ஊனமான உள்ளங்கள் ~ தொடர் 16

வீட்டின் முன் கேட்ட ஓசைகள் அவர்கள் வந்துவிட்டனர் என்பதை உணர்த்தின. பர்ஹாவின் மனது படபடத்தது. முகத்தில் துளிர்த்த வியர்வைத் துளிகளை மெல்லத் துடைத்துக் கொண்டாள். அவளைப் பார்த்து புன்னகைத்த சிப்னா,

”ஒன்டும் பயப்புடாத… எல்லம் ஹைர்ஆ முடியும்”

”நீங்க வேற… அவளுக்கு பயமன்டியதே இல்ல… சும்ம சீன் காட்டிய…” பரீனா கூறியதுமே,

”போதும்…. போதும்…. வெளாடினது அவங்க வாற…” சித்தியும்மா பரபரப்பாக கூறிவிட்டுச் சென்றாள்.

மாப்பிள்ளை வீட்டிலிருந்து வந்த பெண்கள் பர்ஹாவின் அறையில் உட்கார்ந்து கொண்டனர்.

வந்தவர்களுக்கு முகமன் கூறி வரவேற்றவள் அமைதியாக அமர்ந்து கொண்டாள். படபடத்த மனதை அடக்கிக் கொண்டவளை நோக்கி அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறினாள்.

சற்று நேரத்தில் அவர்களில் ஒருவர்,

”சரி…. சரி… பர்ஹான வரச்செல்லோமே ”

மற்றவர்கள் அந்த அறையிலிருந்து மெல்ல அகன்று சென்றதும் அவளின் உள்ளத்தில் இனம் புரியா உணர்வு தலைதூக்கியது. தலையைக் குனித்துக் கொண்டு கால்விரல்களால் அர்த்தமற்ற கோடுகளை வரைந்து கொண்டிருந்தாள். ஆள் அரவம் கேட்கவே நிமிர்ந்து பார்த்தவள்,

”அஸ்ஸலாமு அலைக்கும்” என வந்தவனை வரவேற்றாள்.

”வஅலைக்குமுஸ்ஸலாம்” எனக்கூறியபடி அமர்ந்தவனை ஓரக்கண்களால் பார்த்தாள். சற்று நேரம் நிலவிய மௌனம் யுகங்களாக நீண்டது அவளுக்கு.

”ஒங்களுக்கு எந்தயாவது செல்லதுக்கு ஈச்சா?”

அவனது கேள்வி மௌனத்தைக் கலைக்கவே, ‘இல்லை’ என்பதுபோல் தலையாட்டியவள்.

”ஒங்களுக்கு செல்லதுகீச்சா?”

கண்களை நேராகப் பார்த்தபடி,

”ஓ… ஒருவிசயம் ஈச்சி… அதுவந்து…. எனக்கு ஏற்கனவே எங்கேஜ் ஆகீந்த அது இல்லாபெய்த்த…. ஒங்களுக்கு தெரீம் தானே?”

இந்தக் கேள்வியை அவள் சற்றும் எதிர்பார்க்காததால், புருவங்களை சுருக்கிக் கொண்டு ஏதோ யோசனையிலிருப்பதைக் கண்டவன்,

”இதபத்தி ஒங்கட பேரன்ஸ்கு தெரீம்”

அவளது இதயம் எங்கோ இறங்கிக் கொண்டிருந்தது. அது ஓவென கதறத் தொடங்கியதை அறிந்தவள் சட்டென தங்கையின் நிலையை எண்ணி அந்த எண்ணத்தை கட்டுப்படுத்திக் கொண்டாள்.

”ஆ…. ஓ… சென்ன எனக்குதான் மறந்து பெய்த்த…” புன்னகையை வரவழைத்துக் கொண்டாள் அவள்.

தொடரும்.
M.R.F Rifdha…..

Tags: