டமையால் மக்கள் எதிர் கொண்ட சிக்கல்கள் அரசுக்கு எதிராக அமைதியானதும்  அறிவியல் ரீதியானதுமான ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ள தூண்டியமை குறிப்பிடத்தக்கது.

வரலாற்று ரீதியாக அவதானிக்கையில் தொடர்ச்சியாக எழுபது ஆண்டுகளாக இனவாத பிரசாரம் மேற்கொண்டு ஆட்சிக்கு வந்து ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு சட்டவிரோதமாக சொத்துக்களை சேகரிக்கும் ஆளும் மற்றும் எதிர்தரப்புகளின் நடவடிக்கைகளே இன்று இவ்வாறு அத்தியவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள வரிசைகளில் நிற்க வேண்டிய நிலையை உருவாக்கியதை உணர்ந்து கொண்ட பொதுமக்களும் இளைஞர்களும் மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டமே கோட்டா கோ ஹோம் ஆர்ப்பாட்டமாகும்.

அரசியல்வாதிகளிடம் எதிர்பார்க்கும் மாற்றம் என்ன?

இந்த கட்டுரையின் நோக்கம் பிரச்சினைகளை தெளிவுபடுத்துவதை விட தீர்வுகளை தேடுவதாகும். இலங்கையின் தற்போது உள்ள பொருளாதார நிலையை அவதானிக்கையில் ஓரிரு நாட்களில் சீரமைக்க கூடியவை அல்ல. தற்போது இலங்கையின் கடன்சுமை 51 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்படுகிறது.

நாம் இலங்கையின் பொருளாதாரத்தை சீரமைக்க முதலாவது அதன் நிர்வாக கட்டமைப்பில் ஊழல் மோசடியில் ஈடுபடாத சட்டவிரோத சொத்துக்கள் சேகரிக்காத நபர்களை ஆட்சியில் அமர்த்த வேண்டும். பொருளாதார மற்றும் ஏனைய விடயங்கள் சீரடைய முதல் முயற்சியாக அடுத்த நொடி முதல் நடக்க இருக்கும் சகல ஊழல், லஞ்சம் என்பவற்றை நிறுத்து வேண்டும். இந்த நாட்டில் உள்ள வீண் செலவினங்களை குறைக்க வேண்டும். இன மத வேறுபாடின்றி நாட்டு மக்களிடம் இலங்கையர் என்ற உணர்வில் இலங்கை நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு உதவிக் கரம் நீட்ட முன் வர வேண்டும். அத்தோடு நாட்டின் விவசாயத்துறையை முன்னேற்ற சகல வழிமுறைகளையும் மேற்கொள்ள வேண்டும். கைத்தொழில் அபிவிருத்தி திட்டத்தின் மூலம் அந்நிய செலாவணி பற்றாக்குறையை தீர்க்க வேண்டும்.

முதற்கட்டமாக நாம் நாடு என்ற ரீதியில் ஆட்சியாளர்களின் தகைமை, குணநலன், பண்பாடு உட்பட ஆட்சியின் குறிக்கோள், நாட்டின் பொருளாதார முறைமை உட்பட அனைத்து துறைகளிலும் சீர் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய நிலைமையில் உள்ளோம்.

இலங்கையில் தனியார் துறையிலும்தான், அரச துறையிலும்தான் சுத்திகரிப்பாளர் முதல் பணிப்பாளர்வரை தொழில்களையும் பதவிகளையும் பெறுவதாக இருந்தால் கல்வித்தகைமை, தொழில்தகைமை என பல்வேறு தகைமைகளை அவதானித்துதான் தொழில்வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. ஆனால் எவ்வித தகுதியும் இன்றி இலங்கையனாக இருந்தால் தற்போது இரட்டை பிராஜவுரிமை இருந்தாலும் தேர்தலில் மனுத்தாக்கல் செய்து தேர்தலில் களமிறங்கி மக்களின் வாக்குகளை மாத்திரம் கொண்டு பிரதேசசபை உறுப்பினர் முதல் அதி உயர் பதவியான ஜனாதிபதிவரை பதவிகளை பெறும் வாய்ப்புள்ளது.

எனவே நாட்டின் பிரதேச சபை மற்றும் பாராளுமன்ற உட்பட ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான குறைந்த பட்ச கல்வித் தகைமையாக உயர்தரப்பரீட்சையில் சித்தியடைந்திருத்தலை உள்ளடக்க வேண்டும்.

மேலும் அமைச்சர்களுக்கான ஓய்வூதியக் கொடுப்பனவு, நியாயமற்ற மேலதிக கொடுப்பனவுகள், வாகன அனுமதி என்பவற்றை இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அரச நிர்வாகிகளுக்கு சலுகைச் சட்டங்களை வழங்காது  நாட்டுச் சட்டத்தின் கீழ் நிர்வகிக்க வேண்டும்.

அத்துடன் பாராளுமன்றம், மாகாண சபை,  உள்ளூராட்சி சபை ஆகியவற்றின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் மேலும் அரச கட்டமைப்பில் உள்ள மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபை ஆகிய இரண்டில் ஏதாவது ஒரு சபையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கையில் அரச வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொள்வதில் அரசியல்வாதிகளின் தலையீடுகள் பாரிய அளவில் செல்வாக்கு செலுத்துகின்றன. மேலும் சில நியமனங்கள் தகைமைகளுக்கு பதிலாக அரசியல் செல்வாக்கிற்கு வழங்கப்படுகிறது.

இவ்வாறு அரசியல்வாதிகள் அரச வேலைவாய்ப்பில் தலையீடு செய்வதை சட்டரீதியாக தடை செய்ய வேண்டும். தகுதிகளுடன் ஆட்சிக்கு வந்தாலும் நீதி நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். இவற்றை எல்லாம் விட பிரதானமானது தான் திருட்டு ,கொள்ளை என்பவற்றில் ஈடுபடாமல் இருப்பது.

ஆளுந்தரப்பு, எதிர்தரப்பு என பாராளுமன்றம் முதல் உள்ளூராட்சி மன்றம் வரை உறுப்பினர்களாகவும் அமைச்சர்களாகவும் பதவி வகித்தவர்களில் பெரும்பாலானோர் சட்டவிரோதமான சொத்து சேகரிப்பு மற்றும் ஊழல் மோசடிகளில் ஈடுப்பட்டுள்ளமை தொடர்பான பல்வேறு அறிக்கைகள் பல்வேறு தரப்பினர்களினால் வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஊழல் மோசடி மற்றும் சட்டவிரோத சொத்து சேகரித்த அனைவரையும் சட்டத்தின் முன் கொண்டுவந்து, அவர்களின் அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சொத்துக்கள், வங்கிகளில் உள்ள வைப்புக்கள், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீடுகள் அனைத்தும் அரசு பறிமுதல் செய்ய வேண்டும்.

பறிமுதல் செய்யப்பட்ட அனைத்தையும் இலங்கையின் பொருளாதாரத்தின் வெளி நாட்டு மற்றும் உள் நாட்டு கடனை அடைக்கவும், பொருளாதார நெருக்கடியை சீரமைக்கவும் பயன்படுத்த முடியும். இலங்கையின் கடன் சுமை சுமார் 51 பில்லியன் அமெரிக்கா டொலராக உள்ளது. ஆனால் கடனில் சிறு பகுதி நாட்டின் அபிவிருத்தி திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் பெரும்பாலான பகுதி அரசியல்வாதிகளின் ஊழல் மற்றும் சட்டவிரோத சொத்துகளாக வெளிநாடு மட்டும் உள்நாட்டில் குறிப்பிட்ட சில நபர்களின் தனிநபர் முதலீடுகளாக காணப்படுகிறது.

எனவே 225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் தீவிர விசாரனைக்கு உட்படுத்தி, அவர்கள் சட்டவிரோதமாக சேகரித்த அனைத்து உடமைகளையும் அரசு பறிமுதல் செய்து, அதனை இலங்கையின் வெளிநாட்டுக் கடன்களை தீர்க்க பயன்படுத்தலாம்.

ஊக்குவிக்கப்பட வேண்டிய விவசாயத்துறை

இலங்கை வெளிநாட்டுக் கடன்பொறியில் சிக்கிக் கொண்டிருப்பது மாத்திரமல்ல தன் நாட்டு விவசாயத்திற்கு பொருத்தமான நிலங்களை கூட உச்ச வினைதிறனில் பயன்படுத்த தெரியாத நிலையில் உள்ளது. அல்லது வெளிநாட்டுக் கடன்களை பெற்று அதன் மூலம் தரகு வருமானம் பெறும் நோக்கில் விவசாயம் நோக்கிய முதலீடுகளை ஊக்குவிக்காமல் சுற்றுலாத்துறை நோக்கி முதலீடுகளை போருக்கு பின்னர் ஊக்குவித்த வண்ணமுள்ளது.

இலங்கை ஓர் இயற்கை வளமுள்ள நாடு விவசாய நாடு என நான் பாடசாலை காலத்தில் கற்றாலும் இலங்கையின் உற்பத்தியில் விவசாயம் வெறும் 7% தான் காணப்படுகிறது. மேலும் ன கைத்தொழில்  25% – 35% ஆகவும், சேவை மற்றும் சுற்றுலா  45% – 60% ஆகவும் காணப்படுகிறது. ஆனால் நாம் நமது பொருளாதார கட்டமைப்பில் விவசாயத்திற்கான பங்களிப்பை அதிகரிக்க வேண்டும்.

நாம் தற்போது பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்க அரசியல்வாதிகள் ஊழல்கள் அடிப்படைக் காரணமாக இருந்தாலும் உடனடிக் காரணியாக ஈஸ்டர் தாக்குதல் மற்றும் கொரோனா பரவலைத்ததான் குறிப்பிட வேண்டும்.

ஈஸ்டர்தாக்குதலுக்கு முன்னர் இலங்கைக்கு மாதாந்தம் சராசரியாக  194,500 சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். அதுவே ஈஸ்டர் தாக்குதலை தொடர்ந்து சராசரி சுற்றுலா பயணிகள் வருகை 126,200 ஆக குறைவடைந்தது. மேலும் கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா பயணிகளின் மாதாந்த வருகை 16,208 ஆக குறைவடைந்துள்ளது. இறுதியாக கோட்டா கோ ஹோம் ஆர்ப்பாட்டத்திற்கு முந்தைய மாதத்தில் 106,500 பேர் வருகை தந்து கொரோனாவிற்கு பின்னர் அதிக சுற்றுலா பயணிகள் வருகை தந்த மாதமாக 2022 மார்ச் பதிவு செய்தாலும் நாட்டின் அரசியல் ஸ்த்திரனத்தன்மை இன்மை காரணமாக ஏப்ரலில் 62,980 ஆக குறைவடைந்துள்ளது. இது 59% வீழ்ச்சியாகும்.

நாட்டில் சுற்றுலாத்துறையை மையமாகக் கொண்டு தொழில்வாய்ப்புகள் அதிகளவில் காணப்பட்டாலும் அவர்களுக்கான வருமானம் சுற்றுலா பயணிகளின் வருகையிலே தங்கியுள்ளது. ஆனால் நாட்டின் தேசிய பாதுகாப்பை அச்சுறுத்தும் விதமான சுற்றுலா பயணிகளை இலக்காக கொண்ட குண்டுத்தாக்குதல், உலகளாவிய கொரோனா பரவல், அரசியல் ஸ்தீரனத்தன்மை இன்மை என்பன நாட்டின் சுற்றுலா பயணிகள் வருகையில் வீழ்ச்சியை ஏற்படுத்தின. இவை நாட்டின்  2020 ஆம் ஆண்டு நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட காரணமாக அமைந்தது.

இது நாம் நமது பிரதான வருமான மூலமாக சுற்றுலாவை மாத்திரம் மையமாகக் கொண்டு செயற்பட்டதன்  விளைவாகும்.

எனவே நாம் சுற்றுலா வெளி நாட்டு முதலீடுகளுடன் அவற்றுக்கு மேலதிகமாக விவசாயத்திலும்  அதே அளவு கரிசணை செலுத்த வேண்டும். ஏனெனில் இலங்கை ஒரு இயற்கை வளமுள்ள அதிலும் மரக்கறி, கிழங்கு, அரிசி போன்றவற்றை அறுவடை செய்வதற்கு தேவையான காலநிலை மற்றும் மண்வளங்களை கொண்ட நாடு. ஆனால் நாம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையவில்லை குறைந்தபட்சம் அரிசி உற்பத்தியிலும் தன்னிறைவு அடையவில்லை. தற்போதும் நாம் நாட்டில் அரிசி பற்றாக்குறை ஏற்படும்பாது இறக்குமதி செய்கின்​றோம். மறுபுறம் பிரதான வருமான மூலங்களாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை எதிர்பார்த்தவர்களாகவும், மேலும் உற்பத்திக்கு பதிலாக இறக்குமதியை சார்ந்தவர்களாகவும் தொழிற்படுகின்றோம்.

நாடு எதிர்காலத்தில் நிலைத்து நிற்கும் பொருளாதார அபிவிருத்தி அடைவதாக இருந்தால் ஆரம்பமாக அடிப்படைத் தேவையான உணவை உள்நாட்டில் முழுமையாக உற்பத்தி செய்து தன்னிறைவு அடைய வேண்டும். மேலும் அனைத்திற்கும் இறக்குமதியை சார்ந்திருக்காமல் உற்பத்தியை நோக்கி நகர வேண்டும். எனவே நாம் நமது பொருளாதார கட்டமைப்பில் சுற்றுலாத்துறைக்கான பங்களிப்பை போன்றே விவசாய துறைக்கான பங்களிப்பை அதிகரிக்க நடவடிக்கை வேண்டும்.

ஆனால் இலங்கையர்கள் குறிப்பாக இளைஞர்கள் விவசாயத்துறைக்கு ஆர்வம் காட்டுவதில்லை. ஏனெனில் நிலையான வருமானமின்மை மற்றும் விவசாயம் செய்து அறுவடை செய்யும் வரையான காலத்தில் நிலையான வருமானமின்மையால் விவசாய, வீட்டு செலவுகளுக்கு நுண்கடன்களை நாட வேண்டியுள்ளது. நாடாளாவிய ரீதியில் நுண் கடன் திட்டத்தில் பாதிக்கப்பட்டு 300 இற்கும் மேற்பட்ட தற்கொலைகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனவே அதற்கான மாற்றுத் திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக வயலிலும், தோட்டங்களிலும் வேலை செய்யும் விவசாயிகளுக்கு​​ அரசு மூலம் மாதச் சம்பளம் வழங்கும் விதமாகவும் விவசாயிகளின் உற்பத்தியை அரசாங்கம் எடுத்து விற்பனை செய்வது போல் கட்டமைப்பு மாற்ற வேண்டும். ஏனெனில் மாதா மாதம் சம்பளம் பெறும் நிலை இருந்தால் விவசாயத்தில் ஆர்வமாக ஈடுபட விரும்புவர்.

என​வே கோட்டா கோ கம மூலம் அரச நிர்வாகம் மற்றும் பொருளாதார கட்டமைப்பில்மேற்படி மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு  மூலோபாய ரீதியில் திட்டமிட்டு ஆர்ப்பாட்டத்தை அறிவியல் ரீதியாக தொடர்வோம்.

பசி வந்தாலும் பகுத்தறிவுடன் வாக்களிக்க வேண்டிய மக்கள்

பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பது ​ஒரு தமிழ்ப் பழமொழியாகும். பசியால் வாடுபவர் பல சிறப்புகளை இழக்க நேரிடும் என்பதை இப்பழமொழி குறிக்கிறது. அதாவது பசிவந்து அந்த பசியை தீர்க்க உணவு கிடைக்காத மனிதன் தன்னிடமுள்ள மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், முயற்சி, தாளாண்மை, காமம் ஆகியவற்றை இழந்துவிடுவர்.

இலங்கையில் வாக்களிக்கும் பெரும்பாலனோரின் நிலை பசி வந்து பத்தும் பறந்த நிலையில் வாக்களிப்பதாகும்.

இலங்கையில் 92% கல்வியறிவு பெற்றாலும், பணவீக்க வீதம் தற்போது 21.5% ஆககாணப்படுகின்றது. பண வீக்கம் அதிகரிக்கும் போது பொருட்களின் விலை அதிகரித்து செலவு அதிகரிக்கின்றது. இதனால் வறுமை ஏற்படுகிறது. இந்த வறுமை (பசி)தான் இலங்கையரிடம் கல்வியறிவு இருந்தாலும் இறுதி தருணத்தில் அறிவு, கல்வி இழந்து பொருத்தமற்றவர்களுக்கு வாக்களிக்கும் நிலையை உருவாக்குகின்றது.

ஏனெனில் கிடைத்த வீடுகளுக்கும், உணவுப் பொதிகளுக்கும், மது போத்தல்களுக்கும், தொழிலுக்கும் நன்றிக்கடன் செலுத்தும் விதமாக பலர் வாக்களித்தமை வாக்காளர்களின் கருத்துக் கணிப்புகள் ஊடாக வெளியாகியுள்ளது.

கடந்த திங்கட் கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மஹிந்த அணி சார்பாக வந்த ஒருவர் சமூர்த்தி அதிகாரி தன் சமூர்த்தி கொடுப்பனவை இடைநிறுத்துவதாக அச்சுறுத்தியதன் காரணமாக வந்ததாக குறிப்பிட்டார்.

இது பற்றி பாமர மக்களுக்குதெளிவு படுத்தும்பொறுப்பு கற்ற சமூகத்திற்கும் நீதியான ஆட்சியை உருவாக்க துடிக்கும் இளந் தலைமுறைக்கு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையை பொறுத்தவரையில் பொதுமக்கள் குறுங்கால சிந்தனையுடையவர்களாகவும், அதிக மதம் சார்ந்த உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவர்களாகவும் உள்ளனர். எனவே ஒவ்வொரு அரசியல்வாதியும் பொதுமக்களிடம் உள்ள இந்த பலவீனத்தை பயன்படுத்தி மதவாதம், இனவாதம் பேசி வாக்குகளை பெற்று அரசியலுக்கு வந்து சுகபோகம் அனுபவிக்கின்றனர்.

பொதுமக்களே! உங்கள் உணர்வுகளை மூலதனமாக கொண்டு பலர் ஆட்சி செய்யும் நாடு இலங்கை. எனவே உணர்வுகளுக்கு முன்னால் பிரச்சினையின் போது அறிவியலுக்கு முதலிடம் வழங்கி இலங்கையை முன்னேற்ற முயற்சிப்போம்.

தேர்தல் என்பது செய்த சேவைகளுக்கும், வழங்கிய வெகுமதிகளுக்கும்  செலுத்தும் நன்றிக் கடனல்ல, தலையிடிக்கு மாற்றும் தலையணையுமல்ல, வெட்டினாலும் பச்சை என மாறதிருப்பதுமல்ல. மாறாக எதிர்காலத்தில் சேவைகள் செய்ய வழங்கும் பொதுமக்களின் அனுமதியாகும்.

அவ்வகையில் நாம் ஓர் அரசொன்றை (ஜனாதிபதி, பிரதமர், பாராளுமன்றம்)  அமைப்பதினூடாக அடைய எதிர்பார்க்கும் இலக்குகள், உள்ள பிரச்சினைகள் மற்றும் தீர்வுகளை இனங்காண வேண்டும்.

நிலைத்து நிற்கும் அபிவிருத்தி, நிறை தொழில் மட்டம், பொருளாதார ஏற்றத்தாழ்வை குறைத்தல், தனிமனித சுதந்திரம், கல்வி அபிவிருத்தி, பணவீக்கத்தை கட்டுப்படுத்தல் அல்லது 6% இதற்குள் பேணுதல், மதக் கலாசார சுதந்திரம், ஐக்கியம், இன மத பேதமின்றி நீதியை நிலைநாட்டுதல் என்பன ஓர் அரசாங்கத்தின் இலக்குகளாகும்.

நன்றிக் கடனாகவும், விடாப்பிடியாகவும், மாற்றுத் தீர்வு மறு கட்சி என்றும் வாக்களிக்கும் கலாசாரத்திலிருந்து மீள வேண்டும். அத்துடன் பசி வந்தாலும் பகுத்தறிவுடன் வாக்களிக்க வேண்டும்.

குறிப்பு​ இங்கு முன்வைக்கப்பட்டுள்ள கருத்துகள் எந்தவொரு அமைப்பின் உத்தியோகபூர்வ கருத்தல்ல. எழுத்தாளர் தனக்கு அறிமுகமானவர்களிடம் பெற்றுக் கொண்ட கருத்துக்களை​ கொண்டு தொகுத்தாகும்.

Ibnuasad