ஏங்கிய நெஞ்சத்துடன் நாநாவிற்காக (ஹசன் அய்யூப் ரஷாதிக்கு) சில வரிகள்
உதிர்ந்த பூவிற்காக
கவி எழுதுவது கடமையல்ல,
கவியாக அல்ல
உள்ளத்தின் கண்ணீர் வரிகளாக
மறைந்தும் மறவா மாமனிதராய்
மனித மனங்களில்
நீர் வாழ வேண்டும் என்பதற்காய்
கடைசித் தங்கையாய்
என் அகவரிகள் உமக்கு சமர்ப்பணம்
ஜமாதுல் அவ்வல் பௌர்ணமி அன்று
பௌர்ணமியாய் மிளிர்ந்தது உம் பூமுகம்
அந்த நாள் அன்றைய நாள்
இருண்ட நாள்
எம்மை கடந்து சென்ற அந்நாளில்
ஏற்றுக்கொள்ள முடியாத
அச்செய்தி கேட்டு உடைந்து
தூள் தூளாய் சிதறிப்போனேன்.
இன்றும் ஏற்றுக் கொள்ள முடியாமல்
ஏங்குகிறது உள்ளம்
எனக்கான காண்ணணாய்
காப்பாளனாய் தந்தையாய்
வழிகாட்டியாய் சேவகனாய்
அழியா நினைவில் அனைத்தும்
கடிந்து பேசாத உம் நா
என் சமையலில் குறையிருந்தும்
குறை கூறா உம் வாய்
தடியெடுக்காத உம் கைகள்
சகிப்புத்தன்மையுடன் கூடிய
அண்ணல் நபியின் பண்புகள்
பெற்ற அண்ணணாய்
நம் தந்தை வழிகாட்டிய
வாழ்வை அழகாய் வாழ்ந்தீர்
தஹஜ்ஜத் முதல் வித்ர் வரை
கலந்து வாழ்ந்தாலும்
கரைந்து போகாத பக்குவம்
குழந்தைகளுடன் குழந்தையாய்
கொஞ்சி விளையாடும் அழகோ
கண்கள் மறைக்கா அழகு
உன் இங்கிதமோ
இயல்பாக தோன்றியதல்லவோ
வெள்ளி அன்று
குத்பாவிற்கு தயாரானதை
உம்மாவிடம் அறிவித்திட
அழைபேசியில் அழைத்து
தாயின் கையேந்துதலுடன்
மிம்பர் ஏறிய
உம் அழகிய நாட்கள்
வாப்பாவின் இறுதித் தருணத்தில்
இறை பாதையில் இருந்திட்டீர்
பொறுமை எனும்
கேடயம் ஏந்தியவராய்
தாய்க்கு பணிவிடை செய்து
திருப்தியடைந்த ஆன்மாவாய்
விண்ணுலகம் பறந்தீர்
உம் வருகைக்காய் காத்திருந்து
உம் பையை புரட்டி தேடிய
நினைவுகளை மீட்டிப் பார்க்கிறேன்
ஏக்கம் நிறைந்த உள்ளத்துடன்
நெஞ்சம் தாங்கவில்லை
நீ இனி வரமாட்டாய் என
நினைக்கும் போது
அறியா வயதில்
அநாதையாகிய என்னை
சீராக்க பாடுபட்டவர்களில்
நீரும் ஒருவர்
உமக்கான பிரார்த்தனை என்றும்
என் மரணம் வரை
பெரியாணா!
இத்தருணம்
நம் வாப்பாவுடன்
கை கோர்த்து கதை பேசி
மகிழ்ந்து இருப்பீர்
எம்மை தவிக்க விட்டவராய்
கனிசமானோரின் கண்கள்
கண்ணீரை கசிய
சிறப்பாய் விரைந்தீர்
சிறப்பான வாழ்வுக்காய்
உம் மறுமை வாழ்வு
சிறப்படைய கையேந்தியவளாய்
முற்றுப்புள்ளி இடுகின்றேன்
உம் மறைவை தாங்கா தங்கையாய்
யா அல்லாஹ் நபிமார்களுடன்
சுவனத்தில் வாழும்
பாக்கியத்தை வழங்குவாயாக