ஊனமான உள்ளங்கள் ~ தொடர் 09

”ஓ… புள்ள இந்த மாசம் தான்… தெரீம் தானே இப்பேக கலியாணத்த மிச்சம் காலத்துகு பேசி வெச்சேலா…. எப்டி சரி பிஞ்சி பெய்த்திடிய… அதான்… இவங்கட வாப்பாவே கேட்ட அவசரமாக கலியாணத்த நடத்தோம் என்டு…”

சித்தியும்மா படபடப்புடன் கூறிவிட்டு நகர்ந்தார். அவரது முகத்தில் சந்தோசக்கலை எட்டிப்பார்த்தது.

‘யா அல்லா… ஏன்ட உம்மா, வாப்பாட மொகத்துல இந்தமாய் சந்தோசம் எப்போம் இருச்சோணும்’ பர்ஹாவின் மனது இறைவனை வேண்டியது.

”சரி… சரி…. எல்லம் ஹய்ர் தான்… அல்லா எந்த நாடீச்சோ அது தான் நடக்கும்…” சிப்னா அவளின் கைகளைப் பற்றிக் கொண்டு கூறினாள்.

மெல்லிதாக புன்னகையை உதிர்த்தவள்,
”ஓஹ்… எல்லம் நஸீப் தான்…”

” சரி…. நீ அந்த மாப்ளேட பொட்டோ பாத்தா? ”

இந்தக் கேள்வியை எதிர்பாராதவள் போல பார்க்க,

”பர்ஹா… எந்தேன் முழிச்சிய… பெஸ்டுகு அத பாரு…”

”ஓ… நீங்க செல்லியது சரி தான்… ஆனாலும் ஏன்ட உம்மவாப்பாட மேல எனக்கு நம்பிக்க…. அது தேவில்ல…”

”போடி… ஒன்னோட பேசி தப்ப ஏலா…. நான் பெய்ட்டு நாளேக்கி வாரன் அப்ப…. ஒகட உமும்மா என்ன கண்டல் பலாய் தான்…” என்று கூறியபடியே சென்ற சிப்னாவைப் பார்க்க பாவமாக இருந்தது.

”தாத்தா… வாப்பா அவர்ட பொட்டோ காட்டின… இந்தா பாரு….”

பரீனா முகம் முழுக்க சிரிப்பை பூசிக்கொண்டு அந்த தொலைபேசியை அவளின் முன் நீட்டினாள்.

”போடி… நான் நேர்லயே பாத்துகொலியன்…”

”ஓ…. தாத்தாக்கு வெக்கத்த பாருவே…. சரி.. சரி… நானே செல்லியன்… அவர் வந்து பெரிசா ஒசரமில்ல ஆனாலும் பரவாயில்ல…”

அவளது வாயில் கையை வைத்தவள்,
”போதும்டீ…. இன்னும் பேசாம போவே….”

”ஓகே… நான் பேசல்ல… நீயே பாத்துக்கோ…. ”
பொய்க்கோபம் காட்டியபடியே சென்ற பரீனாவைப் பார்த்துக் கொண்டு நின்றவள், ஏதோ ஞாபகம் வரவே கண்கள் கலங்கியபடியே நின்றாள்.

”புள்ள எந்துகன் அழுகிய… ஒனக்கு… ஒனக்கு இந்த கலியாணத்துல இஷ்டமில்லயா? ”

சித்தியும்மாவின் குரல் கேட்டு திடீரென மயக்கம் தெளிந்தவள் போல,

”அப்டி ஒன்டுமில்ல உம்மா… நீங்க போங்கோ…”

மெதுவாக அவளது தோள்களைப் பற்றி வாசலுக்கு அழைத்துக் கொண்டு சென்றாள்.

அங்கே பர்ஹாவின் வாப்பா நீண்ட யோசனையில் இருப்பது தெரிய,

”வாப்பா…. வாப்பா.. ”

”ஓஹ்…. வா புள்ள…” என்று கூறியவரின் முகத்தில் மகிழ்ச்சிக்குப் பதிலாக வேறொரு உணர்ச்சி இருப்பது போலுணர்ந்தாள் பர்ஹா.

தொடரும்…