போதை விழிப்புணர்வா? போதை விளம்பரமா?

இன்று ஒரு ஜும்ஆ உரையை கேட்டேன். போதை பாவனை தொடர்பான குத்பா. அதனை கேட்கும்போது போதை விழிப்புணர்வு உரையா? போதை விளம்பர உரையா? என்ற சந்தேகம் எழுந்தது என்னில். Prevention என்ற பெயரில் Promotion செய்தார் பேச்சாளர்.

பூரண தெளிவின்றி நான்கு இணைய கட்டுரையை வாசித்துவிட்டு புனாத்தியது புரிந்தது. மேலும் கண்ட கண்ட பேச்சாளர்கள் பேசிய கட்டுக்கதை பேச்சையெல்லாம் கேட்டுவிட்டு கதையளந்தார்.

இருக்கின்ற எல்லா போதை பொருளின் பெயரையும் புட்டு புட்டு வைத்தார். அங்கு இருந்த சிறுவர்கள், முதியோர் வரைக்கும் மனனம் ஆகும்வரை மீண்டும் மீண்டும். தொழுகை முடிந்ததும் மக்கள் சுப்ஹானல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் சொல்லி இருப்பார்களோ, போதை பொருள்களின் பெயரை சொல்லி இருப்பார்களோ தெரியவில்லை.

இதில் Latest Updates வரை கொடுக்கிறார். நவீன போதை பொருள்களை கூட பெயரிட்டு அறிமுகம் செய்தார். இன்னும் பல கருத்துக்கள் பூரண தெளிவின்றி போதை பாவனையை மறைமுகமாக தூண்டும் விதத்தில் அமைந்தது.

_____ எனும் இந்த போதையை பாவித்தால் நான்கு மனைவியுடன் உடலுறவில் ஈடுபட்ட இன்பம் கிடைக்கும்”

——- எனும் இந்த போதை மனக்கவலையை போக்கும்”

இவ்வாறான வார்த்தைகள் மக்கள் மனதில் மறைமுகமாக போதை பொருள் மீதான நாட்டத்தை ஏற்படுத்தும் வாய்ப்புக்கள் உண்டு என்பதை தெரிந்து பேசுகிறார்களா? இல்லை எனின் அந்த புரிதலேனும் இவர்களுக்கு இல்லையா?

இவற்றுக்கு நடுவில் மருத்துவ தகவல்கள் வேறு. பேசியது இருக்கட்டும், போதையின் எதிர்மறை விளைவுகளை ஒரு பேப்பரை வைத்துக்கொண்டு பட்டியல் வாசிக்கிறார்.

போதை பற்றிய கதையாடலில் ஆக்ரோஷம், அதன் விளைவுகள் பற்றிய பேச்சில் பட்டியல். மக்கள் மனதில் எதோ ஆழமாக பதியும்.

வைத்தியர்கள், கவுன்சிலர்கள் இவ்விடயத்தில் பெரிய அளவில் பங்களிக்க முடியாதாம். என்ன என்னவோ பேசுனார்.

அந்த குத்பாவை ஒரு ஆரம்பகட்ட போதை பாவனையாளர் கேட்டால்; எப்படி எப்படி எல்லாம் திருட்டுத்தனமாக போதை பாவிக்கலாம் என்ற வழிகாட்டலை பெற்று இருப்பார். அவ்வளவு பிழையான அணுகுமுறைகள் அந்த பேச்சில் காணக்கிடைத்தது.

ஓர் உளவியல் ஆலோசகராக இதுபோன்ற நிகழ்வுகள் நடத்தும் அனுபவம் எனக்கும் உண்டு. போதை பொருள் பாவனை தொடர்பான விளிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துதல் என்பது கத்திமேல் நடக்கும் காரியம்.

நாம் பகிரும் தகவல், பேசும் விதம், பேசும் தொனி, முன்வைக்கும் ஆக்கங்கள் என அனைத்திலும் மிக்க கவனமாக இருக்க வேண்டும். தவறும் பட்சத்தில் நமது விளிப்புணர்வே ஓரிருவரின் வழிதவறலிற்கு காரணமாகிவிடும்.

ஓர் சமூக பிரச்சினையை கலைப்பதற்கும், கதைப்பதற்கும் வழிமுறைகளும், நுணுக்கங்களும் உண்டு. அவை தெரியாமல் முற்படுவது அபாயம்.

பள்ளிவாயில்கள் இதுபோன்ற சமூக பிரச்சினைகளை கலைக்க முற்படுவது ஓர் ஆரோக்கியமான விடயம். இருந்தும் தகுந்த நபர்களை அடையாளமிட்டு குறித்த பணியை செய்வது சமூக கடமை. தெளிவும், அறிவுமின்றி சத்தமாய் பேசுபவர்கள் சில சமயம் சமூகத்தின் பேராபத்தாகவும் மாறிவிடுவர் என்பதற்கு குறித்த குத்பா தகுந்த உதாரணம்

Fazlan A Cader

Tags: