உலகின் தலைசிறந்த ஆசிரியர்-முஹம்மது நபி (ஸல்) அவர்கள்

  • 77

நம் வாழ்வில் மிக அதிகமான அளவு தாக்கம் செலுத்தக் கூடியவர்கள் என்றால் அது நம் ஆசிரியர்கள் தான். முதுமையை அடைந்தாலும் நமக்கு அ, ஆ சொல்லித் தந்த பாலர் பாடசாலை ஆசிரியர்களை நாம் ஒரு போதும் மறவோம். நமது சிறு வயது முதல் நாம் வளரும் வரையுள்ள நமது வாழ்க்கைப் பயணத்தில் எண்ணிலங்காத பல ஆசிரியர்களின் வழிகாட்டல்களை நாம் பெறுகின்றோம்.

உதாரணமாக உயர்நிலைப் பள்ளிக் கணித ஆசிரியர் நமது அட்சர கணிதம் தொடர்பான அறிவை செம்மைப் படுத்த உதவியிருப்பார் அல்லது கல்லூரிப் பேராசிரியர் விவாத நுணுக்கங்களைக் கற்றுத் தந்திருப்பார். இவ்வாறு நமது இந்த உலகத்தின் இருப்பில் நமது கல்விப் பயணத்தில் துணை நின்ற ஆசிரியர்களின் செல்வாக்கு மிகவும் அதிகமாகவே காணப்படுகிறது.

இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் மனித சமுதாயத்தின் ஆன்மீகக் கல்வியின் அத்திவார்த்தை இட்டவர் எழுதப்படிக்கத் தெரியாத உம்மி நபியான முஹம்மத் (ஸல்) அவர்களே. ஏக இறைவன் அவரைத் தனது இறுதித் தூதராகவும் முஸ்லிம்களுக்கான தலை சிறந்த ஆசிரியராகவும் தேர்ந்தெடுத்து கண்ணியப் படுத்தினான்.

முஹம்மத் (ஸல் ) அவர்கள் முழுமனித சமூகத்திற்கும் வழிகாட்டியாக அருளப்பட்ட அல்குர்ஆனை ஓதிக்காட்டி எடுத்தியம்பும் பணியோடு தன் பயணத்தை மேற்கொண்டார்கள். இருப்பினும் அவர் ஒரு சாதாரண ஆசிரியர் என்ற வட்டத்தினுள் இருக்கவில்லை. உண்மையில் இந்தப் பூவுலகில் இன்று கூட தாக்கத்தை உணரக்கூடியதான சிறந்த செம்மையான கல்வி முறை ஒன்றைத் திட்டமிட்டு 1400 வருடங்களுக்கு முன்னதாகவே வழங்கிச் சென்றுள்ளார்கள் உத்தமத் தூதர் நபி (ஸல்) அவர்கள்.

நபி (ஸல்) எவ்வாறு ஒரு சிறந்த ஆசிரியராக வாழ்ந்தார்கள் அல்லது ஒரு சிறந்த ஆசிரியர் எவ்வாறெல்லாம் இருக்க வேண்டும் என்பதற்கு கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வில் எண்ணிலடங்காத பல வழிமுறைகளயும் உதாரணங்களையும் காணலாம். அவற்றில் சில…

எந்த ஒரு மாணவரையும் புறக்கணிக்கவில்லை.

உலகம் முழுவதும் நன்றாகப் படிக்கின்ற மாணவர்களை படிப்பில் பின் தங்கிய மாணவர்களை விட்டும் அப்புறப்படுத்துவது ஒரு பொதுவான விதியாக இருக்கின்றது. கடைசிப் பந்தி மாணவர்களுக்குக் குறைவான சந்தர்ப்பங்கள் வழங்கப் படுவதால் அவர்களின் மூளையின் குறை வளர்ச்சியில் அது செல்வாக்குச் செலுத்துகின்றது. அதேவேளை அனைத்துவிதமான வாய்ப்புக்களையும் பயன்படுத்தும் சந்தர்ப்பம் நன்றாகப் படிக்கின்ற மாணவர்களுக்குக் கிடைக்கின்றது.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் திறமை அடிப்படையிலோ அல்லது சமூகத்தில் காணப்படுகிற இதர வர்க்கப் பாகுபாட்டு முறைகள் அடிப்படையிலோ மாணவர்கள் மத்தியில் ஒருபோதும் பாகுபாட்டை ஏற்படுத்தியது கிடையாது. அவ்வாறே அவர் யாரையும் இஸ்லாத்தை விட்டு வெளியேற்றுவதற்கோ அல்லது தவிர்ந்து நடப்பதற்கோ ஒருபோதும் முயற்சி செய்தது கிடையாது. மாறாக அனைத்தையும் உள்ளடக்கிய உன்னதமான ஒரு செய்தியை உலகுக்குச் சொன்னார்கள்.

முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்… அல்லாஹ்வின் மீது ஆணையாக… அவன் உம்மைக்கொண்டு ஒருவரை இஸ்லாத்தின் பக்கம் வழிகாட்டினால் அது உமக்கு சிவப்பு ஒட்டகைகளை விட சிறந்ததாகும்.(புஹாரி)

இந்த ஹதீஸின் மூலம் மற்றவர்களை இஸ்லாத்தின் பால் எவ்வாறு கவர வேண்டும் என்பதற்கான உறுதியான உதாரணம் ஒன்றைச் சுட்டிக் காட்டுகிறார்கள்.

தலை சிறந்த பேச்சாளர்

நம்மில் பலரும் நம் வாழ்வில் கற்பிப்பதை உள்வாங்குவதற்குக் கடினமான தெளிவில்லாமல் பேசக்கூடிய அல்லது வேகமாகப் பேசக்கூடிய ஒரு ஆசிரியரையாவது கடந்து வந்திருப்போம். ஏன் இன்று கூட அதிகமான ஆசிரியர்கள் தான் கற்பிக்கும் வேகத்தை கவனிக்கத் தவறி விடுகிறார்கள். ஒரே பாடவேளையில் தன்னால் முடியுமான அளவு பாட அலகுகளை மாணவர்களுக்குத் திணிக்கிறார்கள்.

முஹம்மத் நபி (ஸல்) அவர்களைப் பொறுத்தவரையில் தன் கற்பித்தல் நடவடிக்கைகளில் மிகவும் நுட்பமாகவே நடந்துகொண்டுள்ளார்கள். அவர்கள் ஒருபோதும் கற்பிப்பதில் அவசரப்பட்டது கிடையாது.

அண்ணலது அன்புக்குரிய மனைவி ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் நபி (ஸல்) அவர்கள் பேசும் போது யாராவது அவர் பேசும் சொற்களை எண்ணினால் எண்ணி முடித்து விடலாம். (புஹாரி)

மேலும் நபி (ஸல்) அவர்கள் முக்கியமான விடயங்களை மூன்று முறை திரும்பத் திரும்பக் கூறுவார்கள். நபி (ஸல்) அவர்கள் பேசிய பேச்சுக்களும் கற்பித்த பாடங்களும் தெளிவாக இருந்தன. அது ஸஹாபாக்களுக்கு தங்களின் ஈமானை சீர் செய்வதற்கும் அல்குர்ஆனை உள்ளங்களில் பசுமரத்தாணி போல் பதிய வைப்பதற்கும் பெரிதும் உதவியாக இருந்தது.

நபியவர்களது போதனைகளின் முழுமையானது ஒரு விடயத்தை பல முறை கூறி தமது மாணவர்களுக்கூடாக வீடுகளுக்கு நகர்த்துவதில் இருக்கின்றது. ஒரு விடயத்தை திரும்ப திரும்ப மீட்டிக் கூறுவது சிறந்த கற்றல் வழிமுறை ஆகும்.

உதாரணப் புருஷராக வாழ்ந்து காட்டினார்கள்

நபியவர்களை தனிச்சிறப்பு மிக்க ஆசிரியராக மிளிர வைத்தது அன்னாரது கற்பிக்கும் பாடத்தின் கதாப்பாத்திரமாகவே வாழ்ந்து காட்டிய உன்னதமான பண்புதான். அவர் எப்பொழுதும் தன் சகாக்களுக்கு ஓரிறைவனைப் பற்றியும் இஸ்லாத்தின் அடிப்படையிலும் மறுமை வாழ்வு தொடர்பான சிந்தனையுடனும் வாழ்வது தொடர்பாகவே கற்பித்தார்கள்.

தன் வாழ்வின ஒவ்வொரு அசைவிலும் தான் கற்பித்தவற்றை செயல்படுத்தினார்கள். அது அன்னாரது ஸஹாபாக்களுக்கு தன் வாழ்வில் அல்குர்ஆனையும் சுன்னாவையும் செயல்படுத்துவற்கு இலகுவாக அமைந்தது. அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனிலே பின்வருமாறு கூறுகின்றான்.

அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் நினைவு கூறுவோருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.(அல் குர்ஆன் 33:21)

நபி (ஸல்) அவர்கள் அல்குர்ஆனின் ஒவ்வொரு அம்சங்களையும் தன் வாழ்வின் சிறிய சிறிய விடயங்களிலும் பின்பற்றாமல் இருந்திருந்தால் அது ஸஹாபாக்களின் நம்பிக்கையில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கும்.

கஷ்டங்களின் போது பொறுமை காத்தல்.

எத்தனை தடவைகள் குறிப்பாக அமெரிக்காவின் உள் நகரப் பள்ளிக் கூடங்களில் ஆசிரியர்கள் கடினமான மாணவர்களைப் பற்றிப் புலம்புவதையும் அவர்களை வெளியேற்றிய சம்பவங்களையும் கேள்விப்பட்டிருக்கின்றீர்கள்.

நபியவர்கள் நபித்துவத்தின் ஆரம்பகால கட்டத்தில் இஸ்லாத்தைப் போதித்ததற்காக எண்ணற்ற துன்பங்களையும் புறக்கணிப்புக்களையும் சந்தித்துள்ளார்கள். அண்ணல் நபிக்கு மக்காவில் தன்னை ஏற்றுக் கொண்ட சிறு கூட்டத்தோடு சேர்ந்து வழிகெட்டவர்களை இஸ்லாத்தின் பக்கம் வழிகாட்டுவதற்கு எடுத்த ஒவ்வொரு முயற்சியிலும் ஏராளமான துன்பங்களையே அனுபவிக்க நேர்ந்தது.

அதே போல் மதீனாவிலும் பல இன்னல்களுக்கு முகம் கொடுக்க நேரிட்ட போதிலும் நபி (ஸல்) ஒரு தடவை கூட தன் பணியை இடைநிறுத்துவற்கு முயற்சிக்கவில்லை. இலக்கை அடைந்து கொள்வதற்குச் செய்யும் அர்ப்பணிப்பு மற்றும் முனைப்பு, இலக்கு பற்றிய ஞானம், பொறுமை, அல்லாஹ்வுக்காக தியாகம் செய்வதற்குக் காணப்படுகின்ற முனைப்பு போன்ற உன்னதமான பண்புகள் தான் அண்ணலை அன்னாரது பணியில் திட உறுதியுடன் செயற்பட உதவியது.

நபி (ஸல்) அவர்கள் தனது சமூகத்துக்கு இஸ்லாத்தை எத்திவைத்த முறை ஏற்படுத்திய தாக்கம் தான் இன்றுவரை நூற்றாண்டுகளைக் கடந்து உலகத்தின் வேகமாக வளரும் மார்க்கமாக இஸ்லாத்தை மாற்றியிருக்கின்றது.

நீங்கள் ஒரு நவ முஸ்லிமாகவோ அல்லது பிறப்பால் முஸ்லிமாகவோ இருக்கலாம் யாராக இருந்தாலும் முழு உலகத்தையும் ஒருங்கினைக்கும் சக்தியாகவும் கல்வியின் ஊடான புரிதலுக்கான ஊக்கியாகவும் இருப்பது அல்லாஹ்வின் அருட்கொடையான அண்ணல் நபி (ஸல்) அவர்களும் அன்னாரது வழிமுறைகளுமாகும் .

சுமையா மீஹான்
தமிழில்: ஆஷிக் பின் இர்பான்

எழுத்தாளரைப் பற்றி ஓரிரு வரிகள்

சுமையா மீஹான் என்பவர் 23 வருடங்களுக்கு முன் இஸ்லாத்தை ஏற்றவர். இவர் வைனஸ்பேர்க் பல்கலைக்கழகப் பட்டதாரி ஆவார். மேலும் இவர் ஒரு ஊடகவியலாளர், மார்கெடெர் மற்றும் தனிப்பட்ட கிரபிக் டிஸைனர் ஆவார். தற்போது வட கலிபோர்னியாவில் வசித்துவருகிறார் .

நம் வாழ்வில் மிக அதிகமான அளவு தாக்கம் செலுத்தக் கூடியவர்கள் என்றால் அது நம் ஆசிரியர்கள் தான். முதுமையை அடைந்தாலும் நமக்கு அ, ஆ சொல்லித் தந்த பாலர் பாடசாலை ஆசிரியர்களை நாம் ஒரு…

நம் வாழ்வில் மிக அதிகமான அளவு தாக்கம் செலுத்தக் கூடியவர்கள் என்றால் அது நம் ஆசிரியர்கள் தான். முதுமையை அடைந்தாலும் நமக்கு அ, ஆ சொல்லித் தந்த பாலர் பாடசாலை ஆசிரியர்களை நாம் ஒரு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *